Friday, 29 August 2025

அந்தக் கருக்கலில்


 அந்தக் கருக்கலில்....


ப.திருநாவுக்கரசு


துறைமுகத்தைக் கழுவி

தொடுவான நெற்றியில்

செஞ்சாந்தில்

ஒரு பொட்டுவைத்துக்கொண்டது

அந்தக் காலை!


தங்கமணற்பரப்பில்

யாசிக்க வெட்கப்பட்டு

அலையும் திருவோடுகளாய்

படகுகள்!


கடைசி உணவுக்குப்பின்

உத்தரவாதமில்லாத

அடுத்த உணவுநோக்கி

உற்சாகச் சிறகைவிரிக்கும்

இருளை அப்பிக்கொள்ளாத கொக்குகள்!


புலால் வாசம் பிடிக்கப்போய்

காற்றில் பரவிய வலை

கடலில் விழுந்து தொலைக்கும்

உயிர்களை அள்ள!


உலகைப் பார்க்க

துள்ளி வெளிப்பட்ட 

சின்ன மீனொன்று

இயந்திரப்படகின்

எரிநாற்றத்தால்

மூக்கைப் பொத்தி

வீட்டுக்குள் ஓடும்

மீண்டும்!


நழுவும் ஆடையை அறியாமல்

உலவும் குழந்தைகளாய்

இரவு முடிந்தது தெரியாமல்

இன்னும்  சில தாரகைகள்!


எப்படியெல்லாமோ

விடிந்து பார்க்கிறது இரவு

தன்னால் முடிந்தவரை!

Saturday, 23 August 2025

சுமிதாவும் குக்கியும்



 







சுமிதாவின் குக்கி

ப.திருநாவுக்கரசு

****************

தொலைக்காட்சிகள் நாய்கள்  தொல்லைதருவதாக கடிபடுவோரின் பதற்றத்தை காட்டி வருகின்றன நாமும் பதறுகிறோம்.

குக்கி தெருவின் சிறார்கள் ஆதரவுதேடி அலைந்துவந்த நாய்க்குட்டிக்கு வைத்த பெயர்.குக்கி வளர்ந்து காளையாகிவிட்டான். கொஞ்சநாளாக பரவி வரும் கடி செய்தி பரவலால் அது நிகழ்ந்தது 

ஊராட்சி வாகனத்தில் பிரியமான ஒரு பிரியமுள்ள நாய் குக்கி பிடிபட்டு தூக்கிப்போடப்படுவதைப் பார்த்து முதியவள் சுமிதா  கதறுகிறாள். குக்கி தன் கடைசி நிமிடம்போல் ஓர் ஏக்கப்பார்வையோடு மறைகிறான். சுமிதாவுக்கு நான்கு நாட்களாக அண்ணம் தண்ணி ஆகாரமில்லை. ஒரு தெருநாயின்மேல் அவள் எதுவும் அவ்வளவு பெரிசாக பற்றுவைக்கவில்லை. தன் தனிவாழ்க்கையில் குக்கிதான் அவள் காலைச்சுற்றியும் வாசற்படியில் முகம்வைத்தும் அவளையே ஏக்கத்தோடு பார்ப்பான். 

அந்த மூதாட்டியின் தனிமையின் காரணங்களை அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பிடிவாதமான துணையாக மாறிவிட்டான். 

அவளுக்குக் காய்ச்சல். அதனால் ஏதும் சாப்பிடவில்லை. அன்று அவன் வாயில்லா ஜீவன் என்று அவள்வைத்த சோற்றை முகரக்கூட இல்லை. சுமிதா தெளிந்தபின்  ஆர்வமுடன் அவளைப் பார்த்தான்.

குக்கியின் கடைசிப்பார்வைதான் சுமிதாவை கண்கசியவைக்கிறது. மேகவெடிப்பு நிலச்சரிவில் நிரந்தரமாக மூடப்பட்ட அவள் குடும்பத்தின்பின் குக்கிதான் கண்முன்னால் உலவிய ஜீவன்.

மண்மூடிய அந்தச் சொந்தங்களைத் தாண்டி கண்சிமிட்டாமல்  வண்டியில் ஏற்றப்பட்ட குக்கியின் அந்தப்பார்வை சுமிதாவை வதைக்கிறது.

கடிகளை முன்னிட்டு அவைகளைப் பிடித்துஒரே குழியில் போட்டு மூடச்சொல்லும் முன் நிலச்சரிவில் பறிபோன சொந்தங்களை நினைக்காமல் எப்படி இருக்கமுடியும்? 

அவள் காய்ச்சல் தெளியும்வரை வயிறை காயவிட்டு வருந்தாத குக்கி அவளைப் பிரிவதால் பெரும்வலியோடு வண்டியில் போகிறான். 

பிடிக்கும் ஊழியர்களைவிடுங்கள் உங்களுக்கு என்ன ஆனது? நீதிமன்றத்தில் முறையிடுகிறீர்கள். உங்கள் முறையீட்டில் குக்கியையும் எழுதுங்கள். 

குக்கி ஒரு தனி உயிரல்ல. குழந்தைகள், இளையர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றர்களின் அருகில் தோழமையுடன் எண்ணற்ற குக்கிககள்! 

வெடிகுண்டுகளைத்தேட உதவும் குக்கிகள் யாருக்காக தேடுகின்றன?

தோழமை, நன்றி, காவல்களை குக்கியிடம் பார்த்தபின் ரேபியசையே சொல்லிச் சொல்லி விடைதேடுகிறீர்கள்! 


Saturday, 16 August 2025

 


பட படப்பு, எரிச்சல், சிடு சிடு, காரணமில்லா ஆத்திரம், கடு கடுப்பு,  கர்வமும் அலட்சியமும், புகைச்சல்...இல்லாத ஒரு தியானம் காலையில் பத்து நிமிடம் போதும்.

 பக்தியைவிட பண்பை வளர்க்கும். பகுத்தறிவாளனும் பக்தனும் பேதமில்லாமல் அமரும் இடம் அது.

 தியானம் மன ஒருமைப்பாடு. அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் கறை போக்கும் சலவைக்கட்டி. 

துருப்பிடிக்காத அன்பாயுதம்! 

அருள்நிறைந்த உள்ளத்தின்அழகுதரும் ஔடதம்! 

பழகுவோம்.

என் பூனக்குத் தெரிந்திருக்கிறது அது!

*****

ப.திருநாவுக்கரசு

Saturday, 2 August 2025

மூடப்பட்ட சப்பரங்கள்

 


                                                       Picture:Abhi-watercolourist

சென்ற ஆடிப்பதினெட்டு முடிந்தும் தெருக்களில் சிலநாள்களுக்கு சப்பரத்தை இழுத்தபடித் திரிவோம். அதன் அலங்காரம் ஒன்று ஒன்றாய் கழன்று விழும். ஒரு நாள் அப்பா இழுத்ததுபோதும் என்று அதன்மேல் ஒரு துணியைச்சுற்றி பரண்மேல் வைத்துவிடுவார்கள். மறந்து போய் சீக்கிரம் தீபாவளி தலைகாட்டும்.

அடுத்த ஆடித்தொடங்கியதும் தோட்டத்தில் குழிகள் வெட்டி ஆடி அமாவாசை அன்று விதைகள் நட்டு நீர்வார்ப்போம். வந்துவிடும் ஆடி பதினெட்டு-நாங்கள் பதினெட்டாம் பேருக்கு,பதினெட்டுக்கு  என்று தயாராவது பரணிலிருந்து மூடப்பட்டு ஒட்டடைப் படிந்த சப்பரத்தட்டியை இறக்கி வைக்கும் அன்றுதான். அப்பா கலர் பேப்பர், வார்னீஷ் கலர்பேப்பர் வாங்கிவந்து புது அலங்காரம் செய்யும் அந்தக் கைவண்ணத்தை எங்குக் கற்றார்களோ தெரியாது. அப்பாவின் அப்பாவை  ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது இழந்ததால் கற்றிருக்க வாய்ப்பில்லை.

மைதா பசைகாய்ச்சி கலர்தாள்களில் விதவிதமான அலங்கார வேலை தொடங்ககும். கத்தரிக்கோல்பிடித்து தாள்நறுக்கும்போது வரும் சத்தம் இன்று காலையில்கூட காதில் கேட்டது. முக்கோணாத்தட்டி, உள் பெட்டி, வாசல் பகுதிகளில் வண்ணத்தாள் நறுக்கல்கள் ஒட்டப்பட்டு முடித்ததும் உச்சியில் ஒரு விளக்குமாற்று சிம்பில் பறக்கும் ஒரு கொடியை வைப்பார்கள்.ஆண்டநாள் ஆண்ட மூவேந்தர் கம்பீரம் தெரியும். பசை காயும் முன் எடுத்து ஓட்டாமல் இருக்க வெயிலில் கொஞ்சம் வைத்து எடுப்பார்கள்.

ஆடிப்பெருக்கில் தெருவில் இழுக்கப்படும் சப்பரங்களின் வகைகளில் அப்பாவின் அலங்காரம் தாங்கிய சப்பரம்தான் சிங்கப்பூர் சட்டைஅணிந்த சிறுபிள்ளைபோல் கச்சித அழகாக தெருவில் உருளும். பெரிய சப்பரக்காரர்கள் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப்போவார்கள்.

குடமுருட்டி ரெட்டைப்பிள்ளையார் கோயில் படித்துறைக்கு பழங்கள், பச்சரிசி,காதோலை கருகமணி ,கதம்பப்பூ மாலையுடன் அம்மா,அக்காள்களுடன் செல்வோம். ஆறு எனும் அன்னைக்கு காதுக்கு ஓலையும் மார்புக்கு கருகமணியும் அணிவித்து சூடம் கொளுத்தி அம்மா தாயே என்று தாய்மார்கள் விண்ணப்பித்து கொய்யா, மாங்கனிகளை தண்ணீர்த்தாயிடம் விடுவார்கள். அருகில் அன்றைக்கு அதிக வால்பசங்கள் துடும்துடும் என்று தண்ணீர்வெள்ளத்தில் நுழைத்து எடுத்து சாகசம் காட்டி பெண்கள் வாக்குககளை அள்ளப் பார்ப்பார்கள்.

அருகிருக்கும் அரசமரத்தில் மஞ்சள் நூலைச் சுற்றிவிட்டு வருவார்கள்.எங்கள் கை மணிக்கட்டிலும் அதே மஞ்சள் நூல். புதுக் கடிகாரம் கட்டிய பூரிப்பு எங்கள் முகங்களில்.அதுவரை கரையில் நிற்கும் சப்பரத்தட்டிகள் பார்க்கிங் நிரம்பி வழியும்.

எல்லாம் முடித்து வீட்டைநோக்கி இழுக்கப்படும் சப்பரங்களின் உருளை ஒலிகள் கொஞ்சம் உற்சாகம் குறைந்திருக்கும். கலர்தாள் அலங்காரம் கொஞ்சம் கசங்கினாற்போலிருக்கும். இடப்பிரச்சினையில் எவனோ கழுத்தைப்பிடித்து அந்தாண்ட போட்ட அடையாளத்துடன் வீடுதிரும்பும் சப்பரத்தட்டி. 

கோயில் சப்பரங்கள் தேர்கள் திருவிழாக்களின் பின் மூடப்படுவதுபோல் அப்பா பத்திரமாக துணிசுற்றி பரண்மேல் வைத்த கடைசி ஆடிப்பெருக்கோடு போனது குடும்ப பிணைப்பும் எங்கள்தமிழ்மக்கள் மரபும் அழகும்.

அப்பா சப்பரத்தட்டிக்காக தன் நேரத்தை ஒதுக்கி பிள்ளைமுகத்தின் மகிழ்ச்சிக்காகச்  செய்த சேவை மட்டும் மனதில் நிலைபெற்றுவிட்டது.

ப.திருநாவுக்கரசு.


Friday, 27 December 2024


" மகள் இருந்த வீடு"தலைப்பு நம்எல்லார் வீடுகளிலும் இருந்துவிட்டு வாழ்க்கைப்பட்ட இடத்திற்கு புறப்பட்டுப்போன மகள்களை நொடிக்குள் கொண்டுவந்து நெஞ்சில் வைக்கும். 

சூடேறியதைப்பார்க்க தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளில் எஞ்சியவற்றை துடைத்துத்தள்ளும் துடைப்பம்தான் நிகழ்கால வாழ்க்கை நியதி. மகள்களை மறக்கடிக்கின்றனவா இன்றைய நாட்கள்? நினைவிலும்,கனவிலும், பேச்சிலும் நம்மகள்கள் நம்மகள்களாகவே இருந்துவிடுவார்களா? 

எழுத்தின் வழியே சமூகத்தின் மனதை உருக்கி வார்க்கும் கவிஞரின் படைப்புகளுள் ஒன்று "மகள் இருந்தவீடு"  பல மாத,வார, நாள்,இலக்கிய இதழ்களில் அடையாளமாகிவிட்ட பெயர் கவிஞர் ஜெய பாஸ்கரன்.

நாடுவிட்டும் ஊர்விட்டும் ஒருவழியாக தஞ்சைக்கு வந்தபின் சில நற்சிநேகர்கள் கிடைத்தனர். அமெரிக்க டெரன்டோவில் இருந்துகொண்டு தொழிற்கல்வி படித்து பெற்ற பணியிலும்  தமிழ்க்கவிதை படைப்பில் பெயர்பதிக்கும் திருமதி மருதயாழினியின் தந்தை திரு தனபால் அவர்கள் ஒரு நற்சிநேகர். மகள் படைப்புகளில் சொக்கி பீடும் பெருமையும் கொண்டு பரவசமாக என்னிடம் பகிரும் ஒரு அப்பா!  

அவர் அடிக்கடி ஜெயபாஸ்கரன் பெயரைக்குறிப்பிடும்போதெல்லாம் அவர் யாரென விசாரிக்கவில்லை. அதைச்செய்ய வைத்தது இப்போது ஒரு மகளின் அப்பா எனக்களித்த இந்தப் புத்தகம் "மகள் இருந்தவீடு".

தொட்டேன், திறந்தேன், வாசித்தேன், எழுதுகிறேன். வலைப்பூக்களில் அவரை எழுதிய பக்கங்களில் ஒரு சுற்றும் வந்தபின் கொஞ்சம் தன்னடக்கமாகிவிட்டேன். ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

நம்மை அநாதையாக்கி படிப்படியாக மறைந்துவரும் அம்மியும் குழவியும் பற்றிய நெஞ்சில் கரையும் கவிதையை வலைப்பூவில் படித்ததும் அப்படியே நெஞ்சில் எடைகூடிவிட்டது. நெசாங்கூட்டில் உட்கார்ந்துகொண்டன அம்மியும் குழவியும்: 

"அம்மாவும் குழந்தையும் போல

இன்றும் எனது கிராமத்தில் 

உயர்ந்து இயங்குகின்றன

அம்மிகளும் குழவிகளும்"

"இல்லாமைகளையும் 

இயலாமைகளையும்

என் அப்பாவிடம் சொல்வதை விட

அம்மியிடம் சொல்லி அரைப்பதுதான்

ஆறுதலாக இருந்தது

என் அம்மாவுக்கு.

புரிகிறது அம்மாவின் பல சுமைகள் அம்மியில் அரைபடுவது அறிய கொஞ்சமாவது ஆறுதல். காலம் அம்மா மேல் கொடுக்கும் சுமை எதனால் என்று கவிஞர் மேலும் வாசிக்கவைக்கிறார்.


இந்த அருமை நூலின் 167 பக்கங்களில் முதல் 128 பக்கங்கள் கனமானவை. மகள் கொண்டவை 39 பக்கங்கள். 128 பக்கங்க்களில் ஒருசமூகத்தின் விமர்சனப்பார்வை என்பது இலக்கியோனா என்ற புலமைக்காய்ச்சல் நோய், நுகர்வுக் கலாச்சார நுகத்தடியின் பாரம், கமுக்கங்களைக் கடத்துகிறவர்கள்,   நிலவும் ஒரு ஆய்தக் கிடங்காகிவிடுமோ என்ற அச்சம், ஒரே ஒரு ஆங்கிலச் சொல்லைப்பேசி சொக்கித்திரியும் மயங்கிகள் என பல வற்றிலும் படிம அழகும்,மரபின் சாயலில்  தொடைகள் கூடிய படைப்பை அங்கதம் எள்ளல்களில் உணரவைக்கும் கலை வியப்பைத் தருகிறது.

அதிகப்பக்கங்களின் எடைக்கு நிகரான மனதை உருக்கும் மகள் இருந்தவீடு. வீட்டைப்பிரிந்து வாழும் யாரும் எப்படிகரைந்து கசிவான் என்பது அடியேன் அயலகத்தில் பதினைந்து ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த அனுபவம். அப்போதெல்லாம் அடிக்கடி நினைப்பேன் திருமணமாகி கணவன் வீட்டில் வாழும் பெண்ணின் மனநிலையும் இப்படித்தானே என்று.அதன் அடித்தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் மகள் வாழ்க்கைப்பட்டுப் போனபின் ஏற்பட்ட சொல்லமுடியாத வாட்டம் பற்றிக்கொண்டது. இந்த மகள் இருந்தவீடு ஒவ்வொரு அப்பாவின் வீடும்தான்

ஒவ்வொரு தலைப்பையும் தாண்டுவதற்குள் முட்டிய கண்ணீர் முழுவதும் கொட்டிவிடும்.

மகளை ஒருவனிடம் பிடித்துக்கொடுத்தால்தான்,கட்டிக் கொடுத்தால்தான் நிம்மதி என்பது எவ்வளவு அருவருப்பாகிவிட்டது. 

* 'மாமியார் வீட்டிலிருந்து

இப்ப எங்க அம்மா வீட்டுக்கு

வந்திருக்கேன்'

என்று யாரிடமோ

சொல்லிக்கொண்டிருக்கிறாய்

உனக்கென்று

ஒரு வீடற்றவளாக!


* மகள் தின்று புதைத்த மாங்கொட்டை முளைத்தது. அதை லாவகமாகப் பிடுங்கி வேறிடத்தில் நட்ட கவிஞருக்கு கைகள் நடுங்கின. எழுதுகிறார்,

பெரும் பொருட் செலவில்

இருநூறு கிலோமீட்டருக்கு அப்பால்

நாங்கள் உன்னை நட்டது

புதிய குழியிலா?

புதை குழியிலா?


* மகள் கல்வியில்,கலைகளில், வாழ்க்கையில் சாதிக்கக் கண்ட கனவுகள்ஆயிரம். 

"இருந்தும்

உனது அத்தனைக் கனவுகளும்

தோற்றுப்போயின

உனக்குக் கல்யாணம்

முடிக்க வேண்டுமென்கிற

எங்கள் ஒற்றைக் கனவிடம்!


* வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது தன் காலணிகளைக் கழற்றுவாள். இன்னொரு ஜோடி இல்லாததை கவனித்துவிட்டு..

"உனது காலணிகளைக் 

கழற்றிக் கொண்டே

என்னுடையதைத் தேடுவாய்

அப்பா எங்கேம்மா?

என்று அடிக்கடி கேட்பது

அணிச்சையாகி இருந்ததுஉனக்கு"

ஜெயபாஸ்கரன் நானாகத்தான் இருந்திருக்கிறார். இல்லாவிட்டால் எப்படி என் மகள் இருந்த வீட்டை இப்படி நெகிழ வரைந்திருப்பார். கவிதை பொது மனித உணர்வின் வார்ப்பாகும்போது அது எல்லார் மனத்திலும், எல்லாமொழிகளுக்குள்ளும் குடிபுகுந்துவிடும்.

இந்நூலின் முதல் கவிதை பெண் குழந்தை பிறப்பைத் தடுக்க, கருவிலேயே கண்டு பதைத்ததும், அதைக் கொன்றதும், கள்ளிப்பால் கரந்து காத்திருந்ததும், நெல்மணியை புகுத்தி மூச்சை நிற்கவைத்ததும்,பருவம் வந்த மறுநாளே பாடப்புத்தகத்தைப் பறித்ததும் சொல்லமுடியாத வலிகளைத் தந்தது சமுதாயம். அது செத்து ஆண்டுகள் ஒடிவிட்டன,


"அன்புத் தாயே

அறிவின் தெளிவே

ஆயிரம் ஆண்டுகள்

அடங்கிக் கிடந்து

அடி வயிற்றில் நீ

அன்று பதுக்கிய

பெரு நெருப்பெல்லாம்

பெண்களாய்ப் பிறந்தன.

...........

அறிவீனர்களின் 

ஆதிக்கத்திமிரை

அறிவுப்பெண்கள்

அடித்துத் தகர்த்தனர்."

அப்பாவுடன் இருந்த வீட்டின் மகள் அறையில் எந்தப் பொருளையும் எடுத்துப் போட்டு விடாதீர்கள், நோட்டுப்புத்தகங்களை கிழித்து வீசிவிடாதீர்கள். அதன் பக்கங்களில் அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். கட்டுமானத்தின் போது அண்ணன் அறைக்கு எதிரே அவள் அறை எதனாலோ குறைந்திருந்தது. " "ஏன்ப்பா எனக்கு மட்டும் சின்ன அறை?" என்று கேட்டதில் விழுந்த அரை  சுவரை இடித்து பெரிதாக்கிக் கொடுத்த பின்னும் என் குற்ற உணர்ச்சி போகவில்லை. மகள் இருந்த வீடு மீண்டும் கண்ணீரை நிரப்புகிறது.

வடிவ  மாற்றம் கலந்து வருவதை விட.  சில மரபுச்சாயல் கவிதைகளை தனி நூலாக்கினால் சிறப்பாக இருக்கும்.

ப.திருநாவுக்கரசு

27/12/24

Thursday, 12 December 2024

 

 

கதைகளின் கதை புகழ்பெற்ற வேள்பாரி சரித்திரப் புதின ஆசிரியர் சு.வெங்கடேசன் விகடனில் எழுதிய ஒரு கட்டுரைத்தொடர். “கதைகளுக்குப்பின்னால் இருக்கும் வரலாற்றுக் குறிப்புகளையும் வரலாற்றுக்குள் செரிமானமாகிக் கிடக்கும் கதைகளையும் பற்றிய கட்டுரைத்தொடர் என்று அவரே முன்னுரையில் குறிப்பிட்டுவிட்டார். முதற் பதிப்பு டிசம்பர் 2018இல் வந்து  இந்த 2024 அக்டோபரில் அடுத்த பதிப்பும் வந்திருக்கிறது. முகநூல் வெளியில் வந்த விளம்பரத்தைப் பார்த்து  அதை வாங்கினேன். 128 பக்கங்களில்.

சு.வெங்கடேசன் நம் மனம் கவர்ந்த பொதுநல,தமிழ்நல,வரலாற்று நலத் தொண்டராக இருப்பதால் ஒரு சிறு தூண்டலுடன் வாங்கினேன். வீண்போகவிடவில்லை அவர்.

வரலாற்றுஆதாரத் தரவுகளைத் துருவித்தேடிக் கிடைக்காமல் போவதும் தேடி ஓய்ந்தபின் தானாக ஒரு நாள் கையில் வந்து விழுவதும் தகுதியான ஆய்வாளர்கள் கைமேல் இட்டபலன்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் காணும் உ.வே.சா. அவர்கள் சரித்திரமே சிறந்த சான்று. முதன்மை ஆவணங்கள் அத்தகைய அபூர்வமானத் தேடலுக்குப்பின்  கிடைப்பவை. குதிரைகளுக்கு 200 நாட்களுக்கு வெந்நீர்க் காய்ச்ச அடுப்பெரிக்க ஒலைச் சுவடிகளைப்போட்டிருக்கின்ற நெஞ்சை சுடும்வரலாறு  காதுகளில் அமிலம் பாய்ச்சுவதுபோல் உள்ளது. பெரும்பாலானவை விதிகளால் அல்ல சதிகளால் அழிந்தவை.

என் தாத்தா வீட்டில் எங்கள் வீட்டில் மாமாக்கள் வீடுகளில் ஒரு கம்பியில் கடுதாசிகள் தபால்கார்டுகள் இங்கிலாந்து ( INLAND LETTER ) லெட்டர்கள் ரசீதுகள்கொத்தாகக் கோர்த்துக் கிடந்ததும், திண்ணைச் சுவரில்  போடப்பட்ட பச்சிலைப் புள்ளிகள் தெரிவித்த தயிர்,மோர், நெய் அளவு ‘சேர்’ கணக்குகளும்தான் நம்மிடம் சிறிதளவு இருந்த முறையில்லா ஆவணப்பாதுகாப்பு முறைகள். எந்தச் சான்றும் இல்லாத கடன் சண்டைகளில் “இல்லைன்னு துண்டைப்போட்டுத் தாண்டு”தான் ஒரே கடைசி ஆதாரம்.

ஓலை ஆவணங்களுக்குப்பின், கல்வெட்டுகளும்,பட்டயங்களும் ,தாள் பத்திரங்களும் காலத்தில் வளர்ந்தவை. ஆனால் சமூகப் பழக்க வழக்கங்கள் பண்பாட்டுக் கூறுகள், நாடுப்புற சட்டதிட்டங்களுக்கான பதிவேடுகளைத் தேட அன்னப்பறவையும் பன்றியவதாரங்களாலும் கூட முடியாது.மக்கள் கிடைத்தவற்றை பாதுகாத்திருந்தால் ஒழிய கிடைப்பது அரிது.  அந்த அரிதில் நுழைந்து கண்டெடுத்த வாழ்வியல் தொடர்புடைய பதிவுகள்தான் கதைகளின் கதை.

உலகிலே தமிழன் மட்டுமே கண்டு பகைவர் தலைகளை அறுதெறிந்த போர்க்கருவி வளரி. கும்பெனியாரின் வருகைக்குப்பின் சுவடு அற்று ஒழிந்தது தமிழனின் போர்க்கருவியல்ல கைகள். சோகம் கப்பிய அந்தவரலாற்றில் அந்தக் கருவியின் உலோக வாசனை மட்டுமே கதைகளில் மிதந்ததை மிஞ்சி மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் பட்ட சாமிக்குப் படையலாக வைக்கப்பட்டிருந்த 200 வளரி எனும் பண்டைத்தமிழரின் எறிபடைகளை- காலம் காலமாக எதிரிகளின் கண்களுக்கு எட்டும் முன் தலைகளைக் கொய்துபோன அரிதினும் அரிதான போர்க்கருவியைக் கண்டு எழுதிய மெய் சிலிர்க்கும் பதிவு. 





அரிதில் கட்டுரை ஆசிரியர் கண்டு சொன்ன வளரிகள்


வளரி கதையல்ல தமிழன் கையிலிருந்து அவற்றைப் பறிக்க வெள்ளையன் தடைச்சட்டம் போட்டு நாடுமுழுக்க பறித்து ஒழித்தபின் அழிந்த சுவடில் கிடைத்த இருப்புச் சுவடுகள் பற்றிய கட்டுரை “வளரி”

12 தலைப்புகளில் ஒன்றைத்தான் சுட்டியிருக்கிறேன். பிரிட்டிஷார் 1830 ஆம் ஆண்டில் கொண்டுவந்த ‘போக்கிரி ஒழிப்புப் சட்டம்” சமவெளிகளில் எந்த நேரத்திலும் சந்தேகப்படும் யாரையும் சுட்டுக்கொல்ல ரானணுவத்துக்கு வாய்ப்புக் கொடுத்த சட்டம். அதன் பேரில் போக்கிரிகள் என்ற வசைச் சொல்  காட்டிகொடுத்த ரத்தபலிகள். கேட்பாரற்று சுடப்பட்ட அடிநிலை மக்கள் பற்றிய அவலம்தான் ‘போக்கிரி’ என்ற கட்டுரை. எஞ்சிய பத்தையும் தயவு செய்து படியுங்கள்.

முடிக்காமல் கீழேவைக்க முடியாத நூல்.

சு.வெங்கடேசன் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு சொல்லப்படும் நியாயத்தின் குரல். மக்களில் அடித்தட்டு மேல்தாட்டு ஆட்சித்தட்டு அதிகாரத்தட்டு என்ற வசதிகள் உள்ளவரை ஆன்மநேயமும் உயிர் இரக்கமும் இல்லாத கொலைப் பசிகள் ஓய்வதில்லை என்ற அடிநாதம் ஒலிக்கும் கட்டுரைகள் அவை. நன்றி சு.வெங்கடேசனார் அவர்களே. 

உங்கள் சுறுசுறுப்பினால் எங்கள் உறக்கம் பாழாய்ப் போகட்டும்.

உங்கள்

அரசு



படங்கள் நன்றி விகடன்




Tuesday, 10 December 2024

 



புலவன் தோன்றினான்

                                                        (மலர்ந்த நாள்: 11-12-1882)

தமிழரின் உயிநிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால்

இமை திறவாமல் இருந்த நிலையில்

தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா:

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

 

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

(பாரதி மாணவர் பாரதிதாசன் தம் குருவுக்கு)

                                                                  

தீராநதி

  ஆடிப்பெருக்கு ***************** அன்று .. சோலை மலர்களை சேலையாய்ப் போர்த்தி உன் மீன்விழிகளை விழித்து குயிலின் இசையுடன் மயில...