ஆடிப்பெருக்கு
*****************
அன்று..
சோலை மலர்களை
சேலையாய்ப் போர்த்தி
உன் மீன்விழிகளை விழித்து
குயிலின் இசையுடன்
மயில்நடமாடப்
பார்த்து
நடந்து போனாயாமே!
கேள்விப்பட்டோம்.
ஆட்டன் சேரமன்னனை
சோழன் மகள் ஆதியை
இந்தநாளில் இழுத்துப்போனாயாமே
காதில் விழுந்தது.
அவைகிடக்கட்டும்
ஒரு மூங்கில்தட்டில்
பேரிக்காய் நாவல்
கொய்யாக்கனிகள்
கொஞ்சம் அரிசி
வெள்ளக் காப்பரிசி
காதோலை கருகமணி
வெற்றிலைப்பாக்கு
வைத்து
ஒரு பூச்சரம்தந்து
விழுந்து கும்பிட்டோமே
அடி காவேரி....
பொங்கி பூரித்தாயே!
இரு...
என் கண்களைத்
துடைத்துக்கொள்கிறேன்
எங்கள்
கைகளில் மஞ்சள் நூல்
உனக்கும் சுற்றியதுதான் அது.
தெருவை நிறைத்த
ஓயா சப்பரத்தட்டிகள்....
உருளை ஓசைகள்.
பொங்குது மனசு..
பொறு கொஞ்சம்
பாவாடைத்தாவணி
பட்டாளம்
பலரின் முகம்தெளிக்க
உன்னுள்
குதித்துக் குதித்தே கிடந்தோமே
மறந்தாயா பாவி காவேரி...
பச்சைக்குழந்தைகள்
பயிர்ச்செடிகள்
பசியோடு பார்க்குமே
உன்மார்பை.
ஊட்டிய மார்பு திறக்காதா
உன்னைப்
பூட்டிய கதவும் உடையாதா..
ஆற்றில் உயிராய் இருந்த நீ
வீட்டிற்கு வந்த கதி இதுவா?
யாரின்தாய்நீசொல்லிவிடு
இப்படியேதான்
நீ இருப்பதென்றால்
என் காலம் முடிந்ததும்
போய்விடு!
=================
ப.திருநாவுக்கரசு

Truly nostalgic.thanks for sharing.missing those old golden days..
ReplyDeleteகாவேரியின் வளமும் பெருமையும் மீண்டும் தழைத்திட வேண்டும்.
ReplyDelete