உயிர்தந்து
உடல்வளர்த்து உள்ளத்தில் உணர்ச்சி ஊற்றி
நிலைஉயர்த்தி
நிம்மதியை எமக்களித்து தமைமறந்து
கண்துயிலப்போய்விட்ட
எம் அன்னைக்கும் தந்தைக்கும்..
அம்மா…
உன் மகன் இன்று
மருத்துவன்
வயிற்றுக்குள் வைத்து
குருதிக்கொடை அளிப்பது
எவ்வாறு?
உன் மகன் இன்று
விஞ்ஞானி
உன் இதயத்திற்கும்
அந்த
பசியாற்றுமிடங்களுக்கும்
உள்ள இடைவெளியை
அளப்பது எப்படி?
உன் மகன் இன்று
பாடகன்
அந்த ஜீவராகத்தால்
தூங்கவைத்து வளர்ப்பது
எவ்விதம்?
உன் மகன் இன்று
ஆசான்
உச்சரிப்பு அறியாத
ஒரு பிஞ்சு நாவில்
முதல் சொல்லை
வரவழைப்பது எப்படி?
உன் மகன் இன்று
வியாபாரி
தாய்ப்பால் போல்
கலப்படமின்றி
வழங்குதல் எவ்வாறு?
உன் மகன் இன்று
பட்டதாரி
துணைவேந்தரே
சோறு ஊட்டி வளர்க்கும்
பல்கலைக் கழகம் எங்குளது?
உன் மகன் இன்று
விளையாட்டு வீரன்
தொடர்ந்து பத்துமாதம்
பளுதூக்குவது
எவ்வாறு?
உன் மகன் இன்று
விமானி
உன்மனம் போல்
பரந்த ஆகாசத்தைக்
காட்ட முடியுமா?
உன் மகன் இன்று
கவிஞன்
கவிஞனையே எழுதும்
கவிதை எது?
உன் மகன் இன்று
வள்ளல்
தன்னையே
வழங்குதல்
என்றால் என்ன?
உன் மகன் இன்று
நடிகன்
கன் கண்ணில் நீர்வழிந்தால்
உன் நெஞ்சில்
உதிரம் கொட்டுவது எவ்வாறு?
உன் மகன் இன்று
தத்துவஞானி
ஆன்மாவின்
ஆன்மா என்றால் என்ன?
உன் மகன் என்றும்
கடனாளி
வெறும் பற்றுகள்
மட்டுமே உள்ளன
கடன் அடைப்பது
எக்காலம்?
oooooooooo
அன்புள்ள அப்பா
மழலைகள்
சுலபமாய் உச்சரித்தபோது
அம்மாவும்
அழுத்தி உச்சரித்தபோது
நீங்களும் பிறந்தீர்கள்.
அம்மா தூரிகையால்
தீட்டப்பட்டவள்
நீங்கள் உளியால்
செதுக்கப்பட்டவர்
நீ ங்கள்…
எங்கள் வியப்புகளின்
குறியீடு
மலையே
நீ கடினம்தான்
உன்னிலிருந்து
எத்தனை ஈர அருவிகள்
மாதச்சம்பளம் எல்லாம்
வட்டியில் வடிந்தபோது
அம்மா மட்டும்
பரவாயில்லை
முதல் இருக்கிறதே
என்றது யாரை அப்பா?
உங்கள் காதுகளில்
ஏதப்ப அத்தனை
வெள்ளி வாள்கள்?
அம்மாவின் அன்புச்
சொற்களை குனிந்து ஏற்ற
செவிகளுக்கு வழங்கப்பட்ட
வீர விருதுகளா?
தலையில்
குடும்பத் தலைமையில்
நீ ங்கள்பூரணத்துவம்
அடைகையில்
கழன்று விழுந்தனவா?
அல்லது
குடும்பப் பாசறையில்
காவல் காக்க எறிபடைகளாக
வீசப்பட்டனவா?
பிடித்துக்கொண்டிருக்கும்
தினசரியை கீழே வைத்து
என்னைப் பாருங்கள் அப்பா...
உங்களை வாசிக்கவே
ஒரு தலைமுறை
காத்திருக்கிறது.
(சிறு மாற்றத்துடன்-நன்றி: சிங்கை தமிழ் முரசு)
