Friday, 29 August 2025

அந்தக் கருக்கலில்


 அந்தக் கருக்கலில்....


ப.திருநாவுக்கரசு


துறைமுகத்தைக் கழுவி

தொடுவான நெற்றியில்

செஞ்சாந்தில்

ஒரு பொட்டுவைத்துக்கொண்டது

அந்தக் காலை!


தங்கமணற்பரப்பில்

யாசிக்க வெட்கப்பட்டு

அலையும் திருவோடுகளாய்

படகுகள்!


கடைசி உணவுக்குப்பின்

உத்தரவாதமில்லாத

அடுத்த உணவுநோக்கி

உற்சாகச் சிறகைவிரிக்கும்

இருளை அப்பிக்கொள்ளாத கொக்குகள்!


புலால் வாசம் பிடிக்கப்போய்

காற்றில் பரவிய வலை

கடலில் விழுந்து தொலைக்கும்

உயிர்களை அள்ள!


உலகைப் பார்க்க

துள்ளி வெளிப்பட்ட 

சின்ன மீனொன்று

இயந்திரப்படகின்

எரிநாற்றத்தால்

மூக்கைப் பொத்தி

வீட்டுக்குள் ஓடும்

மீண்டும்!


நழுவும் ஆடையை அறியாமல்

உலவும் குழந்தைகளாய்

இரவு முடிந்தது தெரியாமல்

இன்னும்  சில தாரகைகள்!


எப்படியெல்லாமோ

விடிந்து பார்க்கிறது இரவு

தன்னால் முடிந்தவரை!

Saturday, 23 August 2025

சுமிதாவும் குக்கியும்



 







சுமிதாவின் குக்கி

ப.திருநாவுக்கரசு

****************

தொலைக்காட்சிகள் நாய்கள்  தொல்லைதருவதாக கடிபடுவோரின் பதற்றத்தை காட்டி வருகின்றன நாமும் பதறுகிறோம்.

குக்கி தெருவின் சிறார்கள் ஆதரவுதேடி அலைந்துவந்த நாய்க்குட்டிக்கு வைத்த பெயர்.குக்கி வளர்ந்து காளையாகிவிட்டான். கொஞ்சநாளாக பரவி வரும் கடி செய்தி பரவலால் அது நிகழ்ந்தது 

ஊராட்சி வாகனத்தில் பிரியமான ஒரு பிரியமுள்ள நாய் குக்கி பிடிபட்டு தூக்கிப்போடப்படுவதைப் பார்த்து முதியவள் சுமிதா  கதறுகிறாள். குக்கி தன் கடைசி நிமிடம்போல் ஓர் ஏக்கப்பார்வையோடு மறைகிறான். சுமிதாவுக்கு நான்கு நாட்களாக அண்ணம் தண்ணி ஆகாரமில்லை. ஒரு தெருநாயின்மேல் அவள் எதுவும் அவ்வளவு பெரிசாக பற்றுவைக்கவில்லை. தன் தனிவாழ்க்கையில் குக்கிதான் அவள் காலைச்சுற்றியும் வாசற்படியில் முகம்வைத்தும் அவளையே ஏக்கத்தோடு பார்ப்பான். 

அந்த மூதாட்டியின் தனிமையின் காரணங்களை அவன் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் பிடிவாதமான துணையாக மாறிவிட்டான். 

அவளுக்குக் காய்ச்சல். அதனால் ஏதும் சாப்பிடவில்லை. அன்று அவன் வாயில்லா ஜீவன் என்று அவள்வைத்த சோற்றை முகரக்கூட இல்லை. சுமிதா தெளிந்தபின்  ஆர்வமுடன் அவளைப் பார்த்தான்.

குக்கியின் கடைசிப்பார்வைதான் சுமிதாவை கண்கசியவைக்கிறது. மேகவெடிப்பு நிலச்சரிவில் நிரந்தரமாக மூடப்பட்ட அவள் குடும்பத்தின்பின் குக்கிதான் கண்முன்னால் உலவிய ஜீவன்.

மண்மூடிய அந்தச் சொந்தங்களைத் தாண்டி கண்சிமிட்டாமல்  வண்டியில் ஏற்றப்பட்ட குக்கியின் அந்தப்பார்வை சுமிதாவை வதைக்கிறது.

கடிகளை முன்னிட்டு அவைகளைப் பிடித்துஒரே குழியில் போட்டு மூடச்சொல்லும் முன் நிலச்சரிவில் பறிபோன சொந்தங்களை நினைக்காமல் எப்படி இருக்கமுடியும்? 

அவள் காய்ச்சல் தெளியும்வரை வயிறை காயவிட்டு வருந்தாத குக்கி அவளைப் பிரிவதால் பெரும்வலியோடு வண்டியில் போகிறான். 

பிடிக்கும் ஊழியர்களைவிடுங்கள் உங்களுக்கு என்ன ஆனது? நீதிமன்றத்தில் முறையிடுகிறீர்கள். உங்கள் முறையீட்டில் குக்கியையும் எழுதுங்கள். 

குக்கி ஒரு தனி உயிரல்ல. குழந்தைகள், இளையர்கள், முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஆதரவற்றர்களின் அருகில் தோழமையுடன் எண்ணற்ற குக்கிககள்! 

வெடிகுண்டுகளைத்தேட உதவும் குக்கிகள் யாருக்காக தேடுகின்றன?

தோழமை, நன்றி, காவல்களை குக்கியிடம் பார்த்தபின் ரேபியசையே சொல்லிச் சொல்லி விடைதேடுகிறீர்கள்! 


Saturday, 16 August 2025

 


பட படப்பு, எரிச்சல், சிடு சிடு, காரணமில்லா ஆத்திரம், கடு கடுப்பு,  கர்வமும் அலட்சியமும், புகைச்சல்...இல்லாத ஒரு தியானம் காலையில் பத்து நிமிடம் போதும்.

 பக்தியைவிட பண்பை வளர்க்கும். பகுத்தறிவாளனும் பக்தனும் பேதமில்லாமல் அமரும் இடம் அது.

 தியானம் மன ஒருமைப்பாடு. அழுக்காறு,அவா,வெகுளி,இன்னாச்சொல் கறை போக்கும் சலவைக்கட்டி. 

துருப்பிடிக்காத அன்பாயுதம்! 

அருள்நிறைந்த உள்ளத்தின்அழகுதரும் ஔடதம்! 

பழகுவோம்.

என் பூனக்குத் தெரிந்திருக்கிறது அது!

*****

ப.திருநாவுக்கரசு

Saturday, 2 August 2025

மூடப்பட்ட சப்பரங்கள்

 


                                                       Picture:Abhi-watercolourist

சென்ற ஆடிப்பதினெட்டு முடிந்தும் தெருக்களில் சிலநாள்களுக்கு சப்பரத்தை இழுத்தபடித் திரிவோம். அதன் அலங்காரம் ஒன்று ஒன்றாய் கழன்று விழும். ஒரு நாள் அப்பா இழுத்ததுபோதும் என்று அதன்மேல் ஒரு துணியைச்சுற்றி பரண்மேல் வைத்துவிடுவார்கள். மறந்து போய் சீக்கிரம் தீபாவளி தலைகாட்டும்.

அடுத்த ஆடித்தொடங்கியதும் தோட்டத்தில் குழிகள் வெட்டி ஆடி அமாவாசை அன்று விதைகள் நட்டு நீர்வார்ப்போம். வந்துவிடும் ஆடி பதினெட்டு-நாங்கள் பதினெட்டாம் பேருக்கு,பதினெட்டுக்கு  என்று தயாராவது பரணிலிருந்து மூடப்பட்டு ஒட்டடைப் படிந்த சப்பரத்தட்டியை இறக்கி வைக்கும் அன்றுதான். அப்பா கலர் பேப்பர், வார்னீஷ் கலர்பேப்பர் வாங்கிவந்து புது அலங்காரம் செய்யும் அந்தக் கைவண்ணத்தை எங்குக் கற்றார்களோ தெரியாது. அப்பாவின் அப்பாவை  ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது இழந்ததால் கற்றிருக்க வாய்ப்பில்லை.

மைதா பசைகாய்ச்சி கலர்தாள்களில் விதவிதமான அலங்கார வேலை தொடங்ககும். கத்தரிக்கோல்பிடித்து தாள்நறுக்கும்போது வரும் சத்தம் இன்று காலையில்கூட காதில் கேட்டது. முக்கோணாத்தட்டி, உள் பெட்டி, வாசல் பகுதிகளில் வண்ணத்தாள் நறுக்கல்கள் ஒட்டப்பட்டு முடித்ததும் உச்சியில் ஒரு விளக்குமாற்று சிம்பில் பறக்கும் ஒரு கொடியை வைப்பார்கள்.ஆண்டநாள் ஆண்ட மூவேந்தர் கம்பீரம் தெரியும். பசை காயும் முன் எடுத்து ஓட்டாமல் இருக்க வெயிலில் கொஞ்சம் வைத்து எடுப்பார்கள்.

ஆடிப்பெருக்கில் தெருவில் இழுக்கப்படும் சப்பரங்களின் வகைகளில் அப்பாவின் அலங்காரம் தாங்கிய சப்பரம்தான் சிங்கப்பூர் சட்டைஅணிந்த சிறுபிள்ளைபோல் கச்சித அழகாக தெருவில் உருளும். பெரிய சப்பரக்காரர்கள் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப்போவார்கள்.

குடமுருட்டி ரெட்டைப்பிள்ளையார் கோயில் படித்துறைக்கு பழங்கள், பச்சரிசி,காதோலை கருகமணி ,கதம்பப்பூ மாலையுடன் அம்மா,அக்காள்களுடன் செல்வோம். ஆறு எனும் அன்னைக்கு காதுக்கு ஓலையும் மார்புக்கு கருகமணியும் அணிவித்து சூடம் கொளுத்தி அம்மா தாயே என்று தாய்மார்கள் விண்ணப்பித்து கொய்யா, மாங்கனிகளை தண்ணீர்த்தாயிடம் விடுவார்கள். அருகில் அன்றைக்கு அதிக வால்பசங்கள் துடும்துடும் என்று தண்ணீர்வெள்ளத்தில் நுழைத்து எடுத்து சாகசம் காட்டி பெண்கள் வாக்குககளை அள்ளப் பார்ப்பார்கள்.

அருகிருக்கும் அரசமரத்தில் மஞ்சள் நூலைச் சுற்றிவிட்டு வருவார்கள்.எங்கள் கை மணிக்கட்டிலும் அதே மஞ்சள் நூல். புதுக் கடிகாரம் கட்டிய பூரிப்பு எங்கள் முகங்களில்.அதுவரை கரையில் நிற்கும் சப்பரத்தட்டிகள் பார்க்கிங் நிரம்பி வழியும்.

எல்லாம் முடித்து வீட்டைநோக்கி இழுக்கப்படும் சப்பரங்களின் உருளை ஒலிகள் கொஞ்சம் உற்சாகம் குறைந்திருக்கும். கலர்தாள் அலங்காரம் கொஞ்சம் கசங்கினாற்போலிருக்கும். இடப்பிரச்சினையில் எவனோ கழுத்தைப்பிடித்து அந்தாண்ட போட்ட அடையாளத்துடன் வீடுதிரும்பும் சப்பரத்தட்டி. 

கோயில் சப்பரங்கள் தேர்கள் திருவிழாக்களின் பின் மூடப்படுவதுபோல் அப்பா பத்திரமாக துணிசுற்றி பரண்மேல் வைத்த கடைசி ஆடிப்பெருக்கோடு போனது குடும்ப பிணைப்பும் எங்கள்தமிழ்மக்கள் மரபும் அழகும்.

அப்பா சப்பரத்தட்டிக்காக தன் நேரத்தை ஒதுக்கி பிள்ளைமுகத்தின் மகிழ்ச்சிக்காகச்  செய்த சேவை மட்டும் மனதில் நிலைபெற்றுவிட்டது.

ப.திருநாவுக்கரசு.


  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...