Picture:Abhi-watercolourist
சென்ற ஆடிப்பதினெட்டு முடிந்தும் தெருக்களில் சிலநாள்களுக்கு சப்பரத்தை இழுத்தபடித் திரிவோம். அதன் அலங்காரம் ஒன்று ஒன்றாய் கழன்று விழும். ஒரு நாள் அப்பா இழுத்ததுபோதும் என்று அதன்மேல் ஒரு துணியைச்சுற்றி பரண்மேல் வைத்துவிடுவார்கள். மறந்து போய் சீக்கிரம் தீபாவளி தலைகாட்டும்.
அடுத்த ஆடித்தொடங்கியதும் தோட்டத்தில் குழிகள் வெட்டி ஆடி அமாவாசை அன்று விதைகள் நட்டு நீர்வார்ப்போம். வந்துவிடும் ஆடி பதினெட்டு-நாங்கள் பதினெட்டாம் பேருக்கு,பதினெட்டுக்கு என்று தயாராவது பரணிலிருந்து மூடப்பட்டு ஒட்டடைப் படிந்த சப்பரத்தட்டியை இறக்கி வைக்கும் அன்றுதான். அப்பா கலர் பேப்பர், வார்னீஷ் கலர்பேப்பர் வாங்கிவந்து புது அலங்காரம் செய்யும் அந்தக் கைவண்ணத்தை எங்குக் கற்றார்களோ தெரியாது. அப்பாவின் அப்பாவை ஆறுமாதக்குழந்தையாக இருந்தபோது இழந்ததால் கற்றிருக்க வாய்ப்பில்லை.
மைதா பசைகாய்ச்சி கலர்தாள்களில் விதவிதமான அலங்கார வேலை தொடங்ககும். கத்தரிக்கோல்பிடித்து தாள்நறுக்கும்போது வரும் சத்தம் இன்று காலையில்கூட காதில் கேட்டது. முக்கோணாத்தட்டி, உள் பெட்டி, வாசல் பகுதிகளில் வண்ணத்தாள் நறுக்கல்கள் ஒட்டப்பட்டு முடித்ததும் உச்சியில் ஒரு விளக்குமாற்று சிம்பில் பறக்கும் ஒரு கொடியை வைப்பார்கள்.ஆண்டநாள் ஆண்ட மூவேந்தர் கம்பீரம் தெரியும். பசை காயும் முன் எடுத்து ஓட்டாமல் இருக்க வெயிலில் கொஞ்சம் வைத்து எடுப்பார்கள்.
ஆடிப்பெருக்கில் தெருவில் இழுக்கப்படும் சப்பரங்களின் வகைகளில் அப்பாவின் அலங்காரம் தாங்கிய சப்பரம்தான் சிங்கப்பூர் சட்டைஅணிந்த சிறுபிள்ளைபோல் கச்சித அழகாக தெருவில் உருளும். பெரிய சப்பரக்காரர்கள் கடைக்கண்ணால் பார்த்துவிட்டுப்போவார்கள்.
குடமுருட்டி ரெட்டைப்பிள்ளையார் கோயில் படித்துறைக்கு பழங்கள், பச்சரிசி,காதோலை கருகமணி ,கதம்பப்பூ மாலையுடன் அம்மா,அக்காள்களுடன் செல்வோம். ஆறு எனும் அன்னைக்கு காதுக்கு ஓலையும் மார்புக்கு கருகமணியும் அணிவித்து சூடம் கொளுத்தி அம்மா தாயே என்று தாய்மார்கள் விண்ணப்பித்து கொய்யா, மாங்கனிகளை தண்ணீர்த்தாயிடம் விடுவார்கள். அருகில் அன்றைக்கு அதிக வால்பசங்கள் துடும்துடும் என்று தண்ணீர்வெள்ளத்தில் நுழைத்து எடுத்து சாகசம் காட்டி பெண்கள் வாக்குககளை அள்ளப் பார்ப்பார்கள்.
அருகிருக்கும் அரசமரத்தில் மஞ்சள் நூலைச் சுற்றிவிட்டு வருவார்கள்.எங்கள் கை மணிக்கட்டிலும் அதே மஞ்சள் நூல். புதுக் கடிகாரம் கட்டிய பூரிப்பு எங்கள் முகங்களில்.அதுவரை கரையில் நிற்கும் சப்பரத்தட்டிகள் பார்க்கிங் நிரம்பி வழியும்.
எல்லாம் முடித்து வீட்டைநோக்கி இழுக்கப்படும் சப்பரங்களின் உருளை ஒலிகள் கொஞ்சம் உற்சாகம் குறைந்திருக்கும். கலர்தாள் அலங்காரம் கொஞ்சம் கசங்கினாற்போலிருக்கும். இடப்பிரச்சினையில் எவனோ கழுத்தைப்பிடித்து அந்தாண்ட போட்ட அடையாளத்துடன் வீடுதிரும்பும் சப்பரத்தட்டி.
கோயில் சப்பரங்கள் தேர்கள் திருவிழாக்களின் பின் மூடப்படுவதுபோல் அப்பா பத்திரமாக துணிசுற்றி பரண்மேல் வைத்த கடைசி ஆடிப்பெருக்கோடு போனது குடும்ப பிணைப்பும் எங்கள்தமிழ்மக்கள் மரபும் அழகும்.
அப்பா சப்பரத்தட்டிக்காக தன் நேரத்தை ஒதுக்கி பிள்ளைமுகத்தின் மகிழ்ச்சிக்காகச் செய்த சேவை மட்டும் மனதில் நிலைபெற்றுவிட்டது.
ப.திருநாவுக்கரசு.
No comments:
Post a Comment