Friday, 27 December 2024


" மகள் இருந்த வீடு"தலைப்பு நம்எல்லார் வீடுகளிலும் இருந்துவிட்டு வாழ்க்கைப்பட்ட இடத்திற்கு புறப்பட்டுப்போன மகள்களை நொடிக்குள் கொண்டுவந்து நெஞ்சில் வைக்கும். 

சூடேறியதைப்பார்க்க தோசைக்கல்லில் தெளிக்கப்பட்ட நீர்த்துளிகளில் எஞ்சியவற்றை துடைத்துத்தள்ளும் துடைப்பம்தான் நிகழ்கால வாழ்க்கை நியதி. மகள்களை மறக்கடிக்கின்றனவா இன்றைய நாட்கள்? நினைவிலும்,கனவிலும், பேச்சிலும் நம்மகள்கள் நம்மகள்களாகவே இருந்துவிடுவார்களா? 

எழுத்தின் வழியே சமூகத்தின் மனதை உருக்கி வார்க்கும் கவிஞரின் படைப்புகளுள் ஒன்று "மகள் இருந்தவீடு"  பல மாத,வார, நாள்,இலக்கிய இதழ்களில் அடையாளமாகிவிட்ட பெயர் கவிஞர் ஜெய பாஸ்கரன்.

நாடுவிட்டும் ஊர்விட்டும் ஒருவழியாக தஞ்சைக்கு வந்தபின் சில நற்சிநேகர்கள் கிடைத்தனர். அமெரிக்க டெரன்டோவில் இருந்துகொண்டு தொழிற்கல்வி படித்து பெற்ற பணியிலும்  தமிழ்க்கவிதை படைப்பில் பெயர்பதிக்கும் திருமதி மருதயாழினியின் தந்தை திரு தனபால் அவர்கள் ஒரு நற்சிநேகர். மகள் படைப்புகளில் சொக்கி பீடும் பெருமையும் கொண்டு பரவசமாக என்னிடம் பகிரும் ஒரு அப்பா!  

அவர் அடிக்கடி ஜெயபாஸ்கரன் பெயரைக்குறிப்பிடும்போதெல்லாம் அவர் யாரென விசாரிக்கவில்லை. அதைச்செய்ய வைத்தது இப்போது ஒரு மகளின் அப்பா எனக்களித்த இந்தப் புத்தகம் "மகள் இருந்தவீடு".

தொட்டேன், திறந்தேன், வாசித்தேன், எழுதுகிறேன். வலைப்பூக்களில் அவரை எழுதிய பக்கங்களில் ஒரு சுற்றும் வந்தபின் கொஞ்சம் தன்னடக்கமாகிவிட்டேன். ஏராளமாக எழுதிக் குவித்திருக்கிறார் கவிஞர் ஜெயபாஸ்கரன்.

நம்மை அநாதையாக்கி படிப்படியாக மறைந்துவரும் அம்மியும் குழவியும் பற்றிய நெஞ்சில் கரையும் கவிதையை வலைப்பூவில் படித்ததும் அப்படியே நெஞ்சில் எடைகூடிவிட்டது. நெசாங்கூட்டில் உட்கார்ந்துகொண்டன அம்மியும் குழவியும்: 

"அம்மாவும் குழந்தையும் போல

இன்றும் எனது கிராமத்தில் 

உயர்ந்து இயங்குகின்றன

அம்மிகளும் குழவிகளும்"

"இல்லாமைகளையும் 

இயலாமைகளையும்

என் அப்பாவிடம் சொல்வதை விட

அம்மியிடம் சொல்லி அரைப்பதுதான்

ஆறுதலாக இருந்தது

என் அம்மாவுக்கு.

புரிகிறது அம்மாவின் பல சுமைகள் அம்மியில் அரைபடுவது அறிய கொஞ்சமாவது ஆறுதல். காலம் அம்மா மேல் கொடுக்கும் சுமை எதனால் என்று கவிஞர் மேலும் வாசிக்கவைக்கிறார்.


இந்த அருமை நூலின் 167 பக்கங்களில் முதல் 128 பக்கங்கள் கனமானவை. மகள் கொண்டவை 39 பக்கங்கள். 128 பக்கங்க்களில் ஒருசமூகத்தின் விமர்சனப்பார்வை என்பது இலக்கியோனா என்ற புலமைக்காய்ச்சல் நோய், நுகர்வுக் கலாச்சார நுகத்தடியின் பாரம், கமுக்கங்களைக் கடத்துகிறவர்கள்,   நிலவும் ஒரு ஆய்தக் கிடங்காகிவிடுமோ என்ற அச்சம், ஒரே ஒரு ஆங்கிலச் சொல்லைப்பேசி சொக்கித்திரியும் மயங்கிகள் என பல வற்றிலும் படிம அழகும்,மரபின் சாயலில்  தொடைகள் கூடிய படைப்பை அங்கதம் எள்ளல்களில் உணரவைக்கும் கலை வியப்பைத் தருகிறது.

அதிகப்பக்கங்களின் எடைக்கு நிகரான மனதை உருக்கும் மகள் இருந்தவீடு. வீட்டைப்பிரிந்து வாழும் யாரும் எப்படிகரைந்து கசிவான் என்பது அடியேன் அயலகத்தில் பதினைந்து ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்த அனுபவம். அப்போதெல்லாம் அடிக்கடி நினைப்பேன் திருமணமாகி கணவன் வீட்டில் வாழும் பெண்ணின் மனநிலையும் இப்படித்தானே என்று.அதன் அடித்தளத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன் எங்கள் மகள் வாழ்க்கைப்பட்டுப் போனபின் ஏற்பட்ட சொல்லமுடியாத வாட்டம் பற்றிக்கொண்டது. இந்த மகள் இருந்தவீடு ஒவ்வொரு அப்பாவின் வீடும்தான்

ஒவ்வொரு தலைப்பையும் தாண்டுவதற்குள் முட்டிய கண்ணீர் முழுவதும் கொட்டிவிடும்.

மகளை ஒருவனிடம் பிடித்துக்கொடுத்தால்தான்,கட்டிக் கொடுத்தால்தான் நிம்மதி என்பது எவ்வளவு அருவருப்பாகிவிட்டது. 

* 'மாமியார் வீட்டிலிருந்து

இப்ப எங்க அம்மா வீட்டுக்கு

வந்திருக்கேன்'

என்று யாரிடமோ

சொல்லிக்கொண்டிருக்கிறாய்

உனக்கென்று

ஒரு வீடற்றவளாக!


* மகள் தின்று புதைத்த மாங்கொட்டை முளைத்தது. அதை லாவகமாகப் பிடுங்கி வேறிடத்தில் நட்ட கவிஞருக்கு கைகள் நடுங்கின. எழுதுகிறார்,

பெரும் பொருட் செலவில்

இருநூறு கிலோமீட்டருக்கு அப்பால்

நாங்கள் உன்னை நட்டது

புதிய குழியிலா?

புதை குழியிலா?


* மகள் கல்வியில்,கலைகளில், வாழ்க்கையில் சாதிக்கக் கண்ட கனவுகள்ஆயிரம். 

"இருந்தும்

உனது அத்தனைக் கனவுகளும்

தோற்றுப்போயின

உனக்குக் கல்யாணம்

முடிக்க வேண்டுமென்கிற

எங்கள் ஒற்றைக் கனவிடம்!


* வெளியிலிருந்து வீட்டிற்குள் நுழையும்போது தன் காலணிகளைக் கழற்றுவாள். இன்னொரு ஜோடி இல்லாததை கவனித்துவிட்டு..

"உனது காலணிகளைக் 

கழற்றிக் கொண்டே

என்னுடையதைத் தேடுவாய்

அப்பா எங்கேம்மா?

என்று அடிக்கடி கேட்பது

அணிச்சையாகி இருந்ததுஉனக்கு"

ஜெயபாஸ்கரன் நானாகத்தான் இருந்திருக்கிறார். இல்லாவிட்டால் எப்படி என் மகள் இருந்த வீட்டை இப்படி நெகிழ வரைந்திருப்பார். கவிதை பொது மனித உணர்வின் வார்ப்பாகும்போது அது எல்லார் மனத்திலும், எல்லாமொழிகளுக்குள்ளும் குடிபுகுந்துவிடும்.

இந்நூலின் முதல் கவிதை பெண் குழந்தை பிறப்பைத் தடுக்க, கருவிலேயே கண்டு பதைத்ததும், அதைக் கொன்றதும், கள்ளிப்பால் கரந்து காத்திருந்ததும், நெல்மணியை புகுத்தி மூச்சை நிற்கவைத்ததும்,பருவம் வந்த மறுநாளே பாடப்புத்தகத்தைப் பறித்ததும் சொல்லமுடியாத வலிகளைத் தந்தது சமுதாயம். அது செத்து ஆண்டுகள் ஒடிவிட்டன,


"அன்புத் தாயே

அறிவின் தெளிவே

ஆயிரம் ஆண்டுகள்

அடங்கிக் கிடந்து

அடி வயிற்றில் நீ

அன்று பதுக்கிய

பெரு நெருப்பெல்லாம்

பெண்களாய்ப் பிறந்தன.

...........

அறிவீனர்களின் 

ஆதிக்கத்திமிரை

அறிவுப்பெண்கள்

அடித்துத் தகர்த்தனர்."

அப்பாவுடன் இருந்த வீட்டின் மகள் அறையில் எந்தப் பொருளையும் எடுத்துப் போட்டு விடாதீர்கள், நோட்டுப்புத்தகங்களை கிழித்து வீசிவிடாதீர்கள். அதன் பக்கங்களில் அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். கட்டுமானத்தின் போது அண்ணன் அறைக்கு எதிரே அவள் அறை எதனாலோ குறைந்திருந்தது. " "ஏன்ப்பா எனக்கு மட்டும் சின்ன அறை?" என்று கேட்டதில் விழுந்த அரை  சுவரை இடித்து பெரிதாக்கிக் கொடுத்த பின்னும் என் குற்ற உணர்ச்சி போகவில்லை. மகள் இருந்த வீடு மீண்டும் கண்ணீரை நிரப்புகிறது.

வடிவ  மாற்றம் கலந்து வருவதை விட.  சில மரபுச்சாயல் கவிதைகளை தனி நூலாக்கினால் சிறப்பாக இருக்கும்.

ப.திருநாவுக்கரசு

27/12/24

Thursday, 12 December 2024

 

 

கதைகளின் கதை புகழ்பெற்ற வேள்பாரி சரித்திரப் புதின ஆசிரியர் சு.வெங்கடேசன் விகடனில் எழுதிய ஒரு கட்டுரைத்தொடர். “கதைகளுக்குப்பின்னால் இருக்கும் வரலாற்றுக் குறிப்புகளையும் வரலாற்றுக்குள் செரிமானமாகிக் கிடக்கும் கதைகளையும் பற்றிய கட்டுரைத்தொடர் என்று அவரே முன்னுரையில் குறிப்பிட்டுவிட்டார். முதற் பதிப்பு டிசம்பர் 2018இல் வந்து  இந்த 2024 அக்டோபரில் அடுத்த பதிப்பும் வந்திருக்கிறது. முகநூல் வெளியில் வந்த விளம்பரத்தைப் பார்த்து  அதை வாங்கினேன். 128 பக்கங்களில்.

சு.வெங்கடேசன் நம் மனம் கவர்ந்த பொதுநல,தமிழ்நல,வரலாற்று நலத் தொண்டராக இருப்பதால் ஒரு சிறு தூண்டலுடன் வாங்கினேன். வீண்போகவிடவில்லை அவர்.

வரலாற்றுஆதாரத் தரவுகளைத் துருவித்தேடிக் கிடைக்காமல் போவதும் தேடி ஓய்ந்தபின் தானாக ஒரு நாள் கையில் வந்து விழுவதும் தகுதியான ஆய்வாளர்கள் கைமேல் இட்டபலன்.

தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி நாள் காணும் உ.வே.சா. அவர்கள் சரித்திரமே சிறந்த சான்று. முதன்மை ஆவணங்கள் அத்தகைய அபூர்வமானத் தேடலுக்குப்பின்  கிடைப்பவை. குதிரைகளுக்கு 200 நாட்களுக்கு வெந்நீர்க் காய்ச்ச அடுப்பெரிக்க ஒலைச் சுவடிகளைப்போட்டிருக்கின்ற நெஞ்சை சுடும்வரலாறு  காதுகளில் அமிலம் பாய்ச்சுவதுபோல் உள்ளது. பெரும்பாலானவை விதிகளால் அல்ல சதிகளால் அழிந்தவை.

என் தாத்தா வீட்டில் எங்கள் வீட்டில் மாமாக்கள் வீடுகளில் ஒரு கம்பியில் கடுதாசிகள் தபால்கார்டுகள் இங்கிலாந்து ( INLAND LETTER ) லெட்டர்கள் ரசீதுகள்கொத்தாகக் கோர்த்துக் கிடந்ததும், திண்ணைச் சுவரில்  போடப்பட்ட பச்சிலைப் புள்ளிகள் தெரிவித்த தயிர்,மோர், நெய் அளவு ‘சேர்’ கணக்குகளும்தான் நம்மிடம் சிறிதளவு இருந்த முறையில்லா ஆவணப்பாதுகாப்பு முறைகள். எந்தச் சான்றும் இல்லாத கடன் சண்டைகளில் “இல்லைன்னு துண்டைப்போட்டுத் தாண்டு”தான் ஒரே கடைசி ஆதாரம்.

ஓலை ஆவணங்களுக்குப்பின், கல்வெட்டுகளும்,பட்டயங்களும் ,தாள் பத்திரங்களும் காலத்தில் வளர்ந்தவை. ஆனால் சமூகப் பழக்க வழக்கங்கள் பண்பாட்டுக் கூறுகள், நாடுப்புற சட்டதிட்டங்களுக்கான பதிவேடுகளைத் தேட அன்னப்பறவையும் பன்றியவதாரங்களாலும் கூட முடியாது.மக்கள் கிடைத்தவற்றை பாதுகாத்திருந்தால் ஒழிய கிடைப்பது அரிது.  அந்த அரிதில் நுழைந்து கண்டெடுத்த வாழ்வியல் தொடர்புடைய பதிவுகள்தான் கதைகளின் கதை.

உலகிலே தமிழன் மட்டுமே கண்டு பகைவர் தலைகளை அறுதெறிந்த போர்க்கருவி வளரி. கும்பெனியாரின் வருகைக்குப்பின் சுவடு அற்று ஒழிந்தது தமிழனின் போர்க்கருவியல்ல கைகள். சோகம் கப்பிய அந்தவரலாற்றில் அந்தக் கருவியின் உலோக வாசனை மட்டுமே கதைகளில் மிதந்ததை மிஞ்சி மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் பட்ட சாமிக்குப் படையலாக வைக்கப்பட்டிருந்த 200 வளரி எனும் பண்டைத்தமிழரின் எறிபடைகளை- காலம் காலமாக எதிரிகளின் கண்களுக்கு எட்டும் முன் தலைகளைக் கொய்துபோன அரிதினும் அரிதான போர்க்கருவியைக் கண்டு எழுதிய மெய் சிலிர்க்கும் பதிவு. 





அரிதில் கட்டுரை ஆசிரியர் கண்டு சொன்ன வளரிகள்


வளரி கதையல்ல தமிழன் கையிலிருந்து அவற்றைப் பறிக்க வெள்ளையன் தடைச்சட்டம் போட்டு நாடுமுழுக்க பறித்து ஒழித்தபின் அழிந்த சுவடில் கிடைத்த இருப்புச் சுவடுகள் பற்றிய கட்டுரை “வளரி”

12 தலைப்புகளில் ஒன்றைத்தான் சுட்டியிருக்கிறேன். பிரிட்டிஷார் 1830 ஆம் ஆண்டில் கொண்டுவந்த ‘போக்கிரி ஒழிப்புப் சட்டம்” சமவெளிகளில் எந்த நேரத்திலும் சந்தேகப்படும் யாரையும் சுட்டுக்கொல்ல ரானணுவத்துக்கு வாய்ப்புக் கொடுத்த சட்டம். அதன் பேரில் போக்கிரிகள் என்ற வசைச் சொல்  காட்டிகொடுத்த ரத்தபலிகள். கேட்பாரற்று சுடப்பட்ட அடிநிலை மக்கள் பற்றிய அவலம்தான் ‘போக்கிரி’ என்ற கட்டுரை. எஞ்சிய பத்தையும் தயவு செய்து படியுங்கள்.

முடிக்காமல் கீழேவைக்க முடியாத நூல்.

சு.வெங்கடேசன் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு சொல்லப்படும் நியாயத்தின் குரல். மக்களில் அடித்தட்டு மேல்தாட்டு ஆட்சித்தட்டு அதிகாரத்தட்டு என்ற வசதிகள் உள்ளவரை ஆன்மநேயமும் உயிர் இரக்கமும் இல்லாத கொலைப் பசிகள் ஓய்வதில்லை என்ற அடிநாதம் ஒலிக்கும் கட்டுரைகள் அவை. நன்றி சு.வெங்கடேசனார் அவர்களே. 

உங்கள் சுறுசுறுப்பினால் எங்கள் உறக்கம் பாழாய்ப் போகட்டும்.

உங்கள்

அரசு



படங்கள் நன்றி விகடன்




Tuesday, 10 December 2024

 



புலவன் தோன்றினான்

                                                        (மலர்ந்த நாள்: 11-12-1882)

தமிழரின் உயிநிகர் தமிழ் நிலை தாழ்ந்ததால்

இமை திறவாமல் இருந்த நிலையில்

தமிழகம், தமிழுக்குத் தகும் உயர்வளிக்கும்

தலைவனை எண்ணித் தவங்கிடக்கையில்

இலகு பாரதிப் புலவன் தோன்றினான்.

பைந்தமிழ்த் தேர்ப்பாகன் அவனொரு

செந்தமிழ்த் தேனீ, சிந்துக்குத் தந்தை!

குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்

கவிழ்க்கும் பகையைக் கவிழ்க்கும் கவிமுரசு;

நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா:

காடு கமழும் கற்பூரச் சொற்கோ!

 

என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்

தமிழால் பாரதி தகுதி பெற்றதும்

தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்

(பாரதி மாணவர் பாரதிதாசன் தம் குருவுக்கு)

                                                                  

Monday, 9 December 2024

 



இன்னும் ஓரே ஒருவாட்டி

ப.திருநாவுக்கரசு

********************************

 கண்மூடிவிட்ட என்

செல்லம் காருகுட்டியுடன்

மீண்டும் நான்

பிறந்த வீட்டில்

குடிபோக ஆசை.

 

அன்று வர மறந்த

விருந்தினர்க்கு

அருஞ்சுவையில்

அமுதளிக்க ஆசை.


தாண்டிப்போன காலவண்டி

தடம்பிறழும் முன்னே

தந்தைதாய் தாள்பற்றி எந்தன்

கண்களில் ஒற்றிக்கொள்ள ஆசை.


தோண்டி எடுத்தாலும்

புதைகுள்ளே போகப்பார்க்கும்

வேண்டுதல் எல்லாமும் 

விரையமாகாது

விளைந்து வர ஆசை.


மாண்டால் புரிவதெல்லாம்

மனுஷ வாழ்வில் புரியாதோ?

மழைநாள் முடிந்தால்தான்

குடைமேல் மதிசெலுமோ?

 

            குழந்தைகள் விளையாட்டில்

            இன்னும் ஒரு தாட்டி 

            ஒரே ஒரு வாட்டி

            கேட்பதுதான் நானும் கேட்கிறேன்

             இன்னும் ஒரே ஒரு வாட்டி

                                       *****



Thursday, 5 December 2024

மலர்ந்தும் மலராத

 ப.திருநாவுக்கரசு





 



 

உறவென்று எண்ணி

உள்ளத்தைத் திறந்தால்

உள்ளறுத்துச் சென்று

புறம்நின்று நகைக்கும்!

 

நட்பென்று நாடி

நன்மைசெய ஓடி

நலம்செய்து முடித்தால்

நஞ்சாகிநாசமாகும்!

 

இளமைதரும் முடிவும்

முதுமைபெறா விடையும்

புலமைசெயும் தவறும்

தலைமைபெறும் சரிவும்

 

கடமைவழி தடையும்

செழுமைவரை உறவும்

வறுமைதொட பிரிவும்

நூல்கள்தரா வழியும்

 

பார்வைபெறா விழியும்

பழகப் பழக மாறும்!

 

விலக விலக முகங்களும்தான்!

 

  

Monday, 2 December 2024

 

இல்லாதது இல்லை

23/7/2003 தஞ்சாவூர் ஆறாம் புத்தகத் திருவிழா

பேச்சு: ப.திருநாவுக்கரசு

புத்தகம், வாசிப்பு என்ற இரண்டினுள் பலவற்றை பல்வேறு அறிஞர்கள் பல தலைப்புகளில் முற்பகல் நிகழ்ச்சியில் கடந்த 9 நாட்களாக உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இன்று எனக்கு முன்னே,அன்பு மைத்துனர் கரந்தை ஜெயக்குமார் உரைக்குப்பின்  மிகப்பெரிய இலக்கிய ஆளுமை கவிஞர் நா.விச் வநாதன் தமிழ் இலக்கியத்தின் மரபும் நவீனமும் என்ற தலைப்பில் மிக நுணுக்கமான அறியவேண்டிய கருத்துகளை வழங்கி அமர்ந்திருக்கிறார்கள். அடியேனுக்கு தலைப்பு தரப்படவில்லை-என்னையே தெரிவுசெய்ய வேன்டினார்கள். அவ்வகையில் முனைவர் மணிமாறன் அவர்களுக்கும் ஏற்பட்டுக் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த் நன்றியைத் தேரிவித்துக் கொள்கிறேன்.



அடியேன் ஒரு வாசிப்பாளனாக அடைந்த ஒர் அனுபவத்தை –எழுத்து எவ்விதம் எழுத்தப்பட்டதும் படைத்தவரைவிட்டு வாசகரிடம் வசதியாக குடிஏறி ஒரு ரசனையைத் தூண்டி மேலும் வாசிக்க வைக்கிறது எனும் விதத்தில் குறிப்பிட்ட ஒரு தொடர் பலர் கைவண்ணங்களில் எவ்விதம் சிந்திக்கவைக்கிறது என்ற அனுபவத்தை உங்களோடு  பகிரவே ஒரு தலைப்பைக் கொடுத்தேன்.

“இல்லாதது இல்லை” எனும் தொடர் நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளது. இப்போதெல்லாம் “a-z” மிகவும் பிரபலமான வாசகம். நுகர்வு கலாச்சாரம் வணிகமயத்தினால் நம்மிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அந்தக்கடையில் இல்லாத பொருளே இல்லை, அந்த நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்று சொன்னவுடன் நாம்  தேடலின் எல்லைக்கே சென்றுவிடுவோம்.

இல்லாதது இல்லை என்பதை வேறு பதவுரையில் சொன்னால் எது இல்லையோ அது இல்லாதது. அதை இருப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது.  எனவே இருப்பதுபோல் தெரிந்து அது இல்லாமல் போவதையும் இல்லாதது போல் தோன்றி அது இருப்பதை உணர்வதும்தான் நாம் பலரும் அனுபவத்தில் பார்ப்பது. கயறைப் பார்த்து அதைப் பாம்பாகப் பார்த்து பதறுவதும் மெய்யாலுமே ஒரு பாம்பைப் பார்த்தவன் ஏதோ கயறு என்று மிதித்துவிடுவதும் உண்டு. சிவ வாக்கியார் சொல்கிறார், “ இல்லை இல்லை என்று இயம்புகின்ற ஏழைகாள், இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்னலாகுமோ?”

இந்தத்  தெளிவற்றும் தெளிவோடும் பார்க்கும் பார்வையை மனிதன் அனுபவிப்பதை எழுத்தாளர்கள் சொல்கொண்டு விளக்கும் சித்திரத்தை நாம் தமிழ் எழுத்துலகில் கண்டு ரசிக்கலாம். அது ஒரு மெய்யியல் பார்வை, ஒரு இலக்கியப்பார்வை ஏன் ஒரு பாமரன் பார்வையும்கூட. நீ இருப்பதும் ஒன்று இல்லாததும் ஒன்றுதான், நீ வேலை செய்வதும்  வேலைசெய்யாமல் இருப்பதும் ஒன்றேதான் என்று, இந்தப்  புத்தகத்தை படிப்பதும் ஒன்று படிக்காமல் இருப்பதும் ஒன்று என்று நாம் பேசுகிறோம்.





ரெண்டும்கெட்டான் நிலைபோன்ற ஒன்றை எப்படி வார்த்தைகளால் சொல்வது? அது ஒரு சித்துவிளையாட்டு. வரும் ஆனால் வராது என்ற சினிமா காமெடியை நாம் மறக்கமாட்டோம். சினிமாவில் பாடல்கள் எழுதிக் குவித்த கவியரசர் கண்ணதாசன் மிக அழகாகப் பயன்படுத்துவார்.

“தெய்வம் என்றால் அது தெய்வம்,

வெறும் சிலை என்றால் அது சிலைதான்

உண்டென்றால் அது உண்டு

இல்லை என்றால் அது இல்லை”

இப்படி ஒரு தத்துவம்  அதையே காதலிக்குச் சொல்லும்போது 

                       “ இடையா அது இடையா -அது

                        இல்லாததுபோல் இருக்குது”

இன்னும் ரசனைகூடிய விதமாக ஒரு கவிதை நூலிற்கான விமர்சனத்தில் குறிப்பிடுவார். கறுப்பு மலர்கள் எனும் அற்புதமான் புதுக்கவிதை நூலை கவிஞர் நா.காமராசன் கவியரசரிடம் கொடுத்து ஒரு விமசர் சன உரை கேட்டார். அதற்கு கவியாரசர் அக்கவிதைகளை வெகுவாகப் பாராட்டிவிட்டு அது எவ்விதம் அழகானது என்பதை விளக்கும் விதம் இதுதான்: “ அவர் கவிதைகள் வடக்கத்திய மங்கையர்போல் முழுக்கவும் மூடிடாமல் கேரள மாதர்போல் முழுக்கவும் திறந்துவிடாமல் தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமலும் அழகு காட்டுகின்றன.

கண்ணதாசனின் அத்வைத தத்துவப் பார்வைதான் இலக்கியங்களில், பாடல்களில் அவ்வளவு அழகாக

                 “ பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு

                   ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு

                  புரியாமலே இருப்பான் ஒருவன்

                  அவனைப் புரிந்துகொண்டால்

                  அவன்தான் இறைவன்”

ஏன்று பாடுகிறார். வைணவக் கோட்பாட்டில் ஆழ்வார்கள் பார்வையும் அப்படி. அதிகப்படியாக அவற்றைப் படித்ததால் கவிஞரும் அப்படிப் படைக்கிறார். நம்மாழ்வாரிடம் ஒரு பக்தன் கேட்கிறான் “இறைவன் இருக்கிறானா இல்லையா?” அதற்கு நம்மாழ்வார்,

               உளன் எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்

              உளன் அலன் எனில் அலன் அவன் அருவம்  அவ்வருவுகள்

              உளன் என இலன் என் இவைகுணம் உடைமையில்

               உளன்  இருதகைமையொடு  ஒழிவு இலன்  பரந்து.

19 ஆம் நுற்றாண்டின் தலைசிறந்த வடலூரார் தம் அருட்பெருஞ்சோதி அகவலில் இறைத்தன்மையை

                “உரு அதில் அருவும், மருவதில் உருவும்

                 அருளியல் அமைத்த அருட்பெருஞ்சோதி”

என்பதன் பொருளும் அதுதான்.

மெய்யியல் பார்வையில் உளன் இலன் என்பதை சமுதாய முன்னேற்றக் கருத்துள்ளவர்கள் பார்வையையும் கவனிக்கவேண்டும்.

 

               “கடவுள் இருப்பதும் இல்லை என்பதும்

               சபைக்கு உதவாத வெறும்பேச்சு-நாம

               கஞ்சிக்கு இல்லாததை மறந்தாச்சு”

எது இல்லாதது என்ற கவலையில் மாறுபட்ட பார்வை இது. பாவேந்தரும்

            “இலையே உணவிலையே கதி இலையே எனும் நிலைமை

            இனிமேல் இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்” 

எது இல்லாததோ அதைக்கொண்டுவா என்று முரசறைகிறார்.

கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை ஆனால் யுத்தம் இருக்கிறது பாரதி பார்வையில்.

புதுக்கவிதை உலகில் தனக்கே உரிய அங்கதம் ததும்பும் கவிதைகளை யாத்தவர் கவிஞர் மீரா.  மீராவின் ஊசிகளில்,       இருக்கிறார் கடவுள்

இல்லை கடவுள்

வாதம் பிறந்தது

மோதல் வளர்ந்தது

இப்பொது இல்லை இங்கே ஒருவர்

இருக்கிறார் ஒருவர் தலை மறைவாக

போத்தனூர் காவலர்

புலனாய்கிறார்”

கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் பாரதியின் குயில் பாட்டைப்போல பாட்டு வெளியில் பேசியதை அப்படியே பொருள்கொள்ளாமல் மறைபொருளை அதாவது இல்லாததின் இருப்பைக் காண்பதாகும். ஒரு குயில்,குரங்கு,காளை,கவிஞர் இவர்களுக்கிடையிலான காதல் தோல்விக் கதையைச் சொல்லிவிட்டு “வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதேனும் சற்றே இடம் இருந்தால் கூறுங்கள் என்று முடித்திருப்பார் பாரதி.

மீராவின் மிக எளிமையான ஒரு எள்ளல் கவிதை இல்லாமை பற்றியது.”

மனைவி என்றும் வாழ்க்கைத் துணைவி என்றும்

மணித்தமிழில் இணையான சொல்லிருக்க

இல்லாள் என்றொரு சொல் ஏன்?

இல்லத்தை ஆளும் இயல்புடையால் என்பதால்

இல்லாள் எனப்பட்டாள் என்பர்....என்றாலும்

அரிசியில்லை உப்பில்லை

அடுப்பெரிக்க விறகில்லை

கறிக்கடைக்குச் சென்றுவர

கையில் பணமில்லை என்று தினம்

மூன்றெழுத்துப் பல்லவியை

நின்றிசக்கும் காரணத்தால்

நேரிழையாளை முன்னோர்

இல்லாள் என்ன்றார் என்பேன்”

 

இல்லாமல் இருப்பதை கவிஞர் அறிவுமதி ஒரு காதலில் இப்படிச் சொல்கிறார்,

மேல் இமைகளில் நீ இருக்கிறாய்

கீழ் இமைகளில் நான் இருக்கிறேன்

இந்தக் கண்கள் தூங்க்கிவிட்டால் என்ன?

இல்லாமல் இல்லை இருக்கிறோம்!

திருத்தி எழுதிய தீர்ப்புகளில் கவிஞர் வைரமுத்து சொல்லும் விதம் இது:

மகன் கேட்டான்

“ஏம்பா நிலா

சூம்பிப் போச்சு?

தகப்பன் சிரித்தான்

அதுக்கும் நம்மைப்போல்

மாசக்கடைசியோஎன்னவோ மகனே!

என்னதான் ஓரு முழுநிலவானாலும் மதிகெட்டுப்போனால் ஒன்றுமில்லாமல் போய்விடுகிறது. இது மிக ஆழமாகத் தேடவேன்டிய ஒன்று

கவிஞர் பஞ்சு வானம்பாடிக்கூட்டதில் ஒரு தனி பார்வை கொண்டவர் சிறந்த விமர்சகரும்கூட. அவர்சொன்னார் எல்லாம் இருந்தும் இல்லாமல் போனது எது என்று:

ஏண்ணெய் தடவினோம்

போர்வையால் மூடினோம்

சுருள்வத்தி வைத்தோம்

பசை தடவினோம்

மின்னணு கருவியில்

மாத்திரை கொளுத்தினோம்...

கொசுக்கடியிலிருந்து

இப்படித்

தப்பிக்க முயற்சிப்பதே

வாழ்க்கை ஆயிற்று

அன்று முதல் இன்று வரை”

என் அன்பிற்குரியவர்களே....

மெய்யியல் பார்வையில் இந்த அண்டம் இருப்பதும் இல்லாததுமான நேர் எதிர்மறை சக்திகளில் இயங்குவது மூன்றாம்பொது நூற்றாண்டில்  சீனா கண்ட மெய்யியல் “இங் யங்” எனும் தத்துவம். நான் அதை இங்கும் அங்கும் என்று தமிழில் சொல்வதுண்டு. இந்த உலகம் இருளும் ஒளியும், உணவும் பசியும், வளமையும்,ஏழ்மையும், ஆணும் பெண்ணும், , மழையும் வெயிலும், காற்றும் புழுக்கமும் என்ற முரண் அமைப்பில் இயங்குவது என்ற கோட்பாடுதான் இங் யங். இதன் வழியாக எதை பார்த்தாலும் இல்லாதது இருப்பது விளங்கும்.

அய்யன் வள்ளுவரின் நூலைப் பற்றி தமிழ்த்தென்றல் திருவிக அவர்கள்

“,இல்லாதது இல்லை இணையில்லை

முப்பாலுக்கு இன்நிலத்தே”

என்று  சொல்லியதும் நம் அருமை குறளில் இல்லாதது இருப்பது என்பதை மிக அழகாகச் சொல்வார்.

நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ற குறளிலும்,     ''இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவன் மாணாக்கடை” எனும் குறளிலும் இல்லாததில்லை என்று கூறி முடிக்கிறேன்.

 நன்றி.

 

 

 

 

 


  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...