இல்லாதது இல்லை
23/7/2003 தஞ்சாவூர் ஆறாம் புத்தகத் திருவிழா
பேச்சு: ப.திருநாவுக்கரசு
புத்தகம், வாசிப்பு என்ற இரண்டினுள் பலவற்றை பல்வேறு அறிஞர்கள்
பல தலைப்புகளில் முற்பகல் நிகழ்ச்சியில் கடந்த 9 நாட்களாக உரையாற்றி சிறப்பு சேர்த்திருக்கிறார்கள்.
இன்று எனக்கு முன்னே,அன்பு மைத்துனர் கரந்தை ஜெயக்குமார் உரைக்குப்பின் மிகப்பெரிய இலக்கிய ஆளுமை கவிஞர் நா.விச் வநாதன் தமிழ் இலக்கியத்தின்
மரபும் நவீனமும் என்ற தலைப்பில் மிக நுணுக்கமான அறியவேண்டிய கருத்துகளை வழங்கி அமர்ந்திருக்கிறார்கள்.
அடியேனுக்கு தலைப்பு தரப்படவில்லை-என்னையே தெரிவுசெய்ய வேன்டினார்கள். அவ்வகையில் முனைவர்
மணிமாறன் அவர்களுக்கும் ஏற்பட்டுக் குழுவிற்கும் என் நெஞ்சார்ந்த் நன்றியைத் தேரிவித்துக்
கொள்கிறேன்.
அடியேன் ஒரு வாசிப்பாளனாக அடைந்த ஒர் அனுபவத்தை –எழுத்து
எவ்விதம் எழுத்தப்பட்டதும் படைத்தவரைவிட்டு வாசகரிடம் வசதியாக குடிஏறி ஒரு ரசனையைத்
தூண்டி மேலும் வாசிக்க வைக்கிறது எனும் விதத்தில் குறிப்பிட்ட ஒரு தொடர் பலர் கைவண்ணங்களில்
எவ்விதம் சிந்திக்கவைக்கிறது என்ற அனுபவத்தை உங்களோடு பகிரவே ஒரு தலைப்பைக் கொடுத்தேன்.
“இல்லாதது இல்லை” எனும் தொடர்
நம் அன்றாடப் பயன்பாட்டில் உள்ளது. இப்போதெல்லாம் “a-z” மிகவும் பிரபலமான வாசகம். நுகர்வு
கலாச்சாரம் வணிகமயத்தினால் நம்மிடம் அதிகம் புழக்கத்தில் உள்ளது. அந்தக்கடையில் இல்லாத
பொருளே இல்லை, அந்த நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்று சொன்னவுடன் நாம் தேடலின் எல்லைக்கே சென்றுவிடுவோம்.
இல்லாதது இல்லை என்பதை வேறு பதவுரையில் சொன்னால் எது இல்லையோ
அது இல்லாதது. அதை இருப்பதாக எடுத்துக்கொள்ள முடியாது. எனவே இருப்பதுபோல் தெரிந்து அது இல்லாமல் போவதையும்
இல்லாதது போல் தோன்றி அது இருப்பதை உணர்வதும்தான் நாம் பலரும் அனுபவத்தில் பார்ப்பது.
கயறைப் பார்த்து அதைப் பாம்பாகப் பார்த்து பதறுவதும் மெய்யாலுமே ஒரு பாம்பைப் பார்த்தவன்
ஏதோ கயறு என்று மிதித்துவிடுவதும் உண்டு. சிவ வாக்கியார் சொல்கிறார், “ இல்லை இல்லை
என்று இயம்புகின்ற ஏழைகாள், இல்லையென்று நின்றதொன்றை இல்லையென்னலாகுமோ?”
இந்தத் தெளிவற்றும்
தெளிவோடும் பார்க்கும் பார்வையை மனிதன் அனுபவிப்பதை எழுத்தாளர்கள் சொல்கொண்டு விளக்கும்
சித்திரத்தை நாம் தமிழ் எழுத்துலகில் கண்டு ரசிக்கலாம். அது ஒரு மெய்யியல் பார்வை,
ஒரு இலக்கியப்பார்வை ஏன் ஒரு பாமரன் பார்வையும்கூட. நீ இருப்பதும் ஒன்று இல்லாததும்
ஒன்றுதான், நீ வேலை செய்வதும் வேலைசெய்யாமல்
இருப்பதும் ஒன்றேதான் என்று, இந்தப் புத்தகத்தை
படிப்பதும் ஒன்று படிக்காமல் இருப்பதும் ஒன்று என்று நாம் பேசுகிறோம்.
ரெண்டும்கெட்டான் நிலைபோன்ற ஒன்றை எப்படி வார்த்தைகளால் சொல்வது?
அது ஒரு சித்துவிளையாட்டு. வரும் ஆனால் வராது என்ற சினிமா காமெடியை நாம் மறக்கமாட்டோம்.
சினிமாவில் பாடல்கள் எழுதிக் குவித்த கவியரசர் கண்ணதாசன் மிக அழகாகப் பயன்படுத்துவார்.
“தெய்வம்
என்றால் அது தெய்வம்,
வெறும்
சிலை என்றால் அது சிலைதான்
உண்டென்றால்
அது உண்டு
இல்லை
என்றால் அது இல்லை”
இப்படி ஒரு தத்துவம்
அதையே காதலிக்குச் சொல்லும்போது
“ இடையா அது இடையா -அது
இல்லாததுபோல் இருக்குது”
இன்னும் ரசனைகூடிய விதமாக ஒரு கவிதை நூலிற்கான விமர்சனத்தில்
குறிப்பிடுவார். கறுப்பு மலர்கள் எனும் அற்புதமான் புதுக்கவிதை நூலை கவிஞர் நா.காமராசன்
கவியரசரிடம் கொடுத்து ஒரு விமசர் சன உரை கேட்டார். அதற்கு கவியாரசர் அக்கவிதைகளை வெகுவாகப்
பாராட்டிவிட்டு அது எவ்விதம் அழகானது என்பதை விளக்கும் விதம் இதுதான்: “ அவர் கவிதைகள்
வடக்கத்திய மங்கையர்போல் முழுக்கவும் மூடிடாமல் கேரள மாதர்போல் முழுக்கவும் திறந்துவிடாமல்
தமிழகப் பெண்கள் போல் ஒதுங்கியும் ஒதுங்காமலும் அழகு காட்டுகின்றன.
கண்ணதாசனின் அத்வைத தத்துவப் பார்வைதான் இலக்கியங்களில்,
பாடல்களில் அவ்வளவு அழகாக
“ பூஜ்ஜியத்திற்குள்ளே ஒரு
ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு
புரியாமலே இருப்பான் ஒருவன்
அவனைப் புரிந்துகொண்டால்
அவன்தான் இறைவன்”
ஏன்று பாடுகிறார். வைணவக் கோட்பாட்டில் ஆழ்வார்கள் பார்வையும்
அப்படி. அதிகப்படியாக அவற்றைப் படித்ததால் கவிஞரும் அப்படிப் படைக்கிறார். நம்மாழ்வாரிடம்
ஒரு பக்தன் கேட்கிறான் “இறைவன் இருக்கிறானா இல்லையா?” அதற்கு நம்மாழ்வார்,
உளன்
எனில் உளன் அவன் உருவம் இவ்வுருவுகள்
உளன்
அலன் எனில் அலன் அவன் அருவம் அவ்வருவுகள்
உளன்
என இலன் என் இவைகுணம் உடைமையில்
உளன் இருதகைமையொடு ஒழிவு இலன் பரந்து.
19 ஆம் நுற்றாண்டின் தலைசிறந்த வடலூரார் தம் அருட்பெருஞ்சோதி
அகவலில் இறைத்தன்மையை
“உரு
அதில் அருவும், மருவதில் உருவும்
அருளியல் அமைத்த அருட்பெருஞ்சோதி”
என்பதன் பொருளும் அதுதான்.
மெய்யியல் பார்வையில் உளன் இலன் என்பதை சமுதாய முன்னேற்றக்
கருத்துள்ளவர்கள் பார்வையையும் கவனிக்கவேண்டும்.
“கடவுள்
இருப்பதும் இல்லை என்பதும்
சபைக்கு
உதவாத வெறும்பேச்சு-நாம
கஞ்சிக்கு
இல்லாததை மறந்தாச்சு”
எது இல்லாதது என்ற கவலையில் மாறுபட்ட பார்வை இது. பாவேந்தரும்
“இலையே
உணவிலையே கதி இலையே எனும் நிலைமை
இனிமேல்
இலை எனவே முரசறைவாய் முரசறைவாய்”
எது இல்லாததோ அதைக்கொண்டுவா என்று முரசறைகிறார்.
கத்தியும் இல்லை ரத்தமும் இல்லை ஆனால் யுத்தம் இருக்கிறது
பாரதி பார்வையில்.
புதுக்கவிதை உலகில் தனக்கே உரிய
அங்கதம் ததும்பும் கவிதைகளை யாத்தவர் கவிஞர் மீரா. மீராவின் ஊசிகளில், “ இருக்கிறார்
கடவுள்
இல்லை கடவுள்
வாதம் பிறந்தது
மோதல் வளர்ந்தது
இப்பொது இல்லை இங்கே ஒருவர்
இருக்கிறார் ஒருவர் தலை மறைவாக
போத்தனூர் காவலர்
புலனாய்கிறார்”
கனவுகள்+கற்பனைகள்=காகிதங்கள் பாரதியின் குயில் பாட்டைப்போல
பாட்டு வெளியில் பேசியதை அப்படியே பொருள்கொள்ளாமல் மறைபொருளை அதாவது இல்லாததின் இருப்பைக்
காண்பதாகும். ஒரு குயில்,குரங்கு,காளை,கவிஞர் இவர்களுக்கிடையிலான காதல் தோல்விக் கதையைச்
சொல்லிவிட்டு “வேதாந்தமாக விரித்துப் பொருளுரைக்க யாதேனும் சற்றே இடம் இருந்தால் கூறுங்கள்
என்று முடித்திருப்பார் பாரதி.
மீராவின் மிக எளிமையான ஒரு எள்ளல் கவிதை இல்லாமை பற்றியது.”
மனைவி
என்றும் வாழ்க்கைத் துணைவி என்றும்
மணித்தமிழில்
இணையான சொல்லிருக்க
இல்லாள்
என்றொரு சொல் ஏன்?
இல்லத்தை
ஆளும் இயல்புடையால் என்பதால்
இல்லாள்
எனப்பட்டாள் என்பர்....என்றாலும்
அரிசியில்லை
உப்பில்லை
அடுப்பெரிக்க
விறகில்லை
கறிக்கடைக்குச்
சென்றுவர
கையில்
பணமில்லை என்று தினம்
மூன்றெழுத்துப்
பல்லவியை
நின்றிசக்கும்
காரணத்தால்
நேரிழையாளை
முன்னோர்
இல்லாள்
என்ன்றார் என்பேன்”
இல்லாமல் இருப்பதை கவிஞர் அறிவுமதி ஒரு காதலில் இப்படிச்
சொல்கிறார்,
மேல்
இமைகளில் நீ இருக்கிறாய்
கீழ்
இமைகளில் நான் இருக்கிறேன்
இந்தக்
கண்கள் தூங்க்கிவிட்டால் என்ன?
இல்லாமல்
இல்லை இருக்கிறோம்!
திருத்தி எழுதிய தீர்ப்புகளில் கவிஞர் வைரமுத்து சொல்லும்
விதம் இது:
மகன்
கேட்டான்
“ஏம்பா
நிலா
சூம்பிப்
போச்சு?
தகப்பன்
சிரித்தான்
அதுக்கும்
நம்மைப்போல்
மாசக்கடைசியோஎன்னவோ
மகனே!
என்னதான் ஓரு முழுநிலவானாலும் மதிகெட்டுப்போனால் ஒன்றுமில்லாமல்
போய்விடுகிறது. இது மிக ஆழமாகத் தேடவேன்டிய ஒன்று
கவிஞர் பஞ்சு வானம்பாடிக்கூட்டதில் ஒரு தனி பார்வை கொண்டவர்
சிறந்த விமர்சகரும்கூட. அவர்சொன்னார் எல்லாம் இருந்தும் இல்லாமல் போனது எது என்று:
ஏண்ணெய்
தடவினோம்
போர்வையால்
மூடினோம்
சுருள்வத்தி
வைத்தோம்
பசை
தடவினோம்
மின்னணு
கருவியில்
மாத்திரை
கொளுத்தினோம்...
கொசுக்கடியிலிருந்து
இப்படித்
தப்பிக்க
முயற்சிப்பதே
வாழ்க்கை
ஆயிற்று
அன்று
முதல் இன்று வரை”
என் அன்பிற்குரியவர்களே....
மெய்யியல் பார்வையில் இந்த அண்டம் இருப்பதும் இல்லாததுமான
நேர் எதிர்மறை சக்திகளில் இயங்குவது மூன்றாம்பொது நூற்றாண்டில் சீனா கண்ட மெய்யியல் “இங் யங்” எனும் தத்துவம்.
நான் அதை இங்கும் அங்கும் என்று தமிழில் சொல்வதுண்டு. இந்த உலகம் இருளும் ஒளியும்,
உணவும் பசியும், வளமையும்,ஏழ்மையும், ஆணும் பெண்ணும், , மழையும் வெயிலும், காற்றும்
புழுக்கமும் என்ற முரண் அமைப்பில் இயங்குவது என்ற கோட்பாடுதான் இங் யங். இதன் வழியாக
எதை பார்த்தாலும் இல்லாதது இருப்பது விளங்கும்.
அய்யன் வள்ளுவரின் நூலைப் பற்றி தமிழ்த்தென்றல் திருவிக அவர்கள்
“,இல்லாதது
இல்லை இணையில்லை
முப்பாலுக்கு
இன்நிலத்தே”
என்று சொல்லியதும்
நம் அருமை குறளில் இல்லாதது இருப்பது என்பதை மிக அழகாகச் சொல்வார்.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்ற குறளிலும், ''இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவன் மாணாக்கடை” எனும் குறளிலும் இல்லாததில்லை என்று கூறி முடிக்கிறேன்.
நன்றி.

.jpg)
No comments:
Post a Comment