கண்டறியாதன… …
பிரும்மாண்ட
பொதுக்கூட்டம்
கலைந்தது திடலில்.
குப்பைகள் அகற்றிய
என்தோழன்
கண்டறியாதன கண்டான்.
தலைவனுக்கு மூச்சுத்தினறக்
குளிப்பாட்டிய சோப்புக்கட்டிகள்
சிதறிக் கிடந்தன.
அடுக்கு மொழிகளும் வாழ்த்துகளும்
மிதிபட்டுச்சிதறி
குற்றுயிராய்க் கிடந்தன.
எதிரியை வசைபாடி
தங்கள் தலையில் துப்பிக்கொண்ட
எச்சில் ஈரம்பட்டுக் கிடந்தது பூமி.
தாக சாந்தி தந்துவிட்டு
உடைத்துக் கொண்ட
மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த
குருதியில் குந்த அடித்துக்கொண்டன
ஈக்கள்.
மாநகர ஏமாளிகள்
சூட்டிய மலர்மகுடம்
மண்ணில் குப்புறக்கிடந்து.
கடலைப்பொட்டலக்
காகிதக்குப்பையுடன்
கண்ணீர் மகஜர்கள்
கசங்கிக்கிடந்தன.
தின்ன இரைதேடி
திடலுக்குவந்த
நாயும் குட்டியும்
தலையிலடித்துக்கொண்டு
திரும்பிச்சென்றன.
காரணம் தெரியாமல்
கழன்ற காலணிகள்
போக மனமில்லாமல்
மயங்கிக் கிடந்தன.
ஃஃஃஃஃ
ப. திருநாவுக்கரசு






