Sunday, 28 June 2026

அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்


        oooOooo

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள  சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து  சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது.

பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை குறையாத “சோழநாட்டில் பெளத்தம்” என்ற அரிய பலரும் அறியவேண்டிய நூலை சரித்திர ஆய்வுப்பட்டியலுக்குள் அளித்திருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

இந்த நூல் அதன் ஆய்வு எல்லையால் குறுகியதுபோல் தோன்றலாம். ஆனால் அது சோழநாட்டு எல்லை. அதனுள் இன்று பிரிக்கப்பட்டுள்ள ஒன்பது தனிமாவட்டங்கள் உள்ளன.எனவே தேடலில் நடந்த,அலைந்த,சுற்றிய,பயணித்த பாடுகளை அறியவே மலைப்பு தருகிறது. அந்த வரலாற்றின் அடையாளங்கள் காணப்பட்ட விதத்திற்கும், கண்டறியப்பட்ட முறைக்கும், நூலாசிரியரின் பல்லாண்டுகாலத் தேடலுக்கும் கடும் உழைப்புக்கும் எல்லையில்லை. அந்தக் கடும் முயற்சியிலும்  ஆய்வுநெறி அறம் ஒளிர்கிறது, ஆய்வு நுணுக்கம் விரித்துக் காட்டப்படுகிறது,  உள்ளவாறு காட்டும் ஒளிப்படங்கள் உறுதுணைபுரிகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தடயங்கள் இழப்பில் சோகமும் கிடைப்பில் பூரிப்பும் எண்ணிக்கையால் பெருமையும் கலந்த அரிதான வரலாற்று உணர்வுபொதிந்த எழுத்தாகவும் உள்ளது. பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆய்வியல் நெறிகள் நூலில் ஆய்வாளருக்குரிய தகுதிகள் பத்தினைக் குறிப்பிடுகிறார்கள். இந்நூலாசிரியர் அத்தகுதிகள் அனைத்தையும் பெற்றிருப்பதை அறியமுடிகிறது.

கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் தெளிவும் முழுமையும்  கொண்டிருப்பது வரலாற்று ஆய்வில் அரிது. மதப்போர்களில் தாக்கப்பட்டு, உடைந்து, உறுப்புகள் சிதைந்து, கவனிப்பாரற்று, மண்மூடிப்போய், களவாடப்பட்டு, கடத்தப்பட்டு பார்வைக்கு உதவாத சிற்ப ஆதாரங்களையும் மெய்ப்பிக்க எடுத்திருக்கும் நூலாசிரியர் முயற்சி கடுமையானதாகும். சோழ நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்குச் சென்று திரட்டப்பட்டவற்றில் பல அறிஞர்கள் கண்டு சொன்னவற்றுடன் தாமே களப்பணியில்  19 புத்தர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டுபிடித்திருக்கிறார். வரலாற்று ஆய்வில் எத்தனைச் சிறு சேதாரச்சில்லும் உதவும் என்பதற்கு இவர் பக்கம் 151இல் காட்டியிருக்கும் வையச்சேரிபுத்தர் சிலை. அந்த ஊரின் குளக்கரையில் இருந்ததாகக்கூறப்பட்ட சுமார் ஒரு அடி உயரமுள்ள சிலையின் தலைப்பகுதி. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அனுப்பிய அதன் ஒளிப்படத்தை வைத்து அங்குச் சென்று அதனைத் தேடி களத்திற்குச் சென்று அது அவ்விடத்தில் காணப்படவில்லை என்று உறுதிசெய்கிறார். அத்தனை நுணுக்கமான ஆய்வுப்பார்வை அவரிடம்.

ஆய்வுக்கு உதவிய துறைகளை ஒருவரை அல்லது ஒன்றைக்கூட விட்டுவிடாமல் பட்டியலிட்டு நன்றியுரைத்த பாங்கும் அவர்கள் பெயர் அட்டவணையும், இணைப்புகளும், தெளிவும், தரவுகளை பாதுகாத்திருக்கும் பொறுப்பும் என்று வரிசையாகக் கூறி பாராட்டவைக்கிறார் நூலாசிரியர்.

மேலாக இந்த அரிய நூல், தங்கப் பேழையில் உள்ள முத்துமாலையை ஒத்த வனப்பும் கட்டும்  கொண்ட நூலாக வெளிவந்திருப்பது தமிழ் ஆய்வுநூல் ஒன்று எந்த நாட்டு நூலகத்திலும் இடம்பெறும் சிறப்பைப்பெறுகிறது.

பிறரால் தொடமுடியாத அரிய பணியை அறிந்தே முழுமனத்துடன் ஈடுபாட்டுடன் அறம்தவறாமல் ஆற்றியிருக்கும் முனவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் மேலும் சிறந்தபணிகள் ஆற்றிட வாசித்தறிந்த ஒருவனாக வாழ்த்துகிறேன்.

ப.திருநாவுக்கரசு




Sunday, 21 June 2026


 

நீ தானே....


அன்புள்ள அப்பா

மழலைகள்

சுலபமாய் உச்சரித்தபோது

அம்மாவும்

அழுத்தி உச்சரித்தபோது

நீங்களும் நாவில்

பிறந்தீர்கள்.


அம்மா தூரிகையால்

தீட்டப்பட்டவள்

நீயோ உளியால்

செதுக்கப்பட்டாய்!


நீ … எங்கள் 

வியப்புகளின்

குறியீடு!


மலையே

நீ கடினம்தான்

உன்னிலிருந்து

எத்தனை ஈர அருவிகள்!


மாதச்சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?


உன் காதுகளில்

ஏதப்பா அத்தனை

வெள்ளி வாள்கள்?

அம்மாவின் அன்புச்

சொற்களை குனிந்து ஏற்ற செவிகளுக்கு வழங்கப்பட்ட

வீர விருதுகளா?


குடும்பத் தலைமையில்

நீ பூரணத்துவம்

அடைகையில் உன் முடி

கழன்று விழுந்ததா?

அல்லது

குடும்பப் பாசறையில்

காவல் காக்க எறிபடைகளாக

வீசப்பட்டனவா?


பிடித்துக்கொண்டிருக்கும்

தினசரியை கீழே வைத்து

என்னைப் பார்

உன்னை வாசிக்க

ஒரு தலைமுறை

காத்திருக்கிறது.

*****

ப.திருநாவுக்கரசு



Tuesday, 12 May 2026


 

முடிந்தவரை வரை

 

வரைந்து வரைந்து

வந்திருக்கிறேன்.


வானமும் வில்லும் வயல்பசுமையும்

தோகைமயில் பாடும்குயில்

பாலன்னம் பருவமான்

காரெருமை கவின்மலர்கள்

எல்லாவற்றின் நிறங்களும்

என் வண்ண ஏனக்குழிகளில்.


வரைபொருள் தேடினேன்

எதிர்நின்றது தாய்.

அன்பெனும் நிறத்தில்

பாலின் வண்ணம் சேர்த்தேன்.


தந்தைக்கென்று

செவ்வண்ண உழைப்பும்  

சேராத சேமிப்பு பாசிநிறமும்

கவலைச் சேற்றின் நிறமும்.


உறவுகளை ஒன்றாக்கித்தீட்ட

உரியநிறமின்றித் திண்டாடிவிட்டு

கரிக்கோட்டால் கீறிமுடித்தேன்.


நயமிகு நண்பனை

நிறமற்ற வெறும்நீரால் 

எழுதிவைத்தேன்!


ஆசானை முகம்காண

அறிவுநூல் செம்மையும்

ஆகாய நீலமும்

காலம் வெளுக்காத

கருத்துமையும்

கலந்து வரைந்தேன்.


என்னை எழுதிப்பார்க்க

உங்களிடம் நீட்டுகிறேன்

தூரிகைக்கு கைகொடுங்கள்

தும்பைவண்ணத் தாளிதுதான்.

*****-

ப.திருநாவுக்கரசு

—----------------

படம்: கரந்தை ஐஜெயக்குமார்.


Wednesday, 6 May 2026


 

திசாபுத்திகள்
%%%%%%%%

இரண்டுதிங்களாக
இருந்த சூடும் சுரணையும்
வாக்குவெப்பமண்டல
மாறுதலால்
திசைமாறுகின்றன!

திராவிடகுருவின்
பகைக்காரகன்
தென்திசையில்
பலம்பெறுகிறான்!

புத்திக்காரன்
பலவீனமாகிவிட்டதால்
ஜனசமுத்திரம்
உப்பு குறைந்து
உணர்ச்சி தடுமாறும்!

சுக்கிரனால்
வாசனாதி திரவிய ஆசையும் 
ஆடை அணிகல 
முகக் கவர்ச்சியும் 
உச்சம்பெறும்!


சுயமரியாதையில் ஊறியஆடைகள்
நிழல்காய்ச்சலில் கிடக்கும்!

சூரியதிசையைவிட்டு
சனிதிசைக்கு 
கூட்டணி நிழல் கோள்கள்
இடம் பெயரும்!

மேற்கில் முடிந்தாலும்
கிழக்கில் எழுந்தாலும்
தெற்கில் பலம்பெறும்
சூரியன்!


ப.திருநாவுக்கரசு

Friday, 24 April 2026

முடிவிலும்.


 










முடிவிலும் ஒரு காயம்!


அது 

நான் என்றோ

பழம் தின்று நட்ட விதையும்

அதன் ருசியும்

அதை உயரத்தில் வைக்கச்சொன்னது.

 மேல் மாடியில்

செடிவளர் பையில்

குடிநீர் ஊற்றி காத்துவந்தேன்.

 

காலையில் இருவரும்

ஒருவர் ஒருவர்முகத்தில்

விழிப்போம்

அது ஒரு புத்துணர்வுப் பரிமறுதல்.

 

நம்பிவந்த நாற்றை

கைவிடாமல் காக்கும் கடமையில்

கண்ணும் கருத்துமாய் பார்த்தும்

நீர்விட மறந்தால் அது

உடல்மொழியால் வாட்டம் காட்டும்

மன்னிப்புடன் ஒரு குவளை ஊற்றுவேன்.

 

இடைவெளி கூடிப்போய்

ஒருநாள் பதறி ஓடிப் பார்த்தபோது

சாவதற்கு முன்னால்

ஒருமுறை பார்க்க நின்றதாக

பார்த்ததும் பதறிவிட்டேன்.

 

வெயிலின் உக்கிரத்தில் அந்த

பச்சை உதிரம் தீர்ந்து கொண்டிருந்தது.

உயிர்நீர் ஊற்றிக் காத்திருக்கிறேன்

நீ பிழைத்துவிடு

என்னுள் மீண்டும் தழைத்துவா!

 

உன்னை கவனிக்காமல் போன தவறை

சிலபொத்தல் காரணங்களால்

தைக்கப் பார்க்கிறேன்.

 

ஆம்...என் நேரம்

பத்துபேருக்கான சமையலில்

ஐந்தாறு பொது நிகழ்வுகளில்

இரண்டொரு மணநிகழ்வில்

ஒருசில பிணநிகழ்வுகளில்

விருந்துகளில்

கைபேசி பாசாங்கு பேச்சில்

போய்க்கொண்டே இருக்கிறது..

 

உன் கடைசி ஆசைக்காக

என்னைப்பார்த்துவிட்டு

கண்களை மூடும் முன்

நான்முடிந்துவிடுகிறேன்.

நம்முடன் பெரும் சுற்றம் இருக்கலாம்

ஆனாலும் ....முடிந்துபோவோம்

 

உனக்குவந்தது நீர் வறட்சி

எனக்குவந்தது காலவறட்சி

நம் அருகில்தான் தண்ணீர் தொட்டிகூட....


-ப.திருநாவுக்கரசு

 

Sunday, 15 March 2026


 

                                   பனித் துளியில் காணப்படும்

                                     கதிரவனின் வடிவம்

வானத்துக் கதிரவனைவிட

சிறியது அன்று” –கலீல் ஜிப்ரான்

 

ஒரு கவிஞன் தமிழில்  சிறந்த படைப்புகளை அளித்து அதனால் ஒர் உயர் பரிசைப் பெறும்போது தமிழர்கள் அனைவரும் மனதார மகிழ்கிறோம்; மகிழவேண்டும். படைப்பாளியும் அப்பரிசை தமிழர்களுடையதாகவே அர்ப்பணித்துக் கூறியிருப்பதை நாம் சிறிதும் கபடமில்லாமல் ஏற்பதே நல்லது.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  இலக்கியத்திற்கான இந்தியாவின் உயர்விருது ஞானபீட விருது -அதுவும் தமிழில் கவிஞனின் படைப்பு ஆளுமைக்காக வழங்கப்படுவது தொன்மைப் பெருமையும் அழியாத இளமையும் கொண்ட தமிழ் மொழிக்கான பெருமை என்பதால் அனைவரும் மகிழ்வோம்.

தம்பள்ளிநாள்தொட்டு பற்றிக்கொண்ட தமிழ் பற்றிய வியப்பையும் தம் எழுத்து பற்றியும் அவர் “இதுவரை நான்” நூலில் எழுதியிருப்பத்தைப் படித்து அடியேன் ஈர்க்கப்பட்டவன். தொடர்ந்து வந்த கவிராஜன் கதை எனும் பாரதி பற்றிய கவிதை சரித்திரம் பாரதிவாழ்க்கை வரலற்றில் கவிரசம் ஊட்டப்பட்டது. உரைநடையில் கழுத்துவலிக்க படிக்க முடியாவிட்டாலும் இந்நூல் ஒன்றுபோதும். புதுக்கவிதையில் ஒரு மாகவிஞனைப்பற்றி காவியம் சமைத்தவர் என எழுத்தாளர் சாவியே பாராட்டினார்.

80களில் தமிழில் வெளிவந்த சாவி வார இதழை அது  தொடராக வந்தபோது ஆறுநாள்கள் ஆறாமல் தவித்து எழாம் நாளில் பாபநாசம் லக்கிஸ்டோர் பாய் கடையில் வாங்கிப் படித்த இதம் இன்னும் உள்ளது மனதில்.  அந்நூலில் புதுவையில் ஒரு கல்யாண வீட்டில் நடந்த இருபெரும் கவிகளின் முதல் சந்திப்பை இப்படி வர்ணிப்பார்:

“ஓரு கவிதாபந்தம்

பசுவையும் கன்றையும்

சந்தோஷ நெருக்கத்தில்

சந்திக்க வைத்தது.

அந்த நாள்

தமிழ்க்கன்னியின் கூந்தலில்

புதிதாக ஒரு

பூச் சேர்ந்த நாள்”

பாரதியை சுப்புரத்தினதாசன் எனும் பிற்காலத்தின் புரட்சிக்கவிஞர் சந்திப்பை அவர் சொன்னது போன்றவற்றால் அதிகம்  வியப்பாகி வகுப்பறையில்  மாணவர்களின் இலக்கிய வாசிப்பை அதிகம் ஊக்கப்படுத்தினேன்.

அவருடைய முதல் திரைப்படப் பாடல் தொகுப்பு ஒன்று தஞ்சையில் வெளியிடப்பட்டது. தஞ்சை இலக்கிய அன்பர்கள் பெருமளவில் ஏற்பாடு செய்து அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பாபநாசம் இலக்கிய அன்பர்கள் திரு இரா.மணிமுடி, திரு கண்ணன் இருவரும் தஞ்சையில் உள்ள  தொடர்பால் என்னோடிருந்த சிறு குழுவினரையும் வைத்து நிகழ்ச்சிக்கு அழைக்க வைரமுத்து பாபநாசம் வந்திருந்தார். வாகனத்தில் இருந்தபடி என்பெயரையும்  சொல்லி அனைவரையும் அழைத்தார். தஞ்சையை அன்று ஒரு முக்கிய இலக்கிய கேந்திரமாக உருவாக்கும் பலரையும் பக்கத்து ஊர்களிலும் அவ்வாறு அழைத்திருந்தனர். இன்றும் அதே நெருக்கச்சுற்றம் அவருடன் உள்ளது.

தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசலில் தொழுகைப்  பணியிலிருந்த நினைவில் வாழும் எஸ்.எம்.ரபியுத்தீன் பாகவி பெரும் தமிழ்ப்பற்றும் இலக்கிய வாசிப்பும் கொண்டவர்.6-10-99 நாளில் கையொப்பமிட்டு எனக்களித்த ஒரு நூல் பெய்யெனப் பெய்யும் மழை. அந்நூலில் எட்டையபுர அரண்மனையவிட்டு பாரதி மதுரைக்கு ஆசிரியப்பணிக்குப் போனதை,

ஒருநாள்-

 குயில்

 கூண்டு தாண்டியது..”

 

“பொதிகைத் தென்றல்

பூப்பெய்திய

மதுரைக்கு வந்து

மையமிட்டது!”

இப்படியொரு வாசிப்பில் வைரமுத்து நம் இலக்கிய உறவானார். திரைப்பாடல் அவரால் ஒரு புது பரிணாமம் பெற்றதை கவிக்கோ குறிப்பிட்டுள்ளார். பாடல்களில் படிமச் சிதறல்களும் உவமைகளும் உள்ளே இடம் பெற்றன. விசிட்டர் லென்ஸ் எனும் ஒரு வார இதழில் அன்று அவர் திரைப்படங்களை-“தீக்குச்சிகள் தின்னத்தருவோம்” என்று ஒரு உத்வேகம் காட்டியவர்தான். மாறாக பாடல்களில் பல பரிணாமங்களையும் காட்டி வென்றார். காலம்தான் மாற்றங்களின் கொல்லுப்பட்டற்றை. ஒரு சுயமரியாதை பொதுக்கூட்டத்தில் நெற்றிநீறை அழித்த கண்ணதாசன்தான் பின்னாளில் அர்த்தமுள்ள இந்துமதமும் இயேசு காவியமும் எழுதினார். அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா பாடியவர்தான் இந்தியநாடு நம்நாடு இந்தியன் என்பது என்பேரு பாடினார்.  அவர்தான் மாற்றம் என்பது மானிட தத்துவம் என்றார்.

வைரமுத்துவின் கவிநயங்களும்,கதை எழுத்தும், பேச்சும் எண்ணற்றோர் உள்ளங்களில் இடம்பெற்றவை. என்னளவில் தமிழாற்றுப்படைதான் இந்தக் காலத்தில் பொறிக்கப்படவேண்டிய கல்வெட்டு சாசனம். தமிழர் வரலாற்றில் வகைக்கொரு எழுத்துநாயகர்களை மிக கவனத்துடன் கூடிய வரலாற்றுத் தகவல்களுடன் வகுத்துக்கூறியிருக்கிறார். அது  தமிழர்கள் தம் பண்பட்டுப் பெருமை எண்ணி நெஞ்சுநிமிர்த்தவும் எதிர்காலம் நின்று நிலைக்கவும் எழுதப்பட்டுள்ளது. ஆற்றுப்படை தொல்கப்பியர் தொடங்கி அப்பர் வள்ளலார் வழியாக பெரியாரிடம் வந்து அப்துல் ரகுமனிடம் முடிகிறது. பெரியார் ஏன்? கேட்கலாம்.

“எழுத்து-சொல்-பொருள்-யாப்பு அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து  பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?”

 என்ற அவர் நியாயம் ஒன்று அதனுள் உள்ளது.

வைரமுத்து அதிகமாக விமர்சிக்கப்பட்டவர். திராவிட இயக்கச் சார்பு, திரையிசைப்பாடலில் செல்வாக்கு, செல்வப்பெருக்கம், இலகில்லாத அரிதான தமிழ் அமைப்புகள் தொடர்பு, கரிசனமில்லாத நூல்கள் விற்பனை,பாலியல் புகார் என்று அவர்படைப்பின் தரத்தை, உவமைகளின் உயரத்தை,எழுத்தின் ஏற்றத்தை விட்டுவிட்டு என்னவெல்லாமோ பேசிக்கொள்வார்கள். ஆண்டாள் பற்றிய அருந்தமிழ்க் கட்டுரையில்

 “ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வர்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும் தமிழின் அழகிலும்,உணர்ச்சியின் நெகிழ்விலும்.பெருமாளுக்கென்றே முந்திவிரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே!”

என்று பெருமை கூட்டியவர் தன் கட்டுரையின் முடிப்பில் சொன்ன ஒரு மாற்றுப்பார்வைக்காக பாய்ந்த கூர்மை அம்புகள் அவரைச்  சோர்வடையச் செய்துவிடுமோ என்ற சூழலைத்தந்தது. அதற்காக படைப்பாளியின் அப்பழுக்கில்லாத கிராமத்துத் தாயையே பழித்து சொல்தூற்றினார் ஒருத்தர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கடிதத்தில் ஒருமுறை படித்த நினைவு. எழுத்துத் திறமை கொண்டவரின் தனிப்பழக்கத்தை வைத்து சாய்ப்பது பண்பாகாது. கண்ணகி படத்திற்கு உன்னதமான வசனம் எழுதிய இளங்கோவன் மதுப்பழக்கத்தை யாரோ ஒருத்தர்  சுட்டியபோது இடித்துக் கூறினார் கலைஞர். கலைமாமணி கவி.கா.மு.ஷரீபு அவர்களின் வசதிக் குறைவுக்காக வீடுகட்டித்தர குறிப்பிட்ட கூட்டத்தில் “எழுத்தாளன் புலமையைப் பேசுங்கள் வறுமையைப் பேசாதீர்கள்” என்று கண்டித்தார்.

வைரமுத்துவுக்கு கிடைத்திருக்கும் அத்தனை விருதுகளும் பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் தமிழால்!

வைரம்பாய்ந்த முத்துவை மிகச் சிறிதாக எண்ணினாலும் தமிழ்முடியில் அது அலங்கரித்துக்கொண்டே இருக்கும்  கவிப்பேரரசரே.

தமிழில் அவருக்கு அரியாசனமான அறிவாசனம்  கிடைத்துள்ளது!   

எழுதிக்கொண்டே இருங்கள்! வாழ்த்துகள்!

ப.திருநாவுக்கரசு

(அரசு இலக்கியமுற்றம் தஞ்சை)

 

Saturday, 7 March 2026



 

         நோக்க நோக்க....

இருப்பது தரும் பொலிவை

இல்லாததும் தருகிறது!


உதிக்கும் திசையும்

மறையும் திசையும்

விடியலில் இருப்பையும்

முடிவதில் இல்லாமையையும்

அழகழகாய்

ஒத்திகை செய்கின்றன!


தலைமுடியின் இருப்பழகை

பொன்மகுடம் மறைத்தபோது

கருமுடி பொன்முடியாகி

இல்லாததை இருப்பாக்குகிறது!


நுனிவாழை

பந்தி இல்லாதபோது

பழையசோறு அமுதாகி இருக்கிறது!


தேய்ந்து உருவமிழக்கும்

குடும்பப் படத்தில்

அழுத்தமாக உள்ளது

அத்தனை அன்பும்

உறவின் வடிவங்களும்!


அப்பாவின் பழைய கடிதம்

இருந்தபோதைவிட

படிக்கையில் இப்போதுதான்

இன்னமுதக் குரலாய்க் கேட்கிறது!


அம்மா இல்லைதான் 

இருசக்கர வாகனத்தின்

விசையைத் தொடுகையில்மட்டும்

பார்த்துப்போப்பா…’

என்கிறதே!

 

அன்று

இல்லாதுபோனதெல்லாம்

இருக்கும் அழகாகி

மதிப்புகூடுகிறது

இன்றும்!


தலைமுறைகள்

தாண்டிப் போவதால்

இல்லாமல் போவதில்லை

ஒன்றும்!

***********

ப.திருநாவுக்கரசு






அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்

        oooOooo முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு ...