Friday, 24 April 2026

முடிவிலும்.


 










முடிவிலும் ஒரு காயம்!


அது 

நான் என்றோ

பழம் தின்று நட்ட விதையும்

அதன் ருசியும்

அதை உயரத்தில் வைக்கச்சொன்னது.

 மேல் மாடியில்

செடிவளர் பையில்

குடிநீர் ஊற்றி காத்துவந்தேன்.

 

காலையில் இருவரும்

ஒருவர் ஒருவர்முகத்தில்

விழிப்போம்

அது ஒரு புத்துணர்வுப் பரிமறுதல்.

 

நம்பிவந்த நாற்றை

கைவிடாமல் காக்கும் கடமையில்

கண்ணும் கருத்துமாய் பார்த்தும்

நீர்விட மறந்தால் அது

உடல்மொழியால் வாட்டம் காட்டும்

மன்னிப்புடன் ஒரு குவளை ஊற்றுவேன்.

 

இடைவெளி கூடிப்போய்

ஒருநாள் பதறி ஓடிப் பார்த்தபோது

சாவதற்கு முன்னால்

ஒருமுறை பார்க்க நின்றதாக

பார்த்ததும் பதறிவிட்டேன்.

 

வெயிலின் உக்கிரத்தில் அந்த

பச்சை உதிரம் தீர்ந்து கொண்டிருந்தது.

உயிர்நீர் ஊற்றிக் காத்திருக்கிறேன்

நீ பிழைத்துவிடு

என்னுள் மீண்டும் தழைத்துவா!

 

உன்னை கவனிக்காமல் போன தவறை

சிலபொத்தல் காரணங்களால்

தைக்கப் பார்க்கிறேன்.

 

ஆம்...என் நேரம்

பத்துபேருக்கான சமையலில்

ஐந்தாறு பொது நிகழ்வுகளில்

இரண்டொரு மணநிகழ்வில்

ஒருசில பிணநிகழ்வுகளில்

விருந்துகளில்

கைபேசி பாசாங்கு பேச்சில்

போய்க்கொண்டே இருக்கிறது..

 

உன் கடைசி ஆசைக்காக

என்னைப்பார்த்துவிட்டு

கண்களை மூடும் முன்

நான்முடிந்துவிடுகிறேன்.

நம்முடன் பெரும் சுற்றம் இருக்கலாம்

ஆனாலும் ....முடிந்துபோவோம்

 

உனக்குவந்தது நீர் வறட்சி

எனக்குவந்தது காலவறட்சி

நம் அருகில்தான் தண்ணீர் தொட்டிகூட....


-ப.திருநாவுக்கரசு

 

11 comments:

  1. உதிரும் இலையின் உணர்வை உணர்தோம்

    ReplyDelete
  2. பசுமை தீர்ப்பா"ய்தல்... அருமை அய்யா

    ReplyDelete
  3. ஒரு புயலில் ஒரு மரத்தின் கிளை உடைந்தது.
    ஆனால் அந்த மரம் நின்றுவிடவில்லை;
    அது புதிய இலைகளை வளர்த்தது.
    அதை பார்த்த மனிதன் உணர்ந்தான்:
    “வலி வாழ்க்கையை முடிக்காது, மாற்றும்.”

    காயம் இருந்தாலும் வளர்ச்சி தொடரும்.

    ReplyDelete
  4. புன்னை விதையால் உருவான செடிக்கு நீர் ஊற்றி வளர்த்ததால் அவள் தங்கையாகிப் போனாள்...
    களவு வாழ்க்கையில் கண்ணியத்தைச் சொல்ல வந்த சங்கப் பாடலை நினைவுபடுத்திவிட்டீர்கள்...
    பண்பாட்டைப் பேசும் தாய்த்தமிழில்!!!

    ReplyDelete
  5. செடி வளர்ப்போரின் நிலை
    தினமும் தண்ணீர் ஊற்றும் போதும்
    ஒரு நாள் ஊற்றாவிட்டால் நம் நிலையினையும் அழகாக கோடிட்டு காட்டியுள்ளீர்கள். மனமும் உள்ளமும் அமைதி கொள்ள செடிகள் வளர்ப்போம். சிந்தனையை தூண்டிய கவிதை வாழ்த்துகள் ஐயா

    ReplyDelete
  6. என்ன கவிதை இது!அப்பப்பா மனதை பிசைந்து கொண்டே இருக்கிறது.
    "பிழைத்து விடு பிழைத்து விடு" என்று மனதில் சொல்லிக்கொண்டே ,கவிதையை படிக்கிறேன். படித்து முடித்ததும் மனம் கனத்துக் கிடக்கிறது.
    "பச்சை உதிரம் "அழகான ஆழமான வார்த்தை. மொத்தத்தில் மனதை தொட்ட கவிதை.

    ReplyDelete
  7. செடிக்கும் நம் வாழ்க்கையுமான ஒப்புமை மிக அழகாக இங்கு சொல்லப்பட்டு இருக்கிறது. ஐயா உங்கள் சிந்தனை வேறு மாதிரி இருக்கிறது.

    ReplyDelete
  8. தினமும் காணும் நிகழ்வு தான்.
    ஆனால் அதை கவிதையாய்ப் படிக்கும் போது மனசு கனக்கிறது.

    ReplyDelete
  9. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடும், தங்களின் தவிப்பே ' செடியினைத் தழைக்க வைக்கும்.

    ReplyDelete
  10. மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...