Friday, 29 August 2025

அந்தக் கருக்கலில்


 அந்தக் கருக்கலில்....


ப.திருநாவுக்கரசு


துறைமுகத்தைக் கழுவி

தொடுவான நெற்றியில்

செஞ்சாந்தில்

ஒரு பொட்டுவைத்துக்கொண்டது

அந்தக் காலை!


தங்கமணற்பரப்பில்

யாசிக்க வெட்கப்பட்டு

அலையும் திருவோடுகளாய்

படகுகள்!


கடைசி உணவுக்குப்பின்

உத்தரவாதமில்லாத

அடுத்த உணவுநோக்கி

உற்சாகச் சிறகைவிரிக்கும்

இருளை அப்பிக்கொள்ளாத கொக்குகள்!


புலால் வாசம் பிடிக்கப்போய்

காற்றில் பரவிய வலை

கடலில் விழுந்து தொலைக்கும்

உயிர்களை அள்ள!


உலகைப் பார்க்க

துள்ளி வெளிப்பட்ட 

சின்ன மீனொன்று

இயந்திரப்படகின்

எரிநாற்றத்தால்

மூக்கைப் பொத்தி

வீட்டுக்குள் ஓடும்

மீண்டும்!


நழுவும் ஆடையை அறியாமல்

உலவும் குழந்தைகளாய்

இரவு முடிந்தது தெரியாமல்

இன்னும்  சில தாரகைகள்!


எப்படியெல்லாமோ

விடிந்து பார்க்கிறது இரவு

தன்னால் முடிந்தவரை!

3 comments:

  1. ||தங்கமணற்பரப்பில்

    யாசிக்க வெட்கப்பட்டு

    அலையும் திருவோடுகளாய்

    படகுகள்! ||

    அருமை அருமை

    ReplyDelete
  2. நன்றிங்க அன்பு குமார்.

    ReplyDelete
  3. ஒரு கவிஞரின் பார்வையே தனித்துவமாகத்தான் இருக்கும் என்பதற்கு அந்த தாரகைகள் எடுத்துக்காட்டு.அருமை...அருமை...!!!

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...