Tuesday, 29 September 2026

தலையில்லா பொம்மை

 



தலையில்லா பொம்மை

****************************

குழம்பித்தவிக்கும்

ஊருக்கு வெளியில் நிற்கிறது

ஒரு தலையில்லா பொம்மை!

அதன் தலைபோன நாளாம் அன்று!

 

ஊர்ச்சிறுசுகளின்

உயிருக்கு நேரான பொம்மையாம்!

தெருவிளக்குகளை உடைத்து

அதன்மேல் மலர்ப்பொழிகிறார்கள்.

குடிநீர்க்குழாய்கள் அறுத்து

மாலைபோடுகிறார்கள்.

பாடப்புத்தகங்களைக் கொளுத்தி

தீபம்போடுகிறார்கள்!

 

 

அடங்கா மோகத்தில்

காதல்கடிதங்களை எழுதி

தலைஓட்டைக்குள் 

திணிக்கிறார்கிறார்கள்!

 

விழா பார்த்துவருவதற்கு

அழைத்துப்போகச்சொல்லி

அடஞ்செய்கின்றன சிட்டுகள்.

 

பெரிசுகள் பேச்சற்றுப் போனார்கள்

அட்டூழியக்காலம் இது

அடங்கிப்போவதே நல்லதென்றார்கள்!

 

ஊர்திரும்பிய பட்டாளத்து மாமா

பார்வையில் பட்டது

அந்த பட்டுப்போன உருவம்.

யாரையும் கேட்கவில்லை!

தொட்டுத்தான் பார்த்தார்

பீடமற்று விழுந்தது!

 

எங்கோ தேடிப்பிடித்து

தலைகொண்டுவந்த தம்பிகள்

உடலை உடைத்த வீரனைப் பார்த்து

ஆவேசத்துடன் யார் நீ என்றார்கள்!

நான் தேசத்தின் வீரன்!

ஆமாம் நீங்கள் யார்?

 

நாங்கள் தலையற்ற பொம்மையின்

தருதலைகள் என்றனர் பெருமையோடு!

**********

ப.திருநாவுக்கரசு


Monday, 21 September 2026


 


முகமனும் முகமண்ணும்
*************************
மணவிழாக்களில்
மளிகைக் கடைகளில்
விற்பனைக் கூடங்களில்
நமக்கான வரவேற்புகளில்
முன்னால் நிற்கிறது
முகமன்.

முகமன்தான்
நம் வருகைக்கு
முதல் அனுமதி முத்திரை!
அங்கே வெயிலுக்கு இளநீரும்
குளிருக்கு ஆவி ஆடும் தேநீரும்
ஆனந்தத்திற்கு  அறுசுவையும்
வந்துவிடும்.

அரசு அலுவலகங்களில்
கையூட்டானாலும்
மெய்ஊதியமானாலும்
பெறுவதில் இல்லாத முகமன்
வேலையில் எப்படி வரும்?

வங்கிகளின் முகங்களில்
செல்வக்கடவுள்
எப்போதோ
காணாமல்போய் விட்டது.
வாடிக்கையாளரை
வேடிக்கை பார்க்கிறது!

தெரியாத மக்கள்
முடியாத மனிதர்களுக்கான
நலத்திட்ட சிப்பந்திகளிடம்
முகமே இல்லாதபோது
முகமன் எங்கிருந்து வரும்?

நாள்பட்டஉறவு வரும்               இல்லங்களில்                             தேவைப்பட்ட மக்கள் வரும்அலுவலர்களிடமும் 

நம்மைத் தள்ளிவிரட்ட
ஒரு முகப் பூச்சிக்கொல்லி
இருக்கவே இருக்கிறது.                 
முகமனை மூடும் முகமண்!

மனக்கீழடியில் புதைந்துகிடப்பதை அகழ்வாராய்ச்சி செய்யலாம்.

*********
ப.திருநாவுக்கரசு


Friday, 11 September 2026

கறுப்பு நிலா

 






தீயாத தீர்ப்பு

***************


வைகை ஆற்றின்

வளர்தமிழ்


பட்டிமன்றத்தின் 

பாங்கு நீ!


மேடைகளில்

ஒலிவாங்கிகள்

அறியும் உன்

வலிக்காத தமிழை!


மறுப்பிலும் 

ஒரு கசப்பிருக்காது!


சிரிப்பிலோ

பல்வரிசை உன்

பாண்டிநாட்டைச்

சொல்லும்!


பட்டிமன்றம் அணிந்த

பட்டுவேட்டி நீ!


அந்தி மேடையில்

அறிவொளி பாய்ச்சிய

கறுப்புநிலா!


ஐயன் குறள் உரைகளில்

கூடிய விளக்கம் தந்த

கூடலின் ஐயன்!


வாதி பிரதிவாதி

கூடிப் பாராட்டும்

தித்திக்கும் தீர்ப்பாளி!


சற்றே 

இளைப்பாறுக

ஐயா.


---------------------

ப.திருநாவுக்கரசு

Friday, 4 September 2026

தேசப்பற்றின் பாடம்


 ஆறுதல் பரிசுமில்லை..

--------------------------------------

தமிழ்க் கப்பல்களை

 இயக்கியது நீராவி!

அதை சரித்திரத்தில்

எழுதியது  ஓர்ஆவி!


நாட்டுக்கு வெளிச்சம்தர

ஒருதியாகத்தீபம்

தானே செக்கிழுத்து

எண்ணை ஆட்டி

 ஊற்றிக்கொண்டது!


வளமும் வறுமையும்

வழக்காடி வழக்காடியே

ஒரு தேசிய வழக்கறிஞனை

சிறைக்குள் போட்டது!


இன்று

எட்டாம் வகுப்பு தேறாத

சுதந்திர இந்தியன் 

விமானம் வாங்கும்

அரசியல் வாழ்க்கை

ரெக்கை கட்டிப் பறக்கிறது!

நீ கண்ட துறைமுகமோ

உன்னையே

 தூர்த்துக் குடித்துவிட்டதே!


இந்தியக் காவியங்களில்

அஞ்ஞாதவாசம் முதல்பரிசு

வனவாசம் சிறப்புப் பரிசு

நாற்பது ஆண்டு

சிறைவாசத்திற்கு

ஆறுதல் பரிசும் 

இல்லாமல் போச்சே ஐயா..!

************

ப.திருநாவுக்கரசு

...............

(05-09-1872 கப்பலோட்டிய தமிழன் பிறந்தநாள்)

Thursday, 6 August 2026

தீராநதி


 ஆடிப்பெருக்கு

*****************

அன்று..

சோலை மலர்களை

சேலையாய்ப் போர்த்தி

உன் மீன்விழிகளை விழித்து

குயிலின் இசையுடன்

மயில்நடமாடப் பார்த்து

நடந்து போனாயாமே!

கேள்விப்பட்டோம்.


ஆட்டன் சேரமன்னனை

சோழன் மகள் ஆதியை

இந்தநாளில் இழுத்துப்போனாயாமே

காதில் விழுந்தது.


அவைகிடக்கட்டும்

 

ஒரு மூங்கில்தட்டில்

பேரிக்காய் நாவல் 

கொய்யாக்கனிகள்

கொஞ்சம் அரிசி

வெள்ளக் காப்பரிசி

காதோலை கருகமணி

வெற்றிலைப்பாக்கு வைத்து

ஒரு பூச்சரம்தந்து

விழுந்து கும்பிட்டோமே

அடி காவேரி....

பொங்கி பூரித்தாயே!

 

இரு... 

என் கண்களைத் துடைத்துக்கொள்கிறேன்

 

எங்கள்

கைகளில் மஞ்சள் நூல்

உனக்கும் சுற்றியதுதான் அது.


தெருவை நிறைத்த

ஓயா சப்பரத்தட்டிகள்....

உருளை ஓசைகள்.


பொங்குது மனசு..

பொறு கொஞ்சம்

 

பாவாடைத்தாவணி பட்டாளம்

பலரின் முகம்தெளிக்க

உன்னுள்

குதித்துக் குதித்தே கிடந்தோமே

மறந்தாயா பாவி காவேரி...

 

பச்சைக்குழந்தைகள் பயிர்ச்செடிகள்

பசியோடு பார்க்குமே 

உன்மார்பை.


ஊட்டிய மார்பு திறக்காதா உன்னைப்

பூட்டிய கதவும் உடையாதா..

 

ஆற்றில் உயிராய் இருந்த நீ

வீட்டிற்கு வந்த கதி இதுவா?

 

யாரின்தாய்நீசொல்லிவிடு

இப்படியேதான் நீ இருப்பதென்றால்

என் காலம் முடிந்ததும்

போய்விடு!

=================

ப.திருநாவுக்கரசு

Sunday, 28 June 2026

அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்


        oooOooo

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள  சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து  சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது.

பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை குறையாத “சோழநாட்டில் பெளத்தம்” என்ற அரிய பலரும் அறியவேண்டிய நூலை சரித்திர ஆய்வுப்பட்டியலுக்குள் அளித்திருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

இந்த நூல் அதன் ஆய்வு எல்லையால் குறுகியதுபோல் தோன்றலாம். ஆனால் அது சோழநாட்டு எல்லை. அதனுள் இன்று பிரிக்கப்பட்டுள்ள ஒன்பது தனிமாவட்டங்கள் உள்ளன.எனவே தேடலில் நடந்த,அலைந்த,சுற்றிய,பயணித்த பாடுகளை அறியவே மலைப்பு தருகிறது. அந்த வரலாற்றின் அடையாளங்கள் காணப்பட்ட விதத்திற்கும், கண்டறியப்பட்ட முறைக்கும், நூலாசிரியரின் பல்லாண்டுகாலத் தேடலுக்கும் கடும் உழைப்புக்கும் எல்லையில்லை. அந்தக் கடும் முயற்சியிலும்  ஆய்வுநெறி அறம் ஒளிர்கிறது, ஆய்வு நுணுக்கம் விரித்துக் காட்டப்படுகிறது,  உள்ளவாறு காட்டும் ஒளிப்படங்கள் உறுதுணைபுரிகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தடயங்கள் இழப்பில் சோகமும் கிடைப்பில் பூரிப்பும் எண்ணிக்கையால் பெருமையும் கலந்த அரிதான வரலாற்று உணர்வுபொதிந்த எழுத்தாகவும் உள்ளது. பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆய்வியல் நெறிகள் நூலில் ஆய்வாளருக்குரிய தகுதிகள் பத்தினைக் குறிப்பிடுகிறார்கள். இந்நூலாசிரியர் அத்தகுதிகள் அனைத்தையும் பெற்றிருப்பதை அறியமுடிகிறது.

கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் தெளிவும் முழுமையும்  கொண்டிருப்பது வரலாற்று ஆய்வில் அரிது. மதப்போர்களில் தாக்கப்பட்டு, உடைந்து, உறுப்புகள் சிதைந்து, கவனிப்பாரற்று, மண்மூடிப்போய், களவாடப்பட்டு, கடத்தப்பட்டு பார்வைக்கு உதவாத சிற்ப ஆதாரங்களையும் மெய்ப்பிக்க எடுத்திருக்கும் நூலாசிரியர் முயற்சி கடுமையானதாகும். சோழ நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்குச் சென்று திரட்டப்பட்டவற்றில் பல அறிஞர்கள் கண்டு சொன்னவற்றுடன் தாமே களப்பணியில்  19 புத்தர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டுபிடித்திருக்கிறார். வரலாற்று ஆய்வில் எத்தனைச் சிறு சேதாரச்சில்லும் உதவும் என்பதற்கு இவர் பக்கம் 151இல் காட்டியிருக்கும் வையச்சேரிபுத்தர் சிலை. அந்த ஊரின் குளக்கரையில் இருந்ததாகக்கூறப்பட்ட சுமார் ஒரு அடி உயரமுள்ள சிலையின் தலைப்பகுதி. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அனுப்பிய அதன் ஒளிப்படத்தை வைத்து அங்குச் சென்று அதனைத் தேடி களத்திற்குச் சென்று அது அவ்விடத்தில் காணப்படவில்லை என்று உறுதிசெய்கிறார். அத்தனை நுணுக்கமான ஆய்வுப்பார்வை அவரிடம்.

ஆய்வுக்கு உதவிய துறைகளை ஒருவரை அல்லது ஒன்றைக்கூட விட்டுவிடாமல் பட்டியலிட்டு நன்றியுரைத்த பாங்கும் அவர்கள் பெயர் அட்டவணையும், இணைப்புகளும், தெளிவும், தரவுகளை பாதுகாத்திருக்கும் பொறுப்பும் என்று வரிசையாகக் கூறி பாராட்டவைக்கிறார் நூலாசிரியர்.

மேலாக இந்த அரிய நூல், தங்கப் பேழையில் உள்ள முத்துமாலையை ஒத்த வனப்பும் கட்டும்  கொண்ட நூலாக வெளிவந்திருப்பது தமிழ் ஆய்வுநூல் ஒன்று எந்த நாட்டு நூலகத்திலும் இடம்பெறும் சிறப்பைப்பெறுகிறது.

பிறரால் தொடமுடியாத அரிய பணியை அறிந்தே முழுமனத்துடன் ஈடுபாட்டுடன் அறம்தவறாமல் ஆற்றியிருக்கும் முனவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் மேலும் சிறந்தபணிகள் ஆற்றிட வாசித்தறிந்த ஒருவனாக வாழ்த்துகிறேன்.

ப.திருநாவுக்கரசு




தடுக்கும் படிகள் ******************* அம்மாவின் பாட்டிதான் அம்மாவின் தாயை இன்னொரு வீட்டுக்கு போற பெட்டைப்பிள்ளை தெருமுனை பள்ளிக்கூடம் ...