பத்து வயதில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் வரை பென்சில்தான் என் தேர்வுக்காக எழுதும் கருவி. மூன்றாவது வரை சிலேட்டில்தான் பரிட்சை. அதிலும் சிலேட்டின் ஒரு மூலை உடைந்து போய் சிலேட்டுச் சட்டத்தைப் பிடித்துத் தூக்கி வந்து தேர்வு எழுதியது உண்டு. சிலர் கல் சிலேட்டில், சிலர் தகர சிலேட்டில் எழுதுவார்கள். பள்ளிசெல்லும் முதல் நாள் கோவையிலை அடுப்புக்கரி சேர்த்துத் தேய்த்து சிலேட்டை புதுசாக்கி, கலர் குச்சி-அதான் பலபம், கல் குச்சி, மாவு குச்சிகளில் வசதிக்கு ஏற்ப வாங்கி எழுதியது உண்டு.
ஐந்தாம் வகுப்பு முடியும் போது அடுத்து ஹைஸ்கூல் என்ற உயரத்திற்கு ஏற்ப மனசு தயாராகும். முன்னோட்டமாக அண்ணன் அக்காள்களின் பேனாவை யாரும் பார்க்காமல் எடுத்து பேப்பரில் பிள்ளையார் சுழி போட்டு பார்ப்போம். திரும்பி வைக்கும்போது பேனாவை சரியாக மூடாமல் வைத்து அதில் இங்க் காய்ந்ததை வைத்து அக்காள் தலையில் ஒரு நறுக் குட்டு தரும்.
ஆறாம் வகுப்பில் பேனா வாங்கனும் என்றால் எந்த கம்பெனி பேனா என்று அப்பாவிடம் சொல்லனும். கூட்டாளிகளில் மலேசிய சம்பாத்திய வீட்டுப் பிள்ளைகள் ஹீரோபேனா வைத்திருப்பார்கள். செல்வாக்கான குடும்பப் பிள்ளைகள் வெஸ்டர்ன் கம்பெனி பேனா வைத்திருப்பார்கள். எங்கள் பட்ஜெட்டுக்கு அசோகா பேனா வில்லியம்ஸ் பேனாதான். அன்றைய மார்க்கெட்டில் அசோகா ஒரு ரூபாய், வில்லியம்ஸ் எழுபத்தைந்து காசு. வாங்கி இரண்டு மாதங்களில் மரை லூசாகிவிடும். பள்ளிக்கூடத்திலிருந்து மதிய சாப்பாட்டுக்கு வீட்டிற்கு வந்தால் கை விரல்களில் பேனாவில் பாதி இங்க் ஒழுகி நனைத்திருக்கும். பசியோடு கையில் சுண்ணாம்பு தைத்து கழுவ வேண்டி வரும். பேனாவோடு ஒரு போராட்டம் தொடர்ந்து விடும். மரை லூசானால் நூல் சுற்றி திருகனும் மீறி ஒழுகினால் சுண்ணாம்பு தடவனும் அல்லது சவுக்காரத்தை அப்பனும். அடிக்கடி கீழே விழுந்தால் முனை மழுங்கிவிடும் டெஸ்கில் வைத்து அமுக்கி நிமிர்த்தனும். இங்க் காய்ந்துவிட்டாலோ
தீர்ந்துவிட்டலோ உதறோ உதறு என்று உதறி படிக்கிற இடங்களெல்லாம் இங்க் புள்ளிகள் காணப்படும்.
பள்ளிக்கூடத்திற்கு எதிரில் உள்ள கடைகளில் ஐந்து காசுக்கு இங்க்
நிரப்பித்தருவார்கள். எங்கள் காலத்தில் இல்லாத நேரத்தில் இங்க் கடன் வாங்கும் முறை உண்டு. எழுதிக் கொண்டிருக்கும்போதே கல்யாண வீட்டில் கரன்டு போன மாதிரி சில நேரம் திடீரென்று இங்க் நின்றுவிடும். வகுப்பில் நல்ல இங்க் கொடையாளி பெரும்பாலும் படிப்பில் சுமாரான நண்பர்கள்தான். கேட்டதும் பேனாவைக் கழற்றி என் பேனாவில் நிரப்புவார்கள்.
கொடுத்த காசுக்கு மேல் உழைக்கத் தெரியாத பேனாக்கள் செய்யும் வேலையால் சட்டைப் பையில் ஒரு கசிவு, மேல் சட்டை கீழ் முனையில் கசிந்த பேனாவைத் துடைத்த காயங்கள் இருக்கும். துணிதுவைக்கும் அம்மாவின் திட்டுவிழும்.
ஒரு நல்ல பேனா கேட்டு வாங்குவதற்கு நான் கல்லூரிக்குள் நுழைந்த போதுதான் சாத்தியப்பட்டது. அதற்கு இங்க் பாட்டில். ஃபில்லர் வாங்குவது ஒரு வேலையாகிவிடும். அடுத்த கதை வீட்டில் கருப்பு இங்க் வாங்கித்தர மாட்டார்கள். அது தி.க. என்று நினைத்தார்களோ அமங்கலமாக நினைத்தார்களோ தெரியாது. இங்க் பாட்டில் வாங்கப் போனால் ப்ரில் ராயல் ப்ளூ என்று கேட்டு வாங்கிவா என்று அழுத்திச் சொல்லுவார்கள். இங்க் பவுன்மாதிரி மவுசுபெற்றிருந்தது. முன்பெல்லாம் சில்லறையில் கடைகளில் அவுன்ஸ் கணக்கில் மருந்து கடை மாதிரி அளந்துதான் இங்க் கொடுப்பார்கள். ஒரு பாட்டில் வாங்குவது குடும்பங்களில் பொருளதாரம் கட்டுப்படியாகாது. அப்போதுதான் அமுக்கு பேனா என்று அழைக்கப்படும் பால்பாய்ன்ட் பேனாக்கள் பிரபலமாகத் தொடங்கின. அது காசு கூட இருந்ததால் வாங்கிவிட முடியாது. என்ன இளங்கலை இலக்கியப் பாடம் வரையில் ஏதோ பொறுப்புக்கு பேனா பயன்படுத்தினாலும் முதுகலையில்தான் அதிகமாக எழுத வேண்டியிருந்தது. அசைமென்ட், டெஸ்ட், பெரிய பரிட்சைகள் எழுதுவது மிக அதிகமாக இருந்தது. இப்போது பேனா பற்றிய தெளிவான முடிவுக்கு வர வேண்டியிருந்தது.
இதுவரை நான் பயன்படுத்தி வந்த பேனாக்களில் புதிய பெயரில் என்னை கவர்ந்தது கேம்லின் பேனா. அடர் நீலம், அடர் பச்சை, அல்லது கருப்பு நிறங்களில் மற்றும் இங்க் இருப்பைக் கவனிக்க ஒரு கண்ணாடி பகுதி இருக்கும். மெதுவாக கருப்பு நிறத்தில் இங்க் நிரப்பி எழுதும் ஆசையில் தொடங்கியது கேம்லின் பயன்பாடு. கேம்லின் பேனா என் மேல்சட்டை இடது பாக்கெட் அருகில் 1972இல் தொடங்கி 1994 வரை இதயத்தின் ஓசையைக் கேட்டபடி மேல்சட்டை பாக்கெட்டில் என் கூட இருந்தது. சிங்கப்பூர் பணிக்காக புறப்பட்ட அன்று கைவிடப்பட்ட குழந்தை போலாகி வீட்டில் கிடந்தது.
கேம்லின் என் எழுத்து வேகத்தில் நிதானத்தில் என் மனமறிந்து உதவிய பேனா. முதுகலைத் தேர்வுகளில் கையெழுத்து நிதானத்தை ஆசிரியர்கள் மெச்சும்போது ஆசையோடு என் இதயப்பக்கத்து பேனாவைச் தொட்டு நன்றி சொல்லுவேன். நாற்பது முதல் ஐம்பது பக்கங்கள் மூன்று மணி நேரத்தில் முடிப்பேன். அதுவும் பக்கம் பத்து வரியல்ல இடம் விடாத அளவில் எழுதியிருப்பேன். ஒரு ஆழ்நிலை தியான அனுபவத்தை எழுதி முடித்ததும் அடைவேன்.
நண்பர்கள் வட்டம் அதிகம் என் கடிதங்களால் பிரியமடைந்ததில் கேம்லின் பேனாவின் பங்கும் உண்டு. அது ஒரு பேனா மட்டுமல்ல கவிஞர்கள் தன் ஆறாவது விரல் என்பார்களே அது மாதிரி!
தேர்வுக்கு முதல் நாளே லேசான சுடுதண்ணீரில் பேனா நிப்பு, நிப்பு கட்டை, பிடிக்கிற பகுதி, டேங்க், மூடி எல்லாவற்றையும் கொஞ்சம் நேரம் போட்டு கழுவி துடைத்து இங்க் நிரப்புவேன். இருசக்கர வாகனம் புதுசாக வாங்கினவர்கள் செய்யும் பராமரிப்பு போல அந்த வேலை இருக்கும். பேனாவை கழுவி பொருத்தி கையில் பிடித்து இங்க் ஃபில்லரை நிரப்பிய நினைவுகள் என் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து ஊட்டியபோதும் முகம் காட்டும் ஓர் உணர்ச்சி வரும்.
விடுமுறை நாட்களில் மேசையில் பேனா, நோட்டுப் புத்தகம், அருகில் ஒரு ப்ரில் இங்க் பாட்டில் அதன் அருகில் என் கேம்லின் பேனாவும் இருப்பதை அப்படியே கண்ணால் ஒரு க்ளிக் செய்து மகிழ்வேன். ஏதோ என் ரத்த உறவு போல அது எனக்குப் படும். இங்க் நிரம்பிய பேனாவும் பாட்டிலும் சேர்ந்திருப்பதைப் பார்த்தால் அம்மா செலவுக்கு அப்பா பணம் கொடுத்து நிற்கும் அழகு இருக்கும். கேம்லின்பேனாவும் இங்க் பாட்டிலும் ஒன்றில்லாமல் ஒன்றில்லை.
கேம்லின் பேனா எழுத்து பழக்கம் என்னைவிட்டு நின்று போய் முப்பத்தி மூன்று ஆண்டுகள் முடிந்து போய்விட்டன. சிங்கையில் பணி நிறைவு பெற்றுத் திரும்பும்போது நண்பர்கள் நினைவாக சில பேனாக்களில் என் பெயர் பொறித்து கொடுத்தார்கள். கூடவே ஹீரோ, பார்கர் பேனாக்களும் வந்தன.. எல்லாம் அடைப்பட்டு ஒரு பெட்டியில் இருட்டில்ல் கிடக்கின்றன. கேம்லின் மட்டும் பிள்ளைப்பருவக் காதலி வாழ்க்கை முழுக்க நினைவில் இருப்பது போல இருக்கிறது. என் பார்வையிலேயே அது இருக்க வேண்டும். பாட்டிலையும் பேனாவையும் பிரித்து விடாதீர்கள் என்று வீட்டில்
சொல்லிக்கொண்டே இருப்பேன். குழந்தைகள் அருகில் சென்று விளையாட விடாதீர்கள் என்று எச்சரிப்பேன். அவர்களுக்கு அந்த பாட்டிலும் புரியாது பேனாவும் புரியாது. ஒருமுறை வகுப்பறை டெஸ்கில் மறந்து வைத்துவந்துவிட்டேன்.
வார விடுமுறை முடிந்து போய்ப் பார்த்தபோது எனக்காக பத்திரமாக இருந்தது மறக்க
முடியாதது.காலப் பெரும் எல்லையில் மிக தொலைவில் வந்து நின்றாலும் என் கையில் மூன்று விரல்களில் கதகதப்பில் இருந்த அந்த உறவுச் சின்னத்தை தொடர்ந்து
பிடித்துக்கொண்டிருக்கமுடியாமல் கைநழுவிய சோகம் அப்படியே தொடர்கிறது.

பேனா நினைவு. உள்ளுக்குள் ஒழிந்திருந்த அந்த உறவு நினைவை நிழலில் அல்ல நிஜத்தில் கொண்டுவந்த அழகான வரிகள். என்னுடன் என் பேனா வாழ்க்கையை நினைவு படுத்தியுள்ளது என்று கூறலாம். மூன்று ஆண்டுகளுக்கு முன் மனோரா பாலிடெக்னில் கல்லூரியில் இலக்கிய மன்ற தொடக்கவிழாவில் "நிறமாறும் என்போனா" என்ற தலைப்பில் 2 மணிநேரம் உரையாற்றியதை என்னால் மறக்கவிடாமல் செய்தது ஐயாவின் கேம்லின் பேனா. நன்றி.
ReplyDeleteநன்றி முனைவர் அஜ்முதீன்
Deleteபாலிடெக்னிக்
ReplyDeleteபேனாவைப் பேணாமல் போகவைத்தது காலம்! பேணப்பட்ட உறவுகளைக் காணாமல் போக வைப்பது பொருளாதார மோகம்!! திடப்பொருளும் திரவப் பொருளும் திடமாக என்றும் நம்முடன்! ஆனால், பாசத்துடனும் நேசத்துடனும் பழகியவர்களின் பயணம் பாதியிலே!
ReplyDeleteகாலம் செய்யும் கோலம் இது!
நன்றிங்க கணேஷ்
Deleteகேமலின் பேனா. என்றோ கேட்டது. என்னென்ன இனிமையான நினைவுகளை திரும்பக்கொணர்ந்து உணர்வூட்டுகிறது .பள்ளித்தோழர்களின் உறவு கேமலின் பேனா வழியாக. அருமையான கதை. அழகான கவிதை.
ReplyDeleteநேரம்கிடைத்து எழுதியதற்கு மிகவும் நன்றி.
Deleteஅருமை நண்பரே!!கேமலினுக்கு முன்பு பிரில்தான் ! அதில் புளுபிளாக் கலர் மிகவும் நன்றாக இருக்கும்!!நான் வீட்டில் பேனா கேட்டபோது ஸ்டீல் கட்டையும் இங்க் பாட்டிலும் (தொட்டுத்தொட்டு எழுதவேண்டும்) வாங்கிக் கொடுத்தார்கள்! எழுதியதை விட கீழே சிந்தியதுதான் அதிகம்! எனவே வேறு வழியில்லாமல் பேனாவே வாங்கிக் கொடுத்தார்கள்!! எனகென்னவோ என்பேனாவை விட மற்றவர்களின் பேனா நன்றாக எழுதுவதாகவே தோன்றும்!! பேனா வாங்கியவுடன் பிளேடால் படடைநிப்பில் உள்ள கீரலில்விட்டு பேனாமுனையின் வாயை அகலப்படுத்தி பிளேடில் நிப் நுனியைவைத்து தேய்த்து பட்டையாக எழுதும் உபாயத்தை செய்வேன்! அது சிலசமயம் அபாயமாகி வாந்தி எடுக்கும்! வாந்திக்குக் காரணமான எனக்கு சமராராதனை கிடைக்கும்! நான் எட்டாவது பபடிக்கும்போது (1965) பால்பாய்ண்ட் வந்து நெஞ்சில் பாலை வார்த்தது! ஆனால் பரிட்சை இங்க் பேனாவில்தான் எழுதவேண்டும்! பேனாவைப்பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! அதற்குத்தானே பேனா!!
ReplyDeleteஅருமை அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
Deleteகேம்லின் பேனாவின் உறவு!
ReplyDeleteபடித்தேன்! அருமை அருமை!
ஒவ்வொருவர் உணர்விலும் ,
அதுவும் எழுத்தாளர்கள்
கைப் பேனா என்றால் அதில் ஆயிரம் உணர்வுகள்
அடங்கியிருக்கும்! அதுவும்
அப்பாவின் பேனா என்றால் அதில் பாசத்தின் ஈரம் இருக்கும்! உங்கள்*பேனா* ஓர் இலக்கியம்! வாழ்க பல்லாண்டு பல்லாண்டு! அரசு!
நன்றிங்க பேராசிரியர்.
Deleteஅருமையான பதிவு ஐயா!
ReplyDeleteஒரு சாதாரண பேனாவை மையமாக வைத்து, அன்றைய பள்ளி வாழ்க்கை, குடும்பச் சூழல், பொருளாதார நிலை, நட்பு, எழுத்தின் மீதான காதல் என ஓர் தலைமுறையின் வாழ்வியலையே கண்முன் கொண்டு வந்துள்ளீர்கள்.
குறிப்பாக, “இதயத்தின் ஓசையைக் கேட்டபடி” சட்டைப் பையில் இருந்த பேனா என்ற வர்ணனையும், கேம்லின் பேனாவை “ஆறாவது விரல்” என்று உணர்வுபூர்வமாகக் குறிப்பிட்ட விதமும் மிகவும் ரசிக்க வைத்தன.
ஒரு பேனா வெறும் எழுதுகோலாக இல்லாமல், வாழ்நாள் முழுவதும் தொடரும் ஓர் உணர்வுபூர்வமான உறவாக மாறியிருப்பதைத் தங்களின் எழுத்து அழகாக உணர்த்துகிறது.
பேனாவைப் பற்றிய பதிவு என்று படிக்கத் தொடங்கினால், காலத்தையும் நினைவுகளையும் பற்றிய ஓர் அழகிய இலக்கியத்தைப் படித்த நிறைவு ஏற்படுகிறது.
தங்களின் எழுத்தாற்றலுக்கும் நினைவுகளை உயிர்ப்பிக்கும் தனித்துவமான நடைக்கும் என் மனமார்ந்த பாராட்டுகள் ஐயா! 🙏
நன்றிங்க ராஜா.
ReplyDeleteஅருமையான நினைவுகள்.
ReplyDeleteபேனா வைத்திருப்பது ஓர் அந்தஸ்து என்ற மனோபாவம் அப்போது எங்களுக்கு இருந்தது.
பேனா நடிப்பை கீறி விடுவது, ,சட்டைப் பை, கையில் மை எல்லாம் இன்னும் நினைவில் இருக்கிறது
பேனா முழுவதும் கேடாகி எழுத முடியாது என்ற நிலையில் இங்க் டேங்க்கிற்கு இன்னும் ஒரு உபயோகம் இருந்தது..
கையில் பிடிக்க முடியாத அளவுக்கு பென்சில் சிறியதாகி விட்டால் அதை பேனா அடிப்பாகத்தில் சொருகி எழுதுவோம். பென்சிலையும் பேனாவையும் கடைசி வரை உபயோகிப்போம்.
அருமை
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஎங்கள் காலத்துக்கும் பொறுந்தும் அனுபவங்கள் அய்யா
ReplyDeleteபதிவைப்படித்தபோது என்னுடைய பள்ளிக்கால நினைவுகள் சிறிது நேரம் வந்துபோயின. கும்பேஸ்வரர் திருமஞ்சன வீதி ஆரம்பப்பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தபோது எங்கள் வகுப்பு ஆசிரியர் வருகைப்பதிவேட்டின்படி ஒவ்வொருவரும் ஐந்து இங்க் மாத்திரைகளை வாங்கி வரச்சொல்வார். ஒரு மாத்திரை இரண்டு பைசா. கும்பேஸ்வரர் கோயில் தெற்கு வீதியில் உள்ள கல்யாண்ராம் சாயச்சாலையில் வாங்கி அதைத் தண்ணீரில் கலந்து பெரிய இங்க் பாட்டிலில் வகுப்பில் வைத்திருப்போம். தேவையானவர்கள் பயன்படுத்திக்கொள்ள இந்த ஏற்பாடு. அந்த வகுப்பில் படித்த ஒரு நண்பர் அடுத்த வகுப்பில் படித்த தன் சகோதரிக்காக அவருடைய பேனாவில் இங்க் நிரப்பி கொண்டுபோய் கொடுத்துவிடுவார். இது பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது. வகுப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த வசதி என்று மிகவும் கறாராகக் கூறிவிட்டார் ஆசிரியர். அதனை கண்காணிக்கும் வேலை வகுப்புத் தலைவனுக்கு (க்ளாஸ் லீடருக்கு). அவ்வாறே நான் ஈ.எஸ்.எல்.சி. எனப்படும எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றபோது என் அத்தை எனக்கு கண்ணாடி போல ஆங்கில ஏ, பி, சி, டி (இசட் வரை) எழுத்துகள் அமைந்த பேனாவை அன்பளிப்பாகத் தந்தார். பேனாவில் இங்க் ஊற்றினால் வெளியிருந்து பார்த்தாலே தெரியும். பார்க்க அழகாக இருக்கும். இவற்றைப் போல பல அனுபவங்கள். அந்நாள்களை நினைவுகூர்ந்தது இப்பதிவு.
ReplyDeleteசிறப்புங்க ஐயா. மிக்க நன்றி.
Deleteஐயா, தங்களின் பேனா பற்றிய நினைவுகள் மனதை நெகிழச் செய்தன. பழைய கால நினைவுகளை அழகாகப் பகிர்ந்துள்ளீர்கள். 🙏💐
ReplyDeleteஅருமை அய்யா, நினைவலைகள் மனதை நெருடிவிட்டு போயின இந்த கால தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொருளாதார பௌதிகம்.
ReplyDelete