Sunday, 15 March 2026


 

                                   பனித் துளியில் காணப்படும்

                                     கதிரவனின் வடிவம்

வானத்துக் கதிரவனைவிட

சிறியது அன்று” –கலீல் ஜிப்ரான்

 

ஒரு கவிஞன் தமிழில்  சிறந்த படைப்புகளை அளித்து அதனால் ஒர் உயர் பரிசைப் பெறும்போது தமிழர்கள் அனைவரும் மனதார மகிழ்கிறோம்; மகிழவேண்டும். படைப்பாளியும் அப்பரிசை தமிழர்களுடையதாகவே அர்ப்பணித்துக் கூறியிருப்பதை நாம் சிறிதும் கபடமில்லாமல் ஏற்பதே நல்லது.

கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு  இலக்கியத்திற்கான இந்தியாவின் உயர்விருது ஞானபீட விருது -அதுவும் தமிழில் கவிஞனின் படைப்பு ஆளுமைக்காக வழங்கப்படுவது தொன்மைப் பெருமையும் அழியாத இளமையும் கொண்ட தமிழ் மொழிக்கான பெருமை என்பதால் அனைவரும் மகிழ்வோம்.

தம்பள்ளிநாள்தொட்டு பற்றிக்கொண்ட தமிழ் பற்றிய வியப்பையும் தம் எழுத்து பற்றியும் அவர் “இதுவரை நான்” நூலில் எழுதியிருப்பத்தைப் படித்து அடியேன் ஈர்க்கப்பட்டவன். தொடர்ந்து வந்த கவிராஜன் கதை எனும் பாரதி பற்றிய கவிதை சரித்திரம் பாரதிவாழ்க்கை வரலற்றில் கவிரசம் ஊட்டப்பட்டது. உரைநடையில் கழுத்துவலிக்க படிக்க முடியாவிட்டாலும் இந்நூல் ஒன்றுபோதும். புதுக்கவிதையில் ஒரு மாகவிஞனைப்பற்றி காவியம் சமைத்தவர் என எழுத்தாளர் சாவியே பாராட்டினார்.

80களில் தமிழில் வெளிவந்த சாவி வார இதழை அது  தொடராக வந்தபோது ஆறுநாள்கள் ஆறாமல் தவித்து எழாம் நாளில் பாபநாசம் லக்கிஸ்டோர் பாய் கடையில் வாங்கிப் படித்த இதம் இன்னும் உள்ளது மனதில்.  அந்நூலில் புதுவையில் ஒரு கல்யாண வீட்டில் நடந்த இருபெரும் கவிகளின் முதல் சந்திப்பை இப்படி வர்ணிப்பார்:

“ஓரு கவிதாபந்தம்

பசுவையும் கன்றையும்

சந்தோஷ நெருக்கத்தில்

சந்திக்க வைத்தது.

அந்த நாள்

தமிழ்க்கன்னியின் கூந்தலில்

புதிதாக ஒரு

பூச் சேர்ந்த நாள்”

பாரதியை சுப்புரத்தினதாசன் எனும் பிற்காலத்தின் புரட்சிக்கவிஞர் சந்திப்பை அவர் சொன்னது போன்றவற்றால் அதிகம்  வியப்பாகி வகுப்பறையில்  மாணவர்களின் இலக்கிய வாசிப்பை அதிகம் ஊக்கப்படுத்தினேன்.

அவருடைய முதல் திரைப்படப் பாடல் தொகுப்பு ஒன்று தஞ்சையில் வெளியிடப்பட்டது. தஞ்சை இலக்கிய அன்பர்கள் பெருமளவில் ஏற்பாடு செய்து அந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். பாபநாசம் இலக்கிய அன்பர்கள் திரு இரா.மணிமுடி, திரு கண்ணன் இருவரும் தஞ்சையில் உள்ள  தொடர்பால் என்னோடிருந்த சிறு குழுவினரையும் வைத்து நிகழ்ச்சிக்கு அழைக்க வைரமுத்து பாபநாசம் வந்திருந்தார். வாகனத்தில் இருந்தபடி என்பெயரையும்  சொல்லி அனைவரையும் அழைத்தார். தஞ்சையை அன்று ஒரு முக்கிய இலக்கிய கேந்திரமாக உருவாக்கும் பலரையும் பக்கத்து ஊர்களிலும் அவ்வாறு அழைத்திருந்தனர். இன்றும் அதே நெருக்கச்சுற்றம் அவருடன் உள்ளது.

தஞ்சை ஆற்றங்கரை பள்ளிவாசலில் தொழுகைப்  பணியிலிருந்த நினைவில் வாழும் எஸ்.எம்.ரபியுத்தீன் பாகவி பெரும் தமிழ்ப்பற்றும் இலக்கிய வாசிப்பும் கொண்டவர்.6-10-99 நாளில் கையொப்பமிட்டு எனக்களித்த ஒரு நூல் பெய்யெனப் பெய்யும் மழை. அந்நூலில் எட்டையபுர அரண்மனையவிட்டு பாரதி மதுரைக்கு ஆசிரியப்பணிக்குப் போனதை,

ஒருநாள்-

 குயில்

 கூண்டு தாண்டியது..”

 

“பொதிகைத் தென்றல்

பூப்பெய்திய

மதுரைக்கு வந்து

மையமிட்டது!”

இப்படியொரு வாசிப்பில் வைரமுத்து நம் இலக்கிய உறவானார். திரைப்பாடல் அவரால் ஒரு புது பரிணாமம் பெற்றதை கவிக்கோ குறிப்பிட்டுள்ளார். பாடல்களில் படிமச் சிதறல்களும் உவமைகளும் உள்ளே இடம் பெற்றன. விசிட்டர் லென்ஸ் எனும் ஒரு வார இதழில் அன்று அவர் திரைப்படங்களை-“தீக்குச்சிகள் தின்னத்தருவோம்” என்று ஒரு உத்வேகம் காட்டியவர்தான். மாறாக பாடல்களில் பல பரிணாமங்களையும் காட்டி வென்றார். காலம்தான் மாற்றங்களின் கொல்லுப்பட்டற்றை. ஒரு சுயமரியாதை பொதுக்கூட்டத்தில் நெற்றிநீறை அழித்த கண்ணதாசன்தான் பின்னாளில் அர்த்தமுள்ள இந்துமதமும் இயேசு காவியமும் எழுதினார். அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடைமையடா பாடியவர்தான் இந்தியநாடு நம்நாடு இந்தியன் என்பது என்பேரு பாடினார்.  அவர்தான் மாற்றம் என்பது மானிட தத்துவம் என்றார்.

வைரமுத்துவின் கவிநயங்களும்,கதை எழுத்தும், பேச்சும் எண்ணற்றோர் உள்ளங்களில் இடம்பெற்றவை. என்னளவில் தமிழாற்றுப்படைதான் இந்தக் காலத்தில் பொறிக்கப்படவேண்டிய கல்வெட்டு சாசனம். தமிழர் வரலாற்றில் வகைக்கொரு எழுத்துநாயகர்களை மிக கவனத்துடன் கூடிய வரலாற்றுத் தகவல்களுடன் வகுத்துக்கூறியிருக்கிறார். அது  தமிழர்கள் தம் பண்பட்டுப் பெருமை எண்ணி நெஞ்சுநிமிர்த்தவும் எதிர்காலம் நின்று நிலைக்கவும் எழுதப்பட்டுள்ளது. ஆற்றுப்படை தொல்கப்பியர் தொடங்கி அப்பர் வள்ளலார் வழியாக பெரியாரிடம் வந்து அப்துல் ரகுமனிடம் முடிகிறது. பெரியார் ஏன்? கேட்கலாம்.

“எழுத்து-சொல்-பொருள்-யாப்பு அணி என விரியும் படைப்பிலக்கியம்தான் தமிழ் என்று மண்டிக்கிடந்த பண்டித மண்டலத்தை உடைத்தெறிந்து  பகுத்தறிவு என்ற நான்காம் தமிழை உண்டாக்கிய சுயம்பு என்று சொல்வதா?”

 என்ற அவர் நியாயம் ஒன்று அதனுள் உள்ளது.

வைரமுத்து அதிகமாக விமர்சிக்கப்பட்டவர். திராவிட இயக்கச் சார்பு, திரையிசைப்பாடலில் செல்வாக்கு, செல்வப்பெருக்கம், இலகில்லாத அரிதான தமிழ் அமைப்புகள் தொடர்பு, கரிசனமில்லாத நூல்கள் விற்பனை,பாலியல் புகார் என்று அவர்படைப்பின் தரத்தை, உவமைகளின் உயரத்தை,எழுத்தின் ஏற்றத்தை விட்டுவிட்டு என்னவெல்லாமோ பேசிக்கொள்வார்கள். ஆண்டாள் பற்றிய அருந்தமிழ்க் கட்டுரையில்

 “ஆழ்வார்கள் பன்னிருவருள் பதினொருவர் ஆணாழ்வர்கள். இவளொருத்தி மட்டுமே பெண்ணாழ்வார். ஆனால் மொழியின் குழைவிலும் தமிழின் அழகிலும்,உணர்ச்சியின் நெகிழ்விலும்.பெருமாளுக்கென்றே முந்திவிரிக்கத் தலைப்பட்டவள் முந்தி நிற்கிறாளே!”

என்று பெருமை கூட்டியவர் தன் கட்டுரையின் முடிப்பில் சொன்ன ஒரு மாற்றுப்பார்வைக்காக பாய்ந்த கூர்மை அம்புகள் அவரைச்  சோர்வடையச் செய்துவிடுமோ என்ற சூழலைத்தந்தது. அதற்காக படைப்பாளியின் அப்பழுக்கில்லாத கிராமத்துத் தாயையே பழித்து சொல்தூற்றினார் ஒருத்தர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கடிதத்தில் ஒருமுறை படித்த நினைவு. எழுத்துத் திறமை கொண்டவரின் தனிப்பழக்கத்தை வைத்து சாய்ப்பது பண்பாகாது. கண்ணகி படத்திற்கு உன்னதமான வசனம் எழுதிய இளங்கோவன் மதுப்பழக்கத்தை யாரோ ஒருத்தர்  சுட்டியபோது இடித்துக் கூறினார் கலைஞர். கலைமாமணி கவி.கா.மு.ஷரீபு அவர்களின் வசதிக் குறைவுக்காக வீடுகட்டித்தர குறிப்பிட்ட கூட்டத்தில் “எழுத்தாளன் புலமையைப் பேசுங்கள் வறுமையைப் பேசாதீர்கள்” என்று கண்டித்தார்.

வைரமுத்துவுக்கு கிடைத்திருக்கும் அத்தனை விருதுகளும் பரிசுகளும் பட்டங்களும் பாராட்டுகளும் தமிழால்!

வைரம்பாய்ந்த முத்துவை மிகச் சிறிதாக எண்ணினாலும் தமிழ்முடியில் அது அலங்கரித்துக்கொண்டே இருக்கும்  கவிப்பேரரசரே.

தமிழில் அவருக்கு அரியாசனமான அறிவாசனம்  கிடைத்துள்ளது!   

எழுதிக்கொண்டே இருங்கள்! வாழ்த்துகள்!

ப.திருநாவுக்கரசு

(அரசு இலக்கியமுற்றம் தஞ்சை)

 

13 comments:

  1. தமிழுக்குக் கிடைத்தப் பெருமை.

    ReplyDelete
  2. அவரது இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் என்ற புத்தகத்தை எனக்கு பரிச்சயம் ஆக்கியது தாங்கள் தான் அய்யா... முதல் வாசிப்பு அனுபவம். ஞான பீடம். அருமையான பதிவு.

    ReplyDelete
  3. வைரமுத்துவை வாசிப்பதும் பேசுவதும் தென்றலைக் கையில் பிடித்துக் கொண்டு நந்தவனத்தில் நடப்பது போன்ற சுகானுபவம்.
    எத்தனையோ பேசலாம்.

    விமர்சனத்தைப் பொறுத்தவரை அது தவிர்க்க முடியாதது.
    ஜெயமோகனின் மிகக்கடுமையான விமர்சனத்தைப் படித்தேன்.ஒஒதுக்கித்தள்ளிவிட்டு நடக்க வேண்டியதுதான்.நம்மைப் பொருத்தவரைஇது பெருமையான செய்திதான்.

    ReplyDelete
  4. படிக்கும் யாவருக்கும் தமிழ் ஆர்வம் பொங்கி எழுகிறது. மிகவும் சிறப்பான பதிவு.🤝🤝🤝

    ReplyDelete
  5. ஆழமான இலக்கியப் பார்வையுடன் எழுதப்பட்ட அருமையான பதிவு ஐயா. வைரமுத்து அவர்களின் படைப்புலகை நினைவூட்டும் சிந்தனையூட்டும் கட்டுரை.

    ReplyDelete
  6. அருமை சார்
    மின்சாரம் பாயும் தமிழ்

    ReplyDelete
  7. வசை பாடிகளுக்கு மத்தியில் இவர் வைரமாக பெற்ற ஞான பீடம் உயர்வு
    தங்களின் நுண்ணிய ஆய்வில் யான் தெரிந்து கொண்டது அதிகம் நன்றி அய்யா

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...