கதைகளின்
கதை
புகழ்பெற்ற வேள்பாரி சரித்திரப் புதின ஆசிரியர் சு.வெங்கடேசன் விகடனில் எழுதிய ஒரு
கட்டுரைத்தொடர். “கதைகளுக்குப்பின்னால் இருக்கும் வரலாற்றுக் குறிப்புகளையும்
வரலாற்றுக்குள் செரிமானமாகிக் கிடக்கும் கதைகளையும் பற்றிய கட்டுரைத்தொடர் என்று
அவரே முன்னுரையில் குறிப்பிட்டுவிட்டார். முதற் பதிப்பு டிசம்பர் 2018இல் வந்து இந்த 2024 அக்டோபரில் அடுத்த பதிப்பும்
வந்திருக்கிறது. முகநூல் வெளியில் வந்த விளம்பரத்தைப் பார்த்து அதை வாங்கினேன். 128 பக்கங்களில்.
சு.வெங்கடேசன்
நம் மனம் கவர்ந்த பொதுநல,தமிழ்நல,வரலாற்று நலத் தொண்டராக இருப்பதால் ஒரு சிறு
தூண்டலுடன் வாங்கினேன். வீண்போகவிடவில்லை அவர்.
வரலாற்றுஆதாரத்
தரவுகளைத் துருவித்தேடிக் கிடைக்காமல் போவதும் தேடி ஓய்ந்தபின் தானாக ஒரு நாள்
கையில் வந்து விழுவதும் தகுதியான ஆய்வாளர்கள் கைமேல் இட்டபலன்.
தமிழ்
இலக்கிய மறுமலர்ச்சி நாள் காணும் உ.வே.சா. அவர்கள் சரித்திரமே சிறந்த சான்று.
முதன்மை ஆவணங்கள் அத்தகைய அபூர்வமானத் தேடலுக்குப்பின் கிடைப்பவை. குதிரைகளுக்கு 200 நாட்களுக்கு வெந்நீர்க்
காய்ச்ச அடுப்பெரிக்க ஒலைச் சுவடிகளைப்போட்டிருக்கின்ற நெஞ்சை சுடும்வரலாறு காதுகளில் அமிலம் பாய்ச்சுவதுபோல் உள்ளது.
பெரும்பாலானவை விதிகளால் அல்ல சதிகளால் அழிந்தவை.
என்
தாத்தா வீட்டில் எங்கள் வீட்டில் மாமாக்கள் வீடுகளில் ஒரு கம்பியில் கடுதாசிகள்
தபால்கார்டுகள் இங்கிலாந்து ( INLAND LETTER ) லெட்டர்கள் ரசீதுகள்கொத்தாகக்
கோர்த்துக் கிடந்ததும், திண்ணைச் சுவரில்
போடப்பட்ட பச்சிலைப் புள்ளிகள் தெரிவித்த தயிர்,மோர், நெய் அளவு ‘சேர்’
கணக்குகளும்தான் நம்மிடம் சிறிதளவு இருந்த முறையில்லா ஆவணப்பாதுகாப்பு முறைகள்.
எந்தச் சான்றும் இல்லாத கடன் சண்டைகளில் “இல்லைன்னு துண்டைப்போட்டுத் தாண்டு”தான் ஒரே
கடைசி ஆதாரம்.
ஓலை
ஆவணங்களுக்குப்பின், கல்வெட்டுகளும்,பட்டயங்களும் ,தாள் பத்திரங்களும் காலத்தில்
வளர்ந்தவை. ஆனால் சமூகப் பழக்க வழக்கங்கள் பண்பாட்டுக் கூறுகள், நாடுப்புற
சட்டதிட்டங்களுக்கான பதிவேடுகளைத் தேட அன்னப்பறவையும் பன்றியவதாரங்களாலும் கூட
முடியாது.மக்கள் கிடைத்தவற்றை பாதுகாத்திருந்தால் ஒழிய கிடைப்பது அரிது. அந்த அரிதில் நுழைந்து கண்டெடுத்த வாழ்வியல்
தொடர்புடைய பதிவுகள்தான் கதைகளின் கதை.
உலகிலே தமிழன் மட்டுமே கண்டு பகைவர் தலைகளை அறுதெறிந்த போர்க்கருவி வளரி. கும்பெனியாரின் வருகைக்குப்பின் சுவடு அற்று ஒழிந்தது தமிழனின் போர்க்கருவியல்ல கைகள். சோகம் கப்பிய அந்தவரலாற்றில் அந்தக் கருவியின் உலோக வாசனை மட்டுமே கதைகளில் மிதந்ததை மிஞ்சி மதுரை மாவட்டம் கோவிலாங்குளம் கிராமத்தில் பட்ட சாமிக்குப் படையலாக வைக்கப்பட்டிருந்த 200 வளரி எனும் பண்டைத்தமிழரின் எறிபடைகளை- காலம் காலமாக எதிரிகளின் கண்களுக்கு எட்டும் முன் தலைகளைக் கொய்துபோன அரிதினும் அரிதான போர்க்கருவியைக் கண்டு எழுதிய மெய் சிலிர்க்கும் பதிவு.
அரிதில் கட்டுரை ஆசிரியர் கண்டு சொன்ன வளரிகள்
வளரி கதையல்ல தமிழன் கையிலிருந்து
அவற்றைப் பறிக்க வெள்ளையன் தடைச்சட்டம் போட்டு நாடுமுழுக்க பறித்து ஒழித்தபின்
அழிந்த சுவடில் கிடைத்த இருப்புச் சுவடுகள் பற்றிய கட்டுரை “வளரி”
12
தலைப்புகளில் ஒன்றைத்தான் சுட்டியிருக்கிறேன். பிரிட்டிஷார் 1830 ஆம் ஆண்டில்
கொண்டுவந்த ‘போக்கிரி ஒழிப்புப் சட்டம்” சமவெளிகளில் எந்த நேரத்திலும்
சந்தேகப்படும் யாரையும் சுட்டுக்கொல்ல ரானணுவத்துக்கு வாய்ப்புக் கொடுத்த சட்டம்.
அதன் பேரில் போக்கிரிகள் என்ற வசைச் சொல்
காட்டிகொடுத்த ரத்தபலிகள். கேட்பாரற்று சுடப்பட்ட அடிநிலை மக்கள் பற்றிய
அவலம்தான் ‘போக்கிரி’ என்ற கட்டுரை. எஞ்சிய பத்தையும் தயவு செய்து
படியுங்கள்.
முடிக்காமல் கீழேவைக்க முடியாத நூல்.
சு.வெங்கடேசன் எழுத்தில் இருக்கும் ஈர்ப்பு சொல்லப்படும் நியாயத்தின் குரல். மக்களில் அடித்தட்டு மேல்தாட்டு ஆட்சித்தட்டு அதிகாரத்தட்டு என்ற வசதிகள் உள்ளவரை ஆன்மநேயமும் உயிர் இரக்கமும் இல்லாத கொலைப் பசிகள் ஓய்வதில்லை என்ற அடிநாதம் ஒலிக்கும் கட்டுரைகள் அவை. நன்றி சு.வெங்கடேசனார் அவர்களே.
உங்கள் சுறுசுறுப்பினால் எங்கள் உறக்கம் பாழாய்ப் போகட்டும்.
உங்கள்
அரசு
படங்கள் நன்றி விகடன்



விளக்கத்திற்கு நன்றி ஸார்
ReplyDeleteஅருமையான விரிவுரை ஐயா..
ReplyDelete