Friday, 19 December 2025

நன்றறிவோம்..

 

நலம் தரும் சொல்-முகநூலில் படித்ததை நன்றியுடன் பகிர்கிறேன்



முதியோர் காப்பகம் ஒன்றிற்கு ஒரு மணியார்டர் வந்தது.

"இத்துடன் ரூபாய் ஆயிரம் அனுப்பியுள்ளேன்... 

நானும் என்னுடைய மனைவியும் இதிலுள்ள முகவரியில் இருக்கிறோம். 


நாங்கள் ஒரு சிறிய இட்லி கடை நடத்தி வருகிறோம் . 

இருவரும் அறுபது வயதைக் கடந்தவர்கள் .

நான் இறந்து விட்டால்... 

என்னுடைய மனைவியைப் பார்த்துக்கொள்ள ஒருவரும் இல்லை.

எனவே 

எனக்குப் பின் அவளை உங்கள் இல்லத்தில் பராமரிக்க வேண்டும். 

அதற்காக என்று இந்தப் பணத்தை அனுப்புகிறேன்.


வாராவாரம் ரூபாய் 1000 அனுப்பி விடுகிறேன் பாதித் தொகையை உங்கள் காப்பகதிற்கான செலவுக்காக எடுத்துக்கொள்ளுங்கள் 

மீதி பாதியை என் மனைவி பெயரில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்.


என்றாவது ஒருநாள் நான் அனுப்பும் தொகை வராவிட்டால்... 

தயவுசெய்து இதில் உள்ள முகவரிக்கு வந்து என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள்." 

இப்படிக்கு மீனாள் ராமசாமி. 

என்று எழுதி இருந்தது.


சென்னையில் உள்ள முதியோர் காப்பகத்தில் அறுபது வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள் ஐம்பது பேர் இருக்கின்றனர். 

தொடர்ந்து வாராவாரம் இந்த தொகை காப்பகத்திற்கு வந்து கொண்டிருந்தது. 


'யார் இந்த மீனாள் ராமசாமி? ' 

என்று அறிந்து கொள்ள காப்பக மேனேஜருக்கு, ஆவல் அதிகரித்து வந்தது. 

'ஒரு நாள் நேரில் சென்று பார்த்து வரவேண்டும்' என்று நினைத்தார். 

ஆனால், வேலைப் பளு காரணமாக

முடியவில்லை.

அன்று ஞாயிற்றுக்கிழமை... 

'இன்று, கண்டிப்பாகப் பார்த்துவிட்டு வரவேண்டும்' என்று முடிவு செய்து கொண்டார். 


அவருடைய இருசக்கர வாகனத்தில் அங்கு செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆனது.

சின்ன கட்டிடம்... 

வெளியில் தகரப் பலகையில் கூரை வேயப்பட்டிருந்தது. 

பெரிய கேஸ் அடுப்பு மற்றும் இட்லி பானை எல்லாம் இருந்தது. 


எழுபது வயது இருக்கும் ஒரு முதியவர் நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு இருந்தார். 


"நீங்கள் தானே மீனாள் ராமசாமி?” 

என்று கேட்டார். 

“ஆமாம் தம்பி! நீங்கள் யார்? “ என்று கேட்டார்.

விவரங்களைச் சொன்னார்.

“அப்படியா தம்பி 

ரொம்ப சந்தோஷம்... 

உட்காருங்க. 

ஏதாவது சாப்பிடுகிறீர்களா?” 

என்று இருக்கையைக் காண்பித்தார்.


“ஒன்றும் வேண்டாம் 

தண்ணீர் மட்டும் கொடுங்கள்”

தண்ணீர் கொடுத்தபடியே, 

“நாங்க இரண்டு பேரும் இந்த இட்லி கடையை முப்பது வருடங்களாக நடத்தி வருகிறோம்...

ஆரம்பித்தில், இரண்டு இட்லி ஒரு ரூபாய் என்று விற்று வந்தோம் .

பிறகு இரண்டு, மூன்று என்று இப்போது ஐந்து ரூபாய்க்கு விற்று வருகிறோம். 


எங்கள் கடையில் நான்கு இட்லி சாப்பிட்டாலே சாதாரணமாக ஒருவருக்கு வயிறு நிறைந்துவிடும்.

கூலி வேலை பார்ப்பவர்கள் மற்றும் கல்லூரியில் படிக்கும் பிள்ளைகள் என்று நிறைய பேர் வருவார்கள். 

நாங்கள் இருவரும் தான் வேலை செய்கிறோம். 


எங்களுக்கு குழந்தைகள் இல்லை...


எனவே, அதிகம் செலவுகள் இல்லை. 

அதனால் குறைந்த விலையிலேயே விற்பது என்று முடிவு பண்ணி விட்டோம்.

வாராவாரம் உங்கள் காப்பகத்திற்கு அனுப்பிய தொகையை விட மேலும் கொஞ்சம் மிஞ்சும்... 

அதை ஏழைக் குழந்தைகள் படிப்பதற்கு நோட்டுப் புத்தகங்கள் என்று என் மனைவி வாங்கிக் கொடுத்து விடுவார். 

எல்லோரையும் எங்கள் குழந்தைகளாகப் பாவித்துக் கொள்கிறோம்” 

என்று விபரமாகச் சொல்லி

 முடித்தார்.


இதற்குள் மணி மாலை ஐந்து ஆனது.

“இப்போது ஆரம்பிச்சா தான் ஆறு மணிக்கு இட்லி ரெடியாகும்” என்று சொல்லிவிட்டுத் தன்னுடைய வேலையைப் பார்க்க ஆரம்பித்தார்.


“சரிங்க ஐயா,

உங்களைப் பார்க்க வந்தேன். 

வேறு விஷயம் இல்லை...

கொஞ்ச நேரம் இங்கே இருந்துவிட்டுப் போகிறேன்" என்றார் மானேஜர்.

சரியாக ஆறு மணி இருக்கும் ஒரு பெரிய பாத்திரம் நிறைய இட்லி இருந்தது .

அடுத்த பாத்திரத்தில் நிறைய சாம்பார் இருந்தது .

வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவரும்

“நான்கு கொடுங்கள் ஐந்து கொடுங்கள் "

என்று ஒரு பாத்திரத்தில் இட்டிலியும் மறு பாத்திரத்தில் சாம்பாரையும் வாங்கிக் கொண்டு சென்றார்கள்.


ஆச்சரியம் என்னவென்றால், அங்கு 

கல்லாப்பெட்டி அருகில் யாரும் இல்லை. 

வருபவர்கள் அதற்கான பணத்தைப் பெட்டியில் போட்டு விட்டு பாக்கிச் சில்லரையும் எடுத்துக்

கொண்டார்கள். 

பெரியவர்கள் இருவரும் அந்தப் பக்கமே பார்க்கவில்லை. 

இட்லி சாம்பார் கொடுப்பதிலேயே கவனத்தைச் செலுத்தினார்கள்.


“கல்லா பெட்டியில் ஒருவரும் இல்லையே? 

யாராவது ஏமாற்றினால் என்ன செய்வீர்கள் “

என்று கேட்டார் மானேஜர்.

“இல்லை தம்பி யாரும் அப்படிச் செய்ய மாட்டார்கள்.

அப்படியே இருந்தாலும் போனால் போகிறது. 

காசு இல்லாமல் கூனிக் குறுகி பிச்சை எடுப்பது கஷ்டமாக உள்ளவர்கள் சாப்பிட்டு விட்டுப் போகட்டும் என்று விட்டு விடுவேன்”

“இந்த நாள் வரை எனக்கு எந்தவித நஷ்டமும் இல்லை. இதில் எனக்கு மகிழ்ச்சி தான்” 

என்று சொன்னார். 


மானேஜருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. 

'இப்படியும் மனிதர்களா?' என்று வியப்படைந்தார். 

மேலும் கொஞ்ச நேரம் இருந்துவிட்டு அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஊருக்கு வந்துவிட்டார். 

மாதங்கள் போனது.


கடந்த இரண்டு வாரங்களாக மணியார்டர் வரவில்லை. 

'என்ன விஷயம்?' என்று அவருக்குப் புரியவில்லை.

காப்பகத்தின் உரிமையாளரிடம் சொல்லி இருவரும் காரில் போவதாக முடிவு செய்தார்கள்.

மாலை மணி ஆறுக்கு போய் சேர்ந்தார்கள். 


எப்போதும் போல் இட்லி வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.

மீனாட்சி அம்மாள் மட்டும் இட்லி கொடுத்துக் கொண்டிருந்தார்.

எல்லோரும் வந்து வாங்கிக் கொண்டு போனார்கள். 


அதே கல்லாப்பெட்டி . 

எல்லோரும் பணத்தைப் போட்டு பாக்கியை எடுத்துக் கொண்டு போனார்கள். 

சாம்பார் பாத்திரத்திலிருந்து வாங்குபவர்களே சாம்பாரை ஊற்றி கொண்டு போனார்கள்... 

மீனாள் ராமசாமியை மட்டும் காணவில்லை.


உள்ளே நுழைந்த போது அவருடைய பெரிய புகைப்படம் மாலை போட்டு வைத்திருந்தார்கள். 

மேனேஜருக்கு புரிந்து விட்டது.

விசாரித்ததில்... 

அவர் இறந்து இருபது நாட்கள் ஆனதாம். 

அங்குள்ள மக்கள் உதவியால் ஈமச் சடங்குகள் நடந்ததாம். 

இரண்டு நாட்களாகத் தான் மறுபடியும் வியாபாரத்தை ஆரம்பித்துள்ளாராம் அவர் மனைவி.


“உங்கள் கணவர் எங்கள் காப்பகத்திற்கு வாராவாரம் பணம் அனுப்பும் விவரம் உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டார். 

“தெரியும் “என்று சொன்னார்.

“நீங்கள் காப்பகத்திற்கு வருவதற்குத் தயாராக இருக்கிறீர்களா?” என்றார். 


“இல்லை ஐயா! அவர் இறந்தவுடன் இங்கு உள்ளவர்கள் காட்டிய அன்பு என்னை வியப்படையச் செய்து விட்டது. 

எனவே என்னால் முடியும் வரை இந்த கடையை நடத்துவது என்று முடிவு செய்துள்ளேன்.

அடுத்த வாரம் முதல் என்னுடைய கணவர் அனுப்பும் தொகையை, நானே தொடர்ந்து அனுப்பி வைக்கிறேன். 

அதை நீங்கள், உங்கள் காப்பகத்தின் கணக்கில் வைத்துக் கொள்ளவும். 


அங்கு உள்ள வயதானவர்களுக்கு என் கணவருடைய ஆசைப்படி உபயோகப்படட்டும்.

என்னைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். 

இங்கு உள்ளவர்கள் எல்லோரும் என்னை நன்றாக பார்த்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்றார்.


“சரிம்மா, உங்களுக்கு ஏதாவது உதவி தேவைப்பட்டால் எங்களுக்கு போன் செய்யுங்கள்” 

என்று சொல்லி காப்பகத்தின் முகவரி அட்டையைக் கொடுத்து விட்டுத் திரும்பினார்கள்.

இப்போது அவர்களுக்குபுரிந்து விட்டது...


*இந்த உலகம் எப்படி பட்டது * என்று... 

எதையும் பெறுவதை விட... 

*கொடுப்பதில் தான்... * 

*ஆனந்தம்,*

*அமைதி,*

*திருப்தி* 

*நிம்மதி* உள்ளது. 

இதை புரிந்து கொண்டால் நாமும் புத்திசாலி தான்.

-------------------------------

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்றாத் துணை

(அறன் வலியுறுத்தல் குறள் எண்:36)


பொழிப்பு (மு வரதராசன்): 

இளைஞராக உள்ளவர் பிற்காலத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று எண்ணாமல் அறம் செய்யவேண்டும். அதுவே உடல் அழியும் காலத்தில் அழியாத் துணையாகும்.

Friday, 28 November 2025

வினாவும் கேள்வியும்


தோழமையின் வினா.. 

என் நினைவே
உனக்கில்லையா? 
என்ற 
கேள்விக்களைகள்
கண்டபடி முளைக்கின்றன. 

விதைபோடாமல்
வீரியமாக முளைத்து விடுகின்றன. 

கால்நூற்றாண்டாக
வறண்ட பாசத்தின்
வம்பிழுக்க வந்த
 கேள்வி அது! 

நினைப்பிரும்பில்
துருப்பிடிக்கவைத்த
ஈரத்தின் புதிர்க் கேள்வி அது! 

சூட்டுச்சட்டியில்
தெளித்த நீர்த்துளி
மீளப்பிறக்கும் ஆசைப்பிதற்றல் அது! 

நாள்பட ஊறிய
கள்ளின் மயக்கம் அது! 

தொலைவில் சென்ற தொடர்வண்டி
கடைசிப்பெட்டியின்
முதுகு அது! 


உறவும் பழக்கமும்
உண்மை வேடமிட்டால்
பகையின் அந்தரங்கம்
பவிசுகாட்டிவரும். 

பசையற்ற
அஞ்சல்தலை
காதல்கடிதம்
கொண்டு செல்லுவது கனவு தான். 

கேள்வியே காலம்
கடந்தபின்
பதிலும் காலமாகிவிடாதா
என்ன? 

என் நினைவு 
உன்னிடத்தில்
இத்தனைகாலம்
கேள்வியாக இருந்தபின்
நான் மறக்க
தடை ஏது? 

-ப.திருநாவுக்கரசு


Thursday, 30 October 2025


 

கண்டறியாதன… … 


பிரும்மாண்ட

பொதுக்கூட்டம் 

கலைந்தது திடலில். 


குப்பைகள் அகற்றிய

என்தோழன்

கண்டறியாதன கண்டான். 


தலைவனுக்கு மூச்சுத்தினறக்

குளிப்பாட்டிய சோப்புக்கட்டிகள்

சிதறிக் கிடந்தன. 


அடுக்கு மொழிகளும் வாழ்த்துகளும்

மிதிபட்டுச்சிதறி

குற்றுயிராய்க் கிடந்தன. 


எதிரியை வசைபாடி

தங்கள் தலையில் துப்பிக்கொண்ட

எச்சில் ஈரம்பட்டுக் கிடந்தது பூமி. 


தாக சாந்தி தந்துவிட்டு

உடைத்துக் கொண்ட

மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த

குருதியில் குந்த அடித்துக்கொண்டன

ஈக்கள். 


மாநகர ஏமாளிகள்

சூட்டிய மலர்மகுடம்

மண்ணில் குப்புறக்கிடந்து. 


கடலைப்பொட்டலக்

காகிதக்குப்பையுடன்

கண்ணீர் மகஜர்கள்

கசங்கிக்கிடந்தன. 


தின்ன இரைதேடி

திடலுக்குவந்த

நாயும் குட்டியும்

தலையிலடித்துக்கொண்டு

திரும்பிச்சென்றன. 


காரணம் தெரியாமல்

கழன்ற காலணிகள்

போக மனமில்லாமல்

மயங்கிக் கிடந்தன. 

ஃஃஃஃஃ

ப. திருநாவுக்கரசு


Thursday, 23 October 2025

பூஞ்சை


பூஞ்சை
**********
வகை வகையாய்
பூஞ்சைகளின்
பெருக்கம். 

பயிர்களைத் தொற்றி
பண்டங்களைக் கெடுத்து
வாசம் செய்கின்றன
நம்மிடமும்! 

கல்லான நட்பும்
நயவஞ்சகப்
பூஞ்சை உளியால்
சிதறிப் போனது! 

காதலியை
'உயிரே' என்ற
நாளான வார்த்தை
பூஞ்சையாகி
பொட்டை அழித்தது! 


வெற்றிக்கு 
மாலை போட்டு
தோல்வியில் விலக்கும்
கண்கெட்ட கட்சிப் பூஞ்சை! 

அமுதத் 
தமிழ்ச் சொற்களில்
அறிவுகெட்ட பூஞ்சைகள் 
'அப்பாடக்கர்கள்'
'வச்சுசெய்வதால்'
பாதாளச் சாக்கடையில் பந்திவிரிக்கின்றன! 

குடும்ப ஈரத்தில்
வளர்ந்த பூஞ்சை
நேசம்திரித்து
பேச்சை அழித்து
முகத்தில் விழிக்காது
முறித்துப் போட்டது! 

ஆயிரம்காலப்
பயிர்முடிச்சை
அரைமணிக்குள்
அவிழ்த்து எறிகிறது
மணவிலக்கு எனும்
மானம் கெட்ட பூஞ்சை! 

+++++++++++++

ப. திருநாவுக்கரசு




Saturday, 18 October 2025

 


போகாது… வரும்! 

எழுதப்படாத

சுய சரித்திர வரிகளுக்கு

நினைவாற்றல் அதிகம்! 


தூங்கையில்

எழுப்பி கதைசொல்லும்

சாமக்கோழி அது! 


தப்பான விடைக்காக

5ஏ டீச்சர் 

முருகனைக்

குட்ட சொன்னதில்

விழுந்த தலைமேடு 

படுகிறது தொடுகையில்! 


சேர்ந்துவந்த சேகர்

குச்சி ஐஸ் வாங்கி

தனியாகப் போய் உறிஞ்சியது 

இன்னும் கரையாமல் 

நிற்கிறது! 


டீச்சர்கொடுத்த சுதந்திரநாள்

'பெப்பர்மன்ட்'மிட்டாய்கள்

அம்மா பார்க்கும் முன்

தடுக்கிச் சிதறி

கிடக்கின்றன இன்னும்

எறும்பு ஏறாமல்! 


பட்டாசுக்கு பணமில்லாமல்

பக்கத்து வீட்டுப் பிள்ளை

மத்தாப்புகளையே

பார்த்துக்கச் சொன்ன

அப்பாவின் ஒளிமங்கிய

சிரிப்பு மறையவில்லை! 


ஒரு நள்ளிரவு

சாக்குருவி ஓசைக்கு

விழித்த காதுகளில்

அம்மாவிடம் அப்பாமுனகிய

“எது கேட்டும் வாங்கித்

தரமுடியவில்லையே”

கேட்டது ! 


கோழி கூவிவிட்டது

பள்ளிக்கூடம் போக

கட்டணமில்லா 

கட்டை வண்டி கிடைத்தது! 


ஃஃஃஃஃஃஃஃஃஃ

ப. திருநாவுக்கரசு



Sunday, 12 October 2025

விடைபெறும் முன்




ஆளாமல் ஆண்ட
குடும்பத்தின் அரசன்
கிழவனானான்!

அவன் முனகல்களில்
எரிமலை ஒன்றின்
இரைச்சல் இருந்தது!

வடிந்து வடிந்து
பெருநதி காட்டிய மணலோ பலரால்
கொள்ளை போனது!

மன்னன் ஆண்ட
பெருநிலம் எல்லாம்
பிள்ளைகள் கல்விக்கு
நன்கொடையானது!

மணிமகுடக் கற்கள்
மகள்களின்
இல்லறம் ஜோடிக்க
கழன்று போயின!

மகுடம் மட்டும்
தனி விலையாகி
மகாராணிக்கு
மருத்துவம் செய்தது!

கையின் கடகங்கள்
உடன்பிறந்தாள்களின்
கண்ணீர் துடைத்த
கைக்குட்டைகளாயின!

சிம்மாசனத்தின்
பின்னங்கால்கள்
உறவுவேடங்களின்
கடன்தீர்த்து முடிந்தன!

முன்னங் கால்களும்
ஊர்த் திருவிழாவுக்கு
தேர்ச்செலவாகி
கொடை புண்ணியம்
பெற்றது!

கண் போல் காத்துவந்த
கல்விச் சுவடிகள்
வெந்நீர் அடுப்பிற்கு
விறகாய் எரிந்தன!

மிச்சமிருந்தவை
கல்யாணவேட்டியும்
காதலி மோதிரமும்.

பழைய பட்டு
நல்ல விலைக்கு போனதும்
கழற்றாமல் கிடந்த
கைவிரல்மோதிரமும்
கடைசி சிலவுக்கு
காத்திருக்கின்றன!

கட்டியவேட்டிமட்டும்
காடுவரை. ….!

×××××××××
ப. திருநாவுக்கரசு

Wednesday, 8 October 2025

ஊமை வலி

 


எங்காவது

கொண்டு விட்டுவிடலாம்

என முடிவானது.


அன்று

எல்லாருமாக

நான் சம்மதிக்கும்படி

அந்த முடிவைச் 

சொன்னார்கள்.

எனக்கு தெரியாத

சுமைஅவர்களின்

பெரும்கனமானது

புரியாமல்

எதையும் கேட்காமல்

தலையசைத்தேன்!


இந்த நிமிடம்வரை

அதன் 'மியாவ்கள்'

அப்பா பசிக்கிறது 

என்றுதான்

எனக்குக் கேட்டிருக்கிறது.


நாளை 

திசைதெரியாத இடத்தில் 

விட்டு விட்டபின்னும்

அந்த'மியாவ்கள்'

யாருக்கும் புரியும்?


அது யாரைத்தேடிச்

சொல்லியிருக்கும்

அதன் பசியை?

*****

ப. திருநாவுக்கரசு


தீராநதி

  ஆடிப்பெருக்கு ***************** அன்று .. சோலை மலர்களை சேலையாய்ப் போர்த்தி உன் மீன்விழிகளை விழித்து குயிலின் இசையுடன் மயில...