Sunday, 21 June 2026


 

நீ தானே....


அன்புள்ள அப்பா

மழலைகள்

சுலபமாய் உச்சரித்தபோது

அம்மாவும்

அழுத்தி உச்சரித்தபோது

நீங்களும் நாவில்

பிறந்தீர்கள்.


அம்மா தூரிகையால்

தீட்டப்பட்டவள்

நீயோ உளியால்

செதுக்கப்பட்டாய்!


நீ … எங்கள் 

வியப்புகளின்

குறியீடு!


மலையே

நீ கடினம்தான்

உன்னிலிருந்து

எத்தனை ஈர அருவிகள்!


மாதச்சம்பளம் எல்லாம்

வட்டியில் வடிந்தபோது

அம்மா மட்டும்

பரவாயில்லை

முதல் இருக்கிறதே

என்றது யாரை?


உன் காதுகளில்

ஏதப்பா அத்தனை

வெள்ளி வாள்கள்?

அம்மாவின் அன்புச்

சொற்களை குனிந்து ஏற்ற செவிகளுக்கு வழங்கப்பட்ட

வீர விருதுகளா?


குடும்பத் தலைமையில்

நீ பூரணத்துவம்

அடைகையில் உன் முடி

கழன்று விழுந்ததா?

அல்லது

குடும்பப் பாசறையில்

காவல் காக்க எறிபடைகளாக

வீசப்பட்டனவா?


பிடித்துக்கொண்டிருக்கும்

தினசரியை கீழே வைத்து

என்னைப் பார்

உன்னை வாசிக்க

ஒரு தலைமுறை

காத்திருக்கிறது.

*****

ப.திருநாவுக்கரசு



6 comments:

  1. அருமை அய்யா,,
    தன்னலமற்ற திரும்பினால் வெறுமை மட்டும் தெரியும் என்பதால் பின்னோக்கா அரும்தவம் அப்பா

    ReplyDelete
  2. புதுமை, வியப்பு, இயல்பு அற்புதம் அய்யாவின் கவிதைகள் 🌹🌹🌹

    ReplyDelete
  3. தங்களின் கவிதை ஓராயிரம் நினைவுகளை அலை அலையாய் மனதினுள் எழுப்புகிறது

    ReplyDelete
  4. அருமையான பதிவு ஆசிரியரே.

    உணர்வுகளையும் சிந்தனைகளையும் எளிமையாகவும் அழகாகவும் வாசகர்களின் மனதில் கொண்டு சேர்க்கும் தங்களின் எழுத்து நடை மிகவும் ரசிக்கத்தக்கது.

    பகிர்வுக்கு நன்றி. வாழ்த்துகள்!

    ReplyDelete
  5. தந்தையர் தினத்தில் ....எங்கள் தமிழ் ஆசானின் தமிழைக் படித்தேன் .... நன்றி சார்

    ReplyDelete
  6. அப்பாவை முழுமையாய் புரிந்துகொண்டபோது அவர் இல்லாமல் போனதுதான் சோகம்!

    ReplyDelete

அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்

        oooOooo முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு ...