முடிந்தவரை வரை
வரைந்து வரைந்து
வந்திருக்கிறேன்.
வானமும் வில்லும் வயல்பசுமையும்
தோகைமயில் பாடும்குயில்
பாலன்னம் பருவமான்
காரெருமை கவின்மலர்கள்
எல்லாவற்றின் நிறங்களும்
என் வண்ண ஏனக்குழிகளில்.
வரைபொருள் தேடினேன்
எதிர்நின்றது தாய்.
அன்பெனும் நிறத்தில்
பாலின் வண்ணம் சேர்த்தேன்.
தந்தைக்கென்று
செவ்வண்ண உழைப்பும்
சேராத சேமிப்பு பாசிநிறமும்
கவலைச் சேற்றின் நிறமும்.
உறவுகளை ஒன்றாக்கித்தீட்ட
உரியநிறமின்றித் திண்டாடிவிட்டு
கரிக்கோட்டால் கீறிமுடித்தேன்.
நயமிகு நண்பனை
நிறமற்ற வெறும்நீரால்
எழுதிவைத்தேன்!
ஆசானை முகம்காண
அறிவுநூல் செம்மையும்
ஆகாய நீலமும்
காலம் வெளுக்காத
கருத்துமையும்
கலந்து வரைந்தேன்.
என்னை எழுதிப்பார்க்க
உங்களிடம் நீட்டுகிறேன்
தூரிகைக்கு கைகொடுங்கள்
தும்பைவண்ணத் தாளிதுதான்.
*****-
ப.திருநாவுக்கரசு
—----------------
படம்: கரந்தை ஐஜெயக்குமார்.

This comment has been removed by the author.
ReplyDeleteஅய்யா,
ReplyDeleteஉங்கள் கவிதை ஒரு ஓவியமாக மட்டும் இல்லாமல், மனித வாழ்வின் உறவுகளையும் உணர்வுகளையும் வண்ணங்களால் உயிர்ப்பித்திருக்கும் அரிய படைப்பு.
“தாயின் அன்பு”, “தந்தையின் உழைப்பு”, “நண்பனின் வெற்றிட நெருக்கம்”, “ஆசானின் அறிவொளி” — ஒவ்வொரு வரியும் மனதைத் தொட்டது.
கடைசியில், “என்னை எழுதிப்பார்க்க உங்களிடம் நீட்டுகிறேன்” என்ற வரிகள் வாசகரையே அந்த ஓவியத்தின் ஒரு பகுதியாக மாற்றிவிட்டது.
உங்கள் எழுத்து எப்போதும் போல சிந்திக்கவும் உணரவும் செய்கிறது அய்யா. மனமார்ந்த பாராட்டுகள். 🙏
நன்றி ராஜா
Deleteஆசான்: அறிவின் செம்மையும், வானத்தின் நீலமும், மாறாத கருமையும் கொண்டு ஒரு வழிகாட்டியை வரைந்தது மிகச் சிறப்பான உருவகம்.
ReplyDeleteஉறவுகளை வரைந்த அழகு வண்ணக் கோலங்கள் வரிகளாய்
ReplyDeleteஅருமை சார் …. வாசிக்க நேரத்தை தவறவிடுகின்ற என் போன்றோற்க்கு இது ஒரு சுவை
ReplyDelete