Friday, 28 November 2025

வினாவும் கேள்வியும்


தோழமையின் வினா.. 

என் நினைவே
உனக்கில்லையா? 
என்ற 
கேள்விக்களைகள்
கண்டபடி முளைக்கின்றன. 

விதைபோடாமல்
வீரியமாக முளைத்து விடுகின்றன. 

கால்நூற்றாண்டாக
வறண்ட பாசத்தின்
வம்பிழுக்க வந்த
 கேள்வி அது! 

நினைப்பிரும்பில்
துருப்பிடிக்கவைத்த
ஈரத்தின் புதிர்க் கேள்வி அது! 

சூட்டுச்சட்டியில்
தெளித்த நீர்த்துளி
மீளப்பிறக்கும் ஆசைப்பிதற்றல் அது! 

நாள்பட ஊறிய
கள்ளின் மயக்கம் அது! 

தொலைவில் சென்ற தொடர்வண்டி
கடைசிப்பெட்டியின்
முதுகு அது! 


உறவும் பழக்கமும்
உண்மை வேடமிட்டால்
பகையின் அந்தரங்கம்
பவிசுகாட்டிவரும். 

பசையற்ற
அஞ்சல்தலை
காதல்கடிதம்
கொண்டு செல்லுவது கனவு தான். 

கேள்வியே காலம்
கடந்தபின்
பதிலும் காலமாகிவிடாதா
என்ன? 

என் நினைவு 
உன்னிடத்தில்
இத்தனைகாலம்
கேள்வியாக இருந்தபின்
நான் மறக்க
தடை ஏது? 

-ப.திருநாவுக்கரசு


8 comments:

  1. வம்பிழுக்க வரும் கேள்விகள் முளைத்துக் கொண்டேதான் இருக்கும்.
    புறந்தள்ளி முன்னேறுவோம்

    ReplyDelete
  2. நாள்பட ஊறிய கள் மயக்கம் அது
    கள் குடித்தவன் எப்படி கவனமாக பதில் சொல்லமுடியும்
    என் நினைவே உனக்கு இல்லையா? நிறைய உண்டு கொஞ்சம் தெளியட்டும்

    ReplyDelete
  3. நற்பயிரோடு சில களைகளையும் வளர்ப்பார்கள். ஏனென்றால் அந்தக் களைகள் நற்பயிரை அழிக்க வரும் பூச்சிகளை தடுக்கும். எனவே உறவுக்காக ,பாசத்திற்காக வந்த கேள்விகள்தானே?.
    தோழமையின் வினா அருமை.

    ReplyDelete
  4. வணக்கம் சார், இந்தக் கவிதை கேள்விகளின் வேதனையையும் உறவுகளின் நுட்பத்தையும் ஆழமாகப் படம் பிடித்திருக்கிறது. மிக அழகான வரிகள்!

    ReplyDelete
  5. உறவும் பழக்கமும் உண்மை வேடமிடுவது கசப்பான உண்மை

    ReplyDelete
  6. உதிர்க்கவேண்டிய இலைகளை உதிர்த்தாலும் பாதிப்பில்லை.துளிர்க்கும் தளிர்கள் இருக்கும்போது புதிய உறவுகள் தழைக்கத்தானே செய்யும்.பழையன கழித்ததாகக் கொள்வோம்.

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...