கண்டறியாதன… …
பிரும்மாண்ட
பொதுக்கூட்டம்
கலைந்தது திடலில்.
குப்பைகள் அகற்றிய
என்தோழன்
கண்டறியாதன கண்டான்.
தலைவனுக்கு மூச்சுத்தினறக்
குளிப்பாட்டிய சோப்புக்கட்டிகள்
சிதறிக் கிடந்தன.
அடுக்கு மொழிகளும் வாழ்த்துகளும்
மிதிபட்டுச்சிதறி
குற்றுயிராய்க் கிடந்தன.
எதிரியை வசைபாடி
தங்கள் தலையில் துப்பிக்கொண்ட
எச்சில் ஈரம்பட்டுக் கிடந்தது பூமி.
தாக சாந்தி தந்துவிட்டு
உடைத்துக் கொண்ட
மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த
குருதியில் குந்த அடித்துக்கொண்டன
ஈக்கள்.
மாநகர ஏமாளிகள்
சூட்டிய மலர்மகுடம்
மண்ணில் குப்புறக்கிடந்து.
கடலைப்பொட்டலக்
காகிதக்குப்பையுடன்
கண்ணீர் மகஜர்கள்
கசங்கிக்கிடந்தன.
தின்ன இரைதேடி
திடலுக்குவந்த
நாயும் குட்டியும்
தலையிலடித்துக்கொண்டு
திரும்பிச்சென்றன.
காரணம் தெரியாமல்
கழன்ற காலணிகள்
போக மனமில்லாமல்
மயங்கிக் கிடந்தன.
ஃஃஃஃஃ
ப. திருநாவுக்கரசு

வணக்கம் சார், காட்சிகளின் வழியாக மனிதப் பழக்கங்களையும் சமூகப் பார்வையையும் அழகாக சித்தரித்துள்ளீர்கள். மிக அருமையான கவிதை!
ReplyDeleteநன்றி ராஜா
Deleteஇன்றைய தமிழக யதார்த்தம்
ReplyDelete.
"தின்ன இரைதேடி
திடலுக்குவந்த
நாயும் குட்டியும்
தலையிலடித்துக்கொண்டு
திரும்பிச்சென்றன. "
ரசித்தேன்.
நன்றி அன்பு குமார்
Delete👏👏 வித்தியாச கண்ணோட்டம்
ReplyDeleteநன்றி பிரகாஷ்
Deleteஅருமையான சித்திரம். கடலைப் பொட்டல காகித குப்பையுடன் கண்ணீர் மகஜர்கள் கலங்கிக் கிடந்தன - நக்கல்
ReplyDeleteகண்ணீர் மனுக்கள் என்றாலும் பொருந்தும்
நன்றி அன்பு கருத்துக்கு
Deleteஅருமை! மனதை நெருடிய வரிகள்:
ReplyDelete"மதுப்புட்டில்கள் குத்திக் கிழித்த
குருதியில் குந்த அடித்துக்கொண்டன
ஈக்கள்"
நன்றி அன்பு ஸ்ரீதர்
Deleteஅருமையான சமூகச் சிந்தனை.
ReplyDeleteமகஜரை குப்பைத்தொட்டியில் வீசும் அதிகாரிகளும் தலைவர்களும் வாழும் இதே மண்ணில், ஒரு மனு என்பது ஆயிரம் கண்ணீர்த்துளிகளின் தொகுப்பு,
என்று மதிக்கும் அதிகாரிகளும் இருக்கிறார்கள். பின்னதற்கு எடுத்துக்காட்டு நம்முடைய மாவட்ட ஆட்சியர் திருமதி பிரியங்கா பங்கஜம் அவர்கள்.
தஞ்சை பெற்ற பேறு ஐயா
Delete"கடலைப் பொட்டலக்
ReplyDeleteகாகிதக் குப்பையுடன்
கண்ணீர் மகஜர்கள்
கசங்கிக் கிடந்தன". இந்த வரிகள் அருமை சார். பொருள் பொதிந்தவை.
சில நேரங்களில் சில உண்மைகள்
பொய்களோடு சேர்ந்து கசங்கித் தான்
கிடக்கின்றன உலகம் அறியாமல்.
ஆமாம் மேடம். நன்றிகள்.
Deleteஅன்றாடம் தூய்மைப் பணியாளர்கள் தங்கள் கடமையை செய்யும் பொழுது அவர்கள் பார்வையில் பட்ட பொருட்கள் இங்கே கடை விரிக்கப்பட்டுள்ளது
ReplyDeleteகவிதை அருவியாய் கவிஞரின்
வரிகளில் ..... வாழ்த்துகள் ஐயா.
நன்றி ஐயா
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteமுடிவுற்ற அரசியல் மேடையின் முடிவுகளை
ReplyDeleteமுகம் சுளிக்காத துப்பரவுகளை படம்பிடித்து காட்டும்
அழகு கவிதை வரிகள்; இருட்டில் தெரியாத இயல்பை
வெளிச்சமாய் காட்டும் கவிதை விளக்கு
அருமை அய்யா !!
நன்றி தம்பி
Deleteகவிஞரின் மனம் யாருக்குவரும்! துப்புறவாளரை என் தோழன் என்கிறாரே.பொதுக்கூட்டத்தினால் விளைந்த பயன் என்ன என்பதை விளக்கமாகக் கூறிவிட்டார்.(எச்சமெல்லாம் குப்பைதானோ)
ReplyDeleteநன்றிங்க தோழர்
Deleteஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்களும் இருக்கத்தான் செய்வார்கள்!
Deleteகாலக்கண்ணாடியாய் மிளிர்கிறீர்கள்! பாராட்டுகளும் வாழ்த்துகளும். அன்புடன் அப்துல் ரவூஃப்
நன்றிங்க
Deleteஇன்றைய சமூகத்தைத் தோலுரித்து காட்டியுள்ளீர்கள். நன்றி.
ReplyDeleteகுப்பைகளுக்குள் வெளியில் தெரியாத அவலங்களை படம் பிடித்த அய்யா கேமிரா
ReplyDelete