Thursday, 23 October 2025

பூஞ்சை


பூஞ்சை
**********
வகை வகையாய்
பூஞ்சைகளின்
பெருக்கம். 

பயிர்களைத் தொற்றி
பண்டங்களைக் கெடுத்து
வாசம் செய்கின்றன
நம்மிடமும்! 

கல்லான நட்பும்
நயவஞ்சகப்
பூஞ்சை உளியால்
சிதறிப் போனது! 

காதலியை
'உயிரே' என்ற
நாளான வார்த்தை
பூஞ்சையாகி
பொட்டை அழித்தது! 


வெற்றிக்கு 
மாலை போட்டு
தோல்வியில் விலக்கும்
கண்கெட்ட கட்சிப் பூஞ்சை! 

அமுதத் 
தமிழ்ச் சொற்களில்
அறிவுகெட்ட பூஞ்சைகள் 
'அப்பாடக்கர்கள்'
'வச்சுசெய்வதால்'
பாதாளச் சாக்கடையில் பந்திவிரிக்கின்றன! 

குடும்ப ஈரத்தில்
வளர்ந்த பூஞ்சை
நேசம்திரித்து
பேச்சை அழித்து
முகத்தில் விழிக்காது
முறித்துப் போட்டது! 

ஆயிரம்காலப்
பயிர்முடிச்சை
அரைமணிக்குள்
அவிழ்த்து எறிகிறது
மணவிலக்கு எனும்
மானம் கெட்ட பூஞ்சை! 

+++++++++++++

ப. திருநாவுக்கரசு




14 comments:

  1. வாழ்வின் எதார்த்தம்,, கசப்பான உண்மைகளை பூஞ்சைகளை உவமைப்படுத்தி விளக்கி இருக்கிறீர்கள்..அற்புதம்.

    ReplyDelete
  2. பூஞ்சை கவிதை நம் சமூகத்தின் கண்ணாடி உண்மையை இவ்வளவு நுட்பமாக சொல்வது அரிது

    ReplyDelete
  3. நயவஞ்சக , பச்சோந்தி மனிதர்களையும், புரிதல் இல்லாமல் அவசர முடிவு எடுத்து விட்டு பிறகு நிதானமாக கவலைப்படும் மனிதர்களின் அவலத்தையும் நுட்பமாகப் பேசுகிறது இந்தக் கவிதை.

    ReplyDelete
  4. வணக்கம் சார், மிக ஆழமான கவிதை. ஒவ்வொரு வரியும் சமூக உண்மையையும் மனித இயல்பையும் அழகாக வெளிப்படுத்துகிறது. அருமை!

    ReplyDelete
  5. உண்மை
    நட்பெனும் போர்வையிலும், உறவெனும் வடிவத்திலும், பூஞ்சை மனிதர்கள் வாழும் பூமி இது

    ReplyDelete
  6. அங்கிங்கு என அலைந்து அழித்த பூஞ்சை ஆயிரம் காலத்து பயிரிலும் வலி தரும்

    ReplyDelete
  7. பூஞ்சை எனும் தலைப்பு கவனத்தை ஈர்த்தது. ஒரு பொருள் பூசானம் பிடித்துவிட்டது எனில் கெட்டுவிட்டது என்பது பொருள். மனிதர்களுக்கு அப்பொருள் கெட்டு விட்டது. காரணம் அதை பயன்படுத்த முடியாது. ஆனால் இயற்கையின் கண்களில் அப்பொருள் சிதைகிறது என்பது பொருள். மனிதர்களின் அத்தனை பொருள்களையும் சிதைக்கும் அரும்பணியை செய்கிறது இந்த பூஞ்சைகள். மண்ணில் பூஞ்சைகள் தான் மட்கச் செய்கின்றன. அவை மண்ணை வளப்படுத்தும் மகத்தான பணிகளை செய்கின்றன. பூஞ்சைகள் போற்றுதலுக்கு உரியன. பொல்லாதவை அல்ல பூஞ்சைகள். நிற்க.

    வகைவகையாய் பூஞ்சைகளின் பெருக்கம். பெருகட்டுமே! வகைவகையாய் மட்க வேண்டியவைகள் உளவே.

    பயிர்களைத் தொற்றி பண்டங்களை ஆக்கும் பூஞ்சைகளும் உளவே. பெனிசிலின் எனும் நுண்ணுயிர் எதிர்ப்பியை உற்பத்தி செய்வது பூஞ்சையே. நாம் உண்ணும் ரொட்டிகளின் (bread) மிருதுத் தன்மைக்கு காரணமான ஈஸ்ட் பூஞ்சையின் மூலமே கிடைக்கிறது. தொழிற்சலைகளில் பயன்படுத்தப்படும் பல நொதிகள் பூஞ்சைகள் மூலமே உற்பத்தி செய்யப்படுகின்றன. பூஞ்சைகள் இல்லா வாழ்வில் மனிதர்கள் வாழ முடியாது. பூஞ்சைகள் உயிர் பன்மயத்தின் அடையாளம்.

    பூஞ்சைகள் ஈரமிருந்தால் மட்டுமே வளரும். ஈரமுள்ள நெஞ்சங்கள் பிரியாதே. ஈரமில்லா நெஞ்சங்களுக்கு பூஞ்சை என்ன செய்யும்?

    உயிருள்ள எதையும் பூஞ்சைகள் கொல்லாது. ஈரமும் கதகதப்பும் இருந்தால் தொற்றும். பற்றும். வெப்பம் கூடினால் விலகிவிடும். அவ்வளவே. உயிரற்றவைகளை மட்டுமே சிதைக்கும். அவைகள் சிதைக்கப்பட வேண்டியவை தானே!

    ஐயா இது எசப்பாட்டு. தவறு இருந்தால் மன்னிக்கவும். வணங்குகிறேன். நன்றி!🙏❤️

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க டாக்டர். நிறைய அறிகிறேன்.

      Delete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...