Saturday, 18 October 2025

 


போகாது… வரும்! 

எழுதப்படாத

சுய சரித்திர வரிகளுக்கு

நினைவாற்றல் அதிகம்! 


தூங்கையில்

எழுப்பி கதைசொல்லும்

சாமக்கோழி அது! 


தப்பான விடைக்காக

5ஏ டீச்சர் 

முருகனைக்

குட்ட சொன்னதில்

விழுந்த தலைமேடு 

படுகிறது தொடுகையில்! 


சேர்ந்துவந்த சேகர்

குச்சி ஐஸ் வாங்கி

தனியாகப் போய் உறிஞ்சியது 

இன்னும் கரையாமல் 

நிற்கிறது! 


டீச்சர்கொடுத்த சுதந்திரநாள்

'பெப்பர்மன்ட்'மிட்டாய்கள்

அம்மா பார்க்கும் முன்

தடுக்கிச் சிதறி

கிடக்கின்றன இன்னும்

எறும்பு ஏறாமல்! 


பட்டாசுக்கு பணமில்லாமல்

பக்கத்து வீட்டுப் பிள்ளை

மத்தாப்புகளையே

பார்த்துக்கச் சொன்ன

அப்பாவின் ஒளிமங்கிய

சிரிப்பு மறையவில்லை! 


ஒரு நள்ளிரவு

சாக்குருவி ஓசைக்கு

விழித்த காதுகளில்

அம்மாவிடம் அப்பாமுனகிய

“எது கேட்டும் வாங்கித்

தரமுடியவில்லையே”

கேட்டது ! 


கோழி கூவிவிட்டது

பள்ளிக்கூடம் போக

கட்டணமில்லா 

கட்டை வண்டி கிடைத்தது! 


ஃஃஃஃஃஃஃஃஃஃ

ப. திருநாவுக்கரசு



14 comments:

  1. மலர்ந்த நினைவுகளில் மணம் வீசுகின்றது. வாழ்த்துகள்!

    ReplyDelete
  2. So nostalgic! Thanks appa for bringing back those golden memories.🙏🏻😇

    ReplyDelete
  3. போகாது அடிக்கடி வந்து செல்லும் நினைவு அலைகள்.

    ReplyDelete
  4. எதுவும் கேட்டு வாங்கித் தரமுடியவில்லை என்ற ஏக்கம் நடுத்தர குடும்பத்து ப்பாக்களின் வலி அய்யா

    ReplyDelete
  5. வணக்கம் சார், உங்கள் வரிகள் எப்போதும் சிறுவயது நினைவுகளை உயிரோடு கொண்டு வருகின்றன. மிக அழகாக உள்ளது.

    ReplyDelete
  6. எது கேட்டும் வாங்கித்

    தரமுடியவில்லையே”

    கேட்டது !
    பெரும்பாலான அப்பாக்களின் நினைவலைகளில் என்றுமிருக்கும் இறக்கி வைக்க இயலாத நெஞ்சகத்து வலி

    ReplyDelete
  7. 11 அ ஆசிரியர் தங்களின் ஒற்றைக் கால் நிற்றலில்
    பயின்ற வள்ளுவம், திருக்குறலினை பார்க்கும் போதும்
    கேட்கும் போதும் நினைவுகளை மனதில் ஒற்றை காலில்
    நிறுத்திவிட்டு போகும் நன்றி ஆசிரிய பெருந்தகையே.தாங்கள் எங்களுக்கு இறைவன் தந்த வரம்.நன்றி....

    ReplyDelete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. பசுமரத்தாணி என்பது இதுதான் போலும். கடற்கரைமணலில் நீர் காலில்பட நிற்கும்போது கடல்நீர் காலில் மோதிவிட்டு திரும்புகிறதே என நினைக்கும்போதே மீண்டும் வந்து காலைத்தடவும்.அதுபோல சிறுவயது நினைவலைகள் மீண்டும் மீண்டும் வந்து மோதிக்கொண்டே இருக்கும்;போகாது.வயது ஆக ஆக இந்த அலைகள் அதிகமாக வந்து வந்து சூழ்கின்றன.. தங்களின் பதிவுக்குப் பின்னரே இந்த உண்மையை உணர்ந்தேன்.நன்றி தோழர்.

    ReplyDelete
  10. எங்களையும் பழைய நினைவுகளை தேட வைத்து விட்டீர்கள் ஐயா... நன்றி

    ReplyDelete
  11. "நாம் நினைவில் வைத்திருக்கும் வரை எதுவும் நமக்கு உண்மையில் தொலைந்து போவதில்லை."

    ReplyDelete
  12. கவிதை படிக்கும் படிக்கும் பொழுது மனது வலிக்கிறது. ஐயா அவர்கள் உண்மையான வாழ்க்கை அனுபவத்தை எழுதினீர்களோ? 😪😪😪

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...