Sunday, 28 June 2026

அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்


        oooOooo

முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள  சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு வரலாற்று நூலின் பக்கங்களிலிருந்து  சொல்லமுடியாத பெயர்தெரியாத ஓர் உணர்வு நம் மனதை கனக்கவைக்கிறது. காரணம், பீடும் பெருமையும் கொண்டிருந்த ஓர் மன்னர்குலமோ மத நிறுவனமோ அல்லது மற்ற ஏதோ ஓர் அமைப்போ காலவோட்டத்தில் பலகாரணிகளால் தன் நிலை இழந்து மறைவைத் தொட்டும் தொடாமலும் விட்டுப்போன அவற்றின் சுவடுகள் ஒரு சரித்திரத்தை அதன் பல நூற்றாண்டுகளின் வீழ்ச்சியை நாம் நூல் வாசிக்கும் சிறுபொழுதில் நம்முள் இறக்கிவைத்துவிடுகிறது.

பரதகண்ட பூமிப்பரப்பில் பொ.ஆ.முன் ஐந்தாம்  நூற்றாண்டில்  கவுதமபுத்தரால் வட இந்தியாவில் தோற்றுவிக்கப்பட்ட புத்தமதம் தென்னிந்தியாவில்-தமிழகத்தில் இருந்தும் பின் மறைந்துபோனது. அது அக்கம்பக்க நாடுகளில் பரவியிருக்கிறது. அந்த வரலாற்றுப் பெருவெளியைப் பார்வையிட்டு அதனுள் சோழநாட்டை மட்டும் எல்லைகாட்டி  அதுபற்றி வாசித்து அறியப்பட்ட, அதனுள் தேடிக்கிடைத்த ஆதாரங்கள் மெய்ப்பிக்க உதவும் அயல்நாட்டவர் குறிப்புகள் என்று ஒல்லும் வகையிலெல்லாம் உழைத்து மெய்ம்மை குறையாத “சோழநாட்டில் பெளத்தம்” என்ற அரிய பலரும் அறியவேண்டிய நூலை சரித்திர ஆய்வுப்பட்டியலுக்குள் அளித்திருக்கிறார் முனைவர் பா.ஜம்புலிங்கம்.

இந்த நூல் அதன் ஆய்வு எல்லையால் குறுகியதுபோல் தோன்றலாம். ஆனால் அது சோழநாட்டு எல்லை. அதனுள் இன்று பிரிக்கப்பட்டுள்ள ஒன்பது தனிமாவட்டங்கள் உள்ளன.எனவே தேடலில் நடந்த,அலைந்த,சுற்றிய,பயணித்த பாடுகளை அறியவே மலைப்பு தருகிறது. அந்த வரலாற்றின் அடையாளங்கள் காணப்பட்ட விதத்திற்கும், கண்டறியப்பட்ட முறைக்கும், நூலாசிரியரின் பல்லாண்டுகாலத் தேடலுக்கும் கடும் உழைப்புக்கும் எல்லையில்லை. அந்தக் கடும் முயற்சியிலும்  ஆய்வுநெறி அறம் ஒளிர்கிறது, ஆய்வு நுணுக்கம் விரித்துக் காட்டப்படுகிறது,  உள்ளவாறு காட்டும் ஒளிப்படங்கள் உறுதுணைபுரிகின்றன. எல்லாவற்றுக்கும் மேலாக தடயங்கள் இழப்பில் சோகமும் கிடைப்பில் பூரிப்பும் எண்ணிக்கையால் பெருமையும் கலந்த அரிதான வரலாற்று உணர்வுபொதிந்த எழுத்தாகவும் உள்ளது. பேராசிரியர் கு.வெ.பாலசுப்பிரமணியன் அவர்களின் ஆய்வியல் நெறிகள் நூலில் ஆய்வாளருக்குரிய தகுதிகள் பத்தினைக் குறிப்பிடுகிறார்கள். இந்நூலாசிரியர் அத்தகுதிகள் அனைத்தையும் பெற்றிருப்பதை அறியமுடிகிறது.

கிடைக்கும் ஆதாரங்கள் எல்லாம் தெளிவும் முழுமையும்  கொண்டிருப்பது வரலாற்று ஆய்வில் அரிது. மதப்போர்களில் தாக்கப்பட்டு, உடைந்து, உறுப்புகள் சிதைந்து, கவனிப்பாரற்று, மண்மூடிப்போய், களவாடப்பட்டு, கடத்தப்பட்டு பார்வைக்கு உதவாத சிற்ப ஆதாரங்களையும் மெய்ப்பிக்க எடுத்திருக்கும் நூலாசிரியர் முயற்சி கடுமையானதாகும். சோழ நாட்டில் நூற்றுக்கணக்கான ஊர்களுக்குச் சென்று திரட்டப்பட்டவற்றில் பல அறிஞர்கள் கண்டு சொன்னவற்றுடன் தாமே களப்பணியில்  19 புத்தர் சிலைகளையும், ஒரு நாகப்பட்டின புத்தர் செப்புத்திருமேனியையும் கண்டுபிடித்திருக்கிறார். வரலாற்று ஆய்வில் எத்தனைச் சிறு சேதாரச்சில்லும் உதவும் என்பதற்கு இவர் பக்கம் 151இல் காட்டியிருக்கும் வையச்சேரிபுத்தர் சிலை. அந்த ஊரின் குளக்கரையில் இருந்ததாகக்கூறப்பட்ட சுமார் ஒரு அடி உயரமுள்ள சிலையின் தலைப்பகுதி. வரலாற்றறிஞர் திரு அய்யம்பேட்டை செல்வராஜ் அனுப்பிய அதன் ஒளிப்படத்தை வைத்து அங்குச் சென்று அதனைத் தேடி களத்திற்குச் சென்று அது அவ்விடத்தில் காணப்படவில்லை என்று உறுதிசெய்கிறார். அத்தனை நுணுக்கமான ஆய்வுப்பார்வை அவரிடம்.

ஆய்வுக்கு உதவிய துறைகளை ஒருவரை அல்லது ஒன்றைக்கூட விட்டுவிடாமல் பட்டியலிட்டு நன்றியுரைத்த பாங்கும் அவர்கள் பெயர் அட்டவணையும், இணைப்புகளும், தெளிவும், தரவுகளை பாதுகாத்திருக்கும் பொறுப்பும் என்று வரிசையாகக் கூறி பாராட்டவைக்கிறார் நூலாசிரியர்.

மேலாக இந்த அரிய நூல், தங்கப் பேழையில் உள்ள முத்துமாலையை ஒத்த வனப்பும் கட்டும்  கொண்ட நூலாக வெளிவந்திருப்பது தமிழ் ஆய்வுநூல் ஒன்று எந்த நாட்டு நூலகத்திலும் இடம்பெறும் சிறப்பைப்பெறுகிறது.

பிறரால் தொடமுடியாத அரிய பணியை அறிந்தே முழுமனத்துடன் ஈடுபாட்டுடன் அறம்தவறாமல் ஆற்றியிருக்கும் முனவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் மேலும் சிறந்தபணிகள் ஆற்றிட வாசித்தறிந்த ஒருவனாக வாழ்த்துகிறேன்.

ப.திருநாவுக்கரசு




4 comments:

  1. என்னுடைய சோழ நாட்டில் பௌத்தம் நூலைப் பற்றி ஆழமான, செறிவான மதிப்புரையை வழங்கியமைக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி. உங்களுடைய மதிப்பீடு என்னை மென்மேலும் ஆய்வுக்களத்தில் பயணிக்கத் துணைபுரிய உதவும்.

    ReplyDelete
  2. முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களின் உரையைக்கேட்டபோதேஅவர்ஆய்வின் வுவீச்சம் தெரிந்தது.
    பாராட்டுக்குரிய உழைப்பு. வையச்சேரி என்று அவர் குறிப்பிடும் ஊர் எந்த மாவட்டத்தில் உள்ளது என்று தெரியவில்லை.
    கும்பகோணம் சாலையில் நெடார் தாண்டியவுடன் வையச்சேரி என்று ஓர் ஊர் உள்ளது.

    ReplyDelete
    Replies
    1. தாங்கள் குறிப்பிடும் ஊர்தான் அது

      Delete

அரிய உழைப்பில் வந்த ஆய்வு நூல்

        oooOooo முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள் எழுதியுள்ள   சோழநாட்டில் பௌத்தம் எனும் ஆய்வுநூல் கிடைக்கப்பெற்று படித்து முடித்தபின், ஒரு ...