Monday, 15 April 2024

வாசலில் நின்று வரவேற்கிறேன்.....





என் பேரன்பிற்குரிய  தமிழ்ச்சுற்றத்திற்கு அடியேனின் 

பணிவான வணக்கம்.

ஒரு வலைப்பூவைத் தொடங்க எண்ணி தள்ளித் தள்ளிக்கொண்டு வந்துவிட்டேன். கேணிவெட்டச் சென்றவன் எதையும் செய்யாமல் வெறும்கையோடு வந்த கதையாக வலைப்பூ தொடங்கும் கதை ஆகிப்போனது.

எனக்கு மிகவும் பிடித்த வலைப்பூ என் அன்பு மைத்துனர் கரந்தை ஜெயக்குமாரின் வலைப்பூ. மிகவும் அர்த்தம் உள்ளதும் சேவைகொண்டதும் பொருள்நோக்கமின்றி தமிழ்-சமுதாய விபரங்களை தஞ்சைக்கு மட்டுமன்றி உலகளவில் கொண்டுசேர்க்கும் சிறந்த நோக்கம் கொண்டதும் ஆகும். என்னையும் பலமுறை தூண்டியும் சுணங்கி விடாமல் தொடங்க ஊக்கம் தருகிறார். "இலக்கிய முற்றம் " இதன் முதல் பக்கத்தையும் தவறுதலாக நீக்கிக் குழப்பிவிட்டேன். அறிந்ததும் "மீண்டும் புதுப்பித்துப் போடுங்கள் அத்தான்"  என்று மலரவைத்துவிட்டார்.

என் வலைப்பூ சாதாரணமாக நாம் டீ குடிக்கையில் பேசிக்கொள்ள உதவும் தகவல்கள்போல் மிகவும் லேசானதாக இருக்க விரும்புகிறேன்.  இன்றைய கருத்துலகம் மிக விரிவானது,ஆழமானது, பரவலானது. இது யாருக்கும் தெரியாது என்று எதையும் சட்டெனக் கூறிவிட முடியாது."சார் அதில் அப்படி வராது" என்று அசரீரிகள் கண்டிப்பாகக் கேட்கும் காலம். எனவே என் வலைப்பூ அபூர்வமாக இருக்காது. நம் எளிமையான உரையாடல் தன்மைகொண்டுதானிருக்கும்.

நானும் சமூகத்தில் ஒருத்தன். எனக்கென்றும் சில கருத்துச் சாயல்கள் இருக்கும். என் நியாயத்தில் பல அறநெறிகளும் நடைமுறைகளும் இருக்கும்.

அதை இப்படி எழுதினேன்:


  குறலின்குரலே குறைவிலாவழி என்றும்

வள்ளலார்வழியே வழிபடும் நெறிஎன்றும்

தந்தைபெரியார் தந்தநல் அறிவினால்

தன்மானத் தகுதிகொள் தரம்மிகு நெறிஎன்றும்

முத்தமிழறிஞரின் முறைமிகு பொதுநெறி

முன்னேற்றம் தருகின்ற முறையான வழிஎன்றும்

ஏசுபிரான் உரைகளில் ஏற்றவை உண்டென்றும்

நாயகம்நபிகளின் நயவுரை நடத்தலில்

நன்மைகள் கூடிடும் நலம்பல மிகதரும்

என்றிவை ஒன்றாகி நன்றாகி நடப்பதே என்வழி!


இனி வரும் பூக்களை வாசித்து ஒரு சிநேகம் பொதிந்த இசைவுதர அன்புடன் வேண்டுகிறேன்.

தங்கள்

ப.திருநாவுக்கரசு












 

6 comments:

  1. ஆகா, வலைப்பூவில் தங்களைக் கண்டு மகிழ்ந்தேன்.
    தொடர்ந்து எழுதுங்கள் அத்தான்.
    தங்களின் எழுத்தோவியத்தைக் காண, கண்டு மகிழுக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  2. மிகவும் நன்றிங்க அன்பு குமார். முதல் முகமன் பெறும் முதல் ஊக்கமும் உங்களால்.

    ReplyDelete
  3. உள்ளத்தில் உள்ளதே கவிதை.
    ஆனால் இது இதயக்கவிதை.தொடர்க! இலக்குடன் இலக்கியநோக்கில். காசி.வீராசாமி சிங்கை/ குடந்தை

    ReplyDelete
    Replies
    1. வாசித்து அளிக்கும் மகிழ்ந்துரைக்கும் அன்பிற்கும் நன்றி திரு வீரா.

      Delete
  4. சிறப்பான தொடக்கம். அருமை ஐயா, வாழ்த்துகள் 💐💐💐

    ReplyDelete

  முடிந்தவரை வரை   வரைந்து வரைந்து வந்திருக்கிறேன். வானமும் வில்லும் வயல்பசுமையும் தோகைமயில் பாடும்குயில் பாலன்னம் பருவமான் காரெருமை கவின்மல...